சேவாபாரதியின் சமூகத் திருமண வைபவம்

கடந்த சில ஆண்டுகளாக, சமூகத் திருமணங்கள் எனப்படும் வெகுஜன திருமண நிகழ்ச்சிகளில் நிறைய நேர்மறையான மாற்றங்கள் காணப்படுகின்றன. சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு தொண்டாற்றி வரும் சேவாபாரதி, ஒருபுறம், புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரின் சமூக மேம்பாட்டிற்காக தொடர்ந்து பணியாற்றி வருகிறது, மறுபுறம், இந்த சமுதாயத்தை தன்னிறைவுபடுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இதற்கு மத்தியில் ஒரு வெகுஜன திருமண நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இங்கு வரும் திருமண விண்ணப்பங்களின் எண்ணிக்கை இதற்காக ஏற்பாடு செய்யப்படும் இடங்களின் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அவ்வகையில், ஜனவரி 26ம் தேதி, குடியரசு தினம் மற்றும் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, டெல்லியில் 16 வெவ்வேறு இடங்களில் மொத்தம் 100 சமூக திருமண நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. கடந்த 20 ஆண்டுகளாக, சேவாபாரதி தொடர்ந்து இதுபோன்ற திருமண நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது, இதில் 1,700க்கும் மேற்பட்ட திருமணங்கள் இதுவரை நடைபெற்றுள்ளன.

சேவாபாரதி டெல்லியின் பொதுச்செயலாளர் சுஷில் குப்தா இதுகுறித்து கூறுகையில், “ஜாதி, மொழி, பிரதேசம், மதம், உயர்ந்தவர், ஏழை, பணக்காரர் என பலவற்றின் பெயரால் சிதறிக் கிடக்கும் சமுதாயத்தை ஒன்றிணைக்கும் முயற்சியின் பெயரே சேவாபாரதி. ஒருபுறம் புறக்கணிக்கப்பட்ட வகுப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. மறுபுறம், ஒரு பொறுப்பான மற்றும் பண்பட்ட வளமான சமுதாயமும் இங்கு உள்ளது. இந்த இரண்டிற்கும் இடையே உள்ள இணைப்பின் மற்றொரு பெயர் தான் சேவாபாரதி. கல்வி, சுகாதாரம், தன்னம்பிக்கை மற்றும் விழுமியங்கள் மூலம், இன்று சேவை செய்பவர்கள் நாளைய சேவா காரியகர்த்தர்களாக மாற வேண்டும், கடந்த 43 ஆண்டுகளாக இந்த நோக்கத்தை நிறைவேற்ற சேவாபாரதி முயற்சி செய்து வருகிறது. இந்தக் சமூகத் திருமணம் என்பது இரண்டு தாழ்த்தப்பட்ட குடும்பங்களின் சந்திப்பு மட்டுமல்ல, சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் நேர்மறையான சிந்தனையையும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக ஒன்றுபட்டு நிற்கும் உதாரணத்தையும் காட்டுகிறது. இந்த திருமணங்கள், அரசாங்கத்தால் மட்டுமே சமூகத்திற்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துவிட முடியாது. சமூகத்திற்கு என்று அதன் சொந்த கடமைகள் உள்ளன, அதன் அதிகாரமும் வரம்பற்றது என்பதைக் காட்டுகிறது.

நாடு முழுவதும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக சேவா பாரதி இந்த மாதிரியான வெகுஜன திருமண விழாவை ஏற்பாடு செய்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், சில காலமாக சமூகத்தின் அனைத்து பிரிவினரின் பங்கேற்புடன் சேவா பாரதியின் இந்த சிறப்பு பிரச்சாரம் சமூகத்தை ஒருங்கிணைக்கும் வகையில் மிகவும் வெற்றிகரமாக உள்ளது. சமுதாயத்தில் ஏழை பணக்காரர், ஜாதி, மொழி, பிரதேசம், மதம் போன்ற பாகுபாடுகளைக் குறைக்கக்கூடிய ஒரு புதிய புரட்சியை எதிர்காலத்தில் இது போன்ற முயற்சிகள் நிச்சயம் கொண்டு வரும். இன்று பதினாறு இடங்களில் நடைபெற்ற இந்த திருமண வைபவங்களில் இதை பற்றிய தெளிவான பார்வை தெரிந்தது. அதே சமயம், சேவாபாரதியின் இந்த பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகி சேவை செய்யும் அனைத்து தொண்டர்கள் மற்றும் குடும்பங்களுக்கும் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். அதே சமயம், இன்றைய நிகழ்வை வெற்றிகரமாக்கிய எங்களது கூட்டாளிகள் மற்றும் நன்கொடையாளர்களுக்கு சேவா பாரதி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது” என கூறினார்.