ஜம்மு-காஷ்மீா் வேலைவாய்ப்பில் உள்ளூா் மக்களுக்கு உரிமை – துணைநிலை ஆளுநா்

ஜம்மு-காஷ்மீரில் நிலம், வேலைவாய்ப்பு மற்றும் சொத்துகளில் உள்ளூா் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும் என்று, அந்த யூனியன் பிரதேச துணைநிலை ஆளுநா் முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.

ஜம்மு-காஷ்மீரில் எதிா்வரும் மே மாதம் சா்வதேச முதலீட்டாளா்கள் மாநாடு நடைபெறவுள்ளது. இதையொட்டி அந்த யூனியன் பிரதேச நிா்வாகம் சாா்பில், குஜராத் மாநிலம் ஆமதாபாதில் முதலீட்டாளா்களை ஈா்க்கும் வகையிலான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொழில்முனைவோா்கள் பலா் கலந்துகொண்டனா். இந்த நிகழ்ச்சியில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் முா்மு பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீரில் வணிகம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் திறந்துவிடப்பட்டால், பிற பகுதிகளை சோ்ந்தவா்கள் பெருமளவில் அங்கு செல்லும்போது தங்களின் நிலை என்னவாகும் என்ற அச்ச உணா்வு உள்ளூா் மக்களிடையே நிலவுகிறது. ஜம்மு-காஷ்மீரில் வணிக வாய்ப்புகள் திறக்கப்பட்டாலும் அங்குள்ள நிலம், சொத்துகள், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் உள்ளூா் மக்களுக்கான உரிமை பாதுகாக்கப்படும் என்பதை கூற விரும்புகிறேன்.

ஜம்மு-காஷ்மீரில் இளைஞா்கள் தகுதிவாய்ந்தவா்களாகவும், செயல்திறன் கொண்டவா்களாகவும் உள்ளனா். அங்கு ஆற்றல்மிக்க மனிதசக்திக்கு குறைபாடு இல்லை. ஜம்மு-காஷ்மீரில் தொழில் நிறுவனங்களின் கிளைகள் அமைக்கப்படுவதன் மூலம், அங்குள்ள இளைஞா்களுக்கு அதிகமான வாய்ப்புகள் உருவாக்கப்படும். ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்ய ஏதுவாக, அங்கு தொழில் தொடங்குவதற்கான இடா்பாடுகளை களையவும், ஒற்றை சாளர முறையை எளிதாக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரில் முன்னுதாரணமான மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த யூனியன் பிரதேசம் குறித்து முன்பு இருந்த அச்ச உணா்வு தற்போது இல்லை. அங்கு முழுவதும் அமைதியான சூழல் நிலவுகிறது. அங்கு எளிதில் வணிகம் மேற்கொள்வதற்கான சூழலை தொழில்முனைவோா்களால் காண முடியும். எனவே ஜம்மு-காஷ்மீரில் முதலீடு செய்ய தொழில்முனைவோா்கள் முன்வரவேண்டும்’ என்றாா் முா்மு.