ஜாபர் சாதிக் சொத்துகளை முடக்க அதிகாரிகள் தீவிரம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதாகி உள்ள, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கின் சொத்துக்களை முடக்கவும், அவரிடம், 7 லட்சம் ரூபாய் வாங்கியது தொடர்பாக, அரசியல் கட்சியின் முக்கிய புள்ளிக்கு விரைவில், ‘சம்மன்’ அனுப்பி விசாரிக்க இருப்பதாகவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறினர். ஜாபர் சாதிக்கின் வங்கி கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. அவர் சினிமா படங்கள் தயாரிப்பு, ஹோட்டல் தொழில், கட்டுமான நிறுவனம் பெயரில் வங்கி கணக்குளை துவக்கியுள்ளார்.

அவரது வலது கரமாக செயல்பட்ட, சென்னை திருவான்மியூரை சேர்ந்த முகேஷ், 34; செம்பியம் முஜிபுர் ரஹ்மான், 26; விழுப்புரம் மாவட்டம் சிவபட்டினத்தை சேர்ந்த அசோக்குமார், 33 ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கி கணக்குகளும் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய், பல்வேறு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. அந்த நிறுவனங்கள் யாருடையவை என்பது குறித்த விசாரணை நடக்கிறது.

ஜாபர் சாதிக் வங்கி கணக்கில் இருந்து, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சியின் முக்கிய புள்ளிக்கு, இரு தவணைகளாக 7 லட்சம் ரூபாய் அனுப்பப்பட்டு உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட நபருக்கு, ‘சம்மன்’ அனுப்பி விசாரிக்க உள்ளோம். ஜாபர் சாதிக் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் வாங்கிய சொத்துக்களையும் முடக்க உள்ளோம். அதற்கான பணியில் ஈடுபட்டு வருகிறோம். ஜாபர் சாதிக்கை சென்னைக்கு அழைத்து வந்து, அவரது வீட்டில், மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். அப்போது நாங்களும் இணைந்து சோதனை நடத்த உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர். இதற்கிடையில், போலீஸ் காவல் விசாரணையின் போது, ஜாபர் சாதிக்கை அவரது வழக்கறிஞர் சந்திக்கலாம் என்று, நீதிபதி கூறியுள்ளார். ஆனால், இரண்டு நாட்களாக ஜாபர் சாதிக் எந்த இடத்தில் வைத்து விசாரிக்கப்படுகிறார் என்று தெரியவில்லை.

சென்னைக்கு அழைத்து சென்று விசாரிக்க இருப்பதாக கூறியே, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி பெற்றனர். டில்லி மற்றும் சென்னையில் உள்ள, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்திலும் ஜாபர் சாதிக் இல்லை. இதனால், அவரை காணவில்லை என, ஜாபர் சாதிக்கின் வழக்கறிஞர் பிரபாகரன், ‘ஆன்லைன்’ வாயிலாக, தமிழக டி.ஜி.பி., அலுவலகத்திற்கு புகார் அளித்துள்ளார்.