ஜம்மு – காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் உதயம்

நாட்டில் இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக ஜம்மு – காஷ்மீர் லடாக் ஆகியவை உருவாகின. இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநில கவர்னரின் ஆலோசகராக இருந்த விஜயகுமார் ஐ.பி.எஸ். ஓய்வு பெற்றார்.

ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. மேலும் ஜம்மு – காஷ்மீர் மாநிலம் ஜம்மு – காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படுவதாகவும் அறிவித்தது. இரண்டு யூனியன் பிரதேசங்க ளும் அக்டோபர் 31ம் தேதி செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இரண்டு யூனியன் பிரதேசங்களும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அமலுக்கு வந்தன.ஜம்மு – காஷ்மீர் யூனியன் பிரதேச கவர்னராக ஜி.சி.முர்முவும், லடாக் யூனியன் பிரதேச கவர்னராக ஆர்.கே.மாத்துாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்; இருவரும் இன்று பதவியேற்கின்றனர். ஜம்மு – காஷ்மீர் கவர்னராக இருந்த சத்யபால் மாலிக், கோவா கவர்னராக மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த 2004ல் ஜம்மு – காஷ்மீர் கவர்னராக என்.என்.வோரா இருந்த போது அவரது ஆலோசகராக தமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் 67, நியமிக்கப்பட்டார். பின் கவர்னராக சத்யபால் மாலிக் பதவியேற்ற போதும் அவரது ஆலோசகராக விஜயகுமார் பணியாற்றி வந்தார். இந்நிலையில் ஜம்மு – காஷ்மீர் மாநிலம்2 யூனியன் பிரதேசங்களாக உருவானதையடுத்து கவர்னரின் ஆலோசகர் பதவியிலிருந்து விஜயகுமார் நேற்று ஓய்வு பெற்றார்.