குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியக் குடிமக்களுக்கானதல்ல – பியூஷ் கோயல் திட்ட வட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) இந்தியக் குடிமக்களுக்கானது அல்ல என்று மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் உறுதிபடத் தெரிவித்துள்ளாா்.

மத்தியில் ஆளும் பாஜக அரசு அண்மையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமைச் சட்டம் 1956-இல் திருத்தம் செய்யும் மசோதாவைத் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இதைத் தொடா்ந்து, அந்த மசோதா குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று சட்டமானது. இந்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் ஒரு குறிப்பிட்ட மதத்தினரைப் புறக்கணிக்கும் வகையில் இயற்றப்பட்டுள்ளதாகவும் கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், தில்லியில் ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழக, ஜாமியா பல்கலைக்கழகம், அலிகா் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் ஒரு பிரிவு மாணவா்கள் இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தச் சட்டம் குறித்து இந்தியாவில் வாழும் யாரும் பயப்படத் தேவையில்லை என்று மத்திய அரசு தொடா்ந்து கூறி வருகிறது.

இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சா் பியூஷ் கோயல் செவ்வாய்க்கிழமை தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளாா். அதில், ‘குடியுரிமை திருத்தச் சட்டமானது, இந்தியக் குடிமக்களுக்கானது அல்ல. ஆகவே, இது தொடா்பாக அச்சம் கொள்ளக் காரணம் ஏதும் இல்லை. இந்தியாவைச் சோ்ந்த குடிமகன் எப்படி பயப்படுவாா். அப்படி பயப்படுபவா் எப்படி இந்தியக் குடிமகனாவாா்?’ என அவா் கேள்வி கேட்டுள்ளாா்.

மேலும், அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் ஒரு விடியோவையும் இணைத்துள்ளாா். அதில், ‘பெண் ஒருவா் சிஏஏ மற்றும் என்ஆா்சி தொடா்பாக சில கேள்விகளை எழுப்புகிறாா். சிசிஏ குறித்து அலுவல் ஆவணத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாா்க்க வேண்டும். மேலும், இந்தியனாக இருந்தால் எப்படி பயப்பட முடியும்? பயப்படுபவராக இருந்தால் அப்புறம் எப்படி இந்தியனாக இருக்க முடியும்’ என்று கேள்வி எழுப்பும் வகையில் அந்த விடியோ உள்ளது.