சொகுசு வீடுகள் விற்பனை: சென்னையில் 143 சதவீதம் அதிகரிப்பு

சென்னையில், ஆடம்பர வீடுகளின் விற்பனை, கடந்த ஆறு மாதங்களில், 143 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான ‘அனராக்’ தெரிவித்து உள்ளது.

சென்னை மட்டுமின்றி; நாட்டின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும், இக்காலகட்டத்தில், 1.5 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலை கொண்ட சொகுசு வீடுகள் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளது. ஏழு முக்கிய நகரங்களில், கடந்த ஆண்டில், இதே மதிப்பீட்டு காலத்தில், 39,300 சொகுசு வீடுகள் விற்பனையாகி இருந்த நிலையில், நடப்பாண்டில் 84,400 வீடுகளாக அதிகரித்து உள்ளன.
நாட்டின் ஏழு முக்கிய நகரங்களில், நடப்பாண்டின் முதல் ஒன்பது மாதங்களில், மொத்தம் 3.49 லட்சம் வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில், சொகுசு வீடுகளின் பங்களிப்பு, 24 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இது 14 சதவீதமாக இருந்தது கொரோனா தொற்றுக்கு பின், மக்களிடையே சொந்தமாக வீடு தேவை என்ற கருத்து வலுப்பெற்றதுடன், பெரிய அளவிலான வீடுகளையும் விரும்ப துவங்கி உள்ளனர். இதன் காரணமாக ஆடம்பர வீடுகளின் தேவை அதிகரித்து விற்பனை உயர்ந்துள்ளது என, அனராக் தெரிவித்துஉள்ளது.