செந்தில் பாலாஜி தம்பியை அடுத்த வாரம் ‘சரண்டர்’ செய்வர்: அண்ணாமலை சொல்கிறார்

சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில், வடசென்னை பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நேற்று திறந்து வைத்தார். இதில், மாநில துணைத் தலைவர்கள் கரு.நாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின், அண்ணாமலை அளித்த பேட்டி: சென்னையில் உள்ள மூன்று எம்.பி.,க்களும் குடும்ப அரசியலை பின்னணியாகக் கொண்டவர்கள். சாமானிய மனிதர்களுக்கு பணி செய்யக் கூடியவர்களாக இல்லை. இந்த முறை, வட சென்னையை பா.ஜ., கைப்பற்றும். அடுத்த 80 நாட்களும், பா.ஜ., நிர்வாகிகள் கடுமையாக உழைத்து, வட சென்னையை வெற்றி கோட்டையாக பா.ஜ.,விற்கு மாற்றி காட்டுவர்.

தி.மு.க., தொண்டனை விட, சபாநாயகர் அப்பாவு மோசமானவராக உள்ளார்; கட்சி சார்ந்து பேசுகிறார். தி.மு.க., உறுப்பினரை போல பேசியதால், கவர்னர் எழுந்து சென்றார். சபாநாயகருக்கு கட்சி சார்ந்து பேச உரிமையில்லை. சபாநாயகர் அப்பாவு தன் மகனுக்கு, லோக்சபா தேர்தலில், ‘சீட்’ கிடைக்க வேண்டும் என்பதற்காக, சட்டசபையில் அப்படி பேசியுள்ளார். கவர்னருக்காக எழுதிக் கொடுக்கப் பட்ட உரையில், திட்டமிட்டு பரப்பப்படும் பொய்கள் இருந்தன. அதில், 10 பொய்களை சுட்டிக் காட்டி உள்ளோம். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்திற்கு மிக குறைந்த தொகையே கிடைத்தது.

‘மிக்ஜாம்’ புயல் மழையை கையாண்டதற்காக, ஆளுங்கட்சிக்கு பாராட்டு என, கவர்னர் உரையில் எழுதி உள்ளனர். சென்னை வெள்ளத்தை கையாண்டதை பாராட்டுங்கள் என்றால், கவர்னர் எப்படி பாராட்டுவார் . ஜி.எஸ்.டி., கொண்டு வரப்பட்டதற்கு பின்பு தான், தமிழகத்தின் வரி வளர்ச்சி அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக சொல்வதை, யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டர். அதனால்,கவர்னர் அதை படிக்கவில்லை.

முதல்வரின் சுயபுராணம் பாடும் வகையில், கவர்னர் உரையில் எழுதி உள்ளனர். நாதுராம் கோட்சேவுக்கும், கவர்னருக்கும் தொடர்பு இல்லை. பா.ஜ.,வுக்கும், நாதுராம் கோட்சேவுக்கும் சம்பந்தம் இல்லை. கவர்னர் என்பவர் தி.மு.க., உறுப்பினர் கிடையாது. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என, முதல் நாளில் இருந்து சொல்லி வருகிறோம்.

ஊழல் வழக்கில் கைதான ஒரு அமைச்சருக்கு, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் கொடுத்து, இலாகா இல்லாத அமைச்சராக, எட்டு மாதமாக வைத்து இருந்தனர். மக்கள் பணம் லட்சக்கணக்கில் வீணாகி இருக்கிறது. செந்தில் பாலாஜியை வெளியில் கொண்டு வருவதற்காக, இன்னும் ஒரு வாரத்தில், செந்தில் பாலாஜியின் தம்பியை, ‘சரண்டர்’ செய்வர் என, நான் எதிர்பார்க்கிறேன். தேர்தல் வருவதால், செந்தில் பாலாஜியை வைத்து சில வேலைகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தாலாவாது ஜாமின் கிடைக்குமா என, அவர்கள் எதிர்பார்க்கின்றனர். செந்தில் பாலாஜி எட்டு மாதம் கழித்து, ராஜினாமா செய்தது பா.ஜ.,வுக்கு கிடைத்த முழு வெற்றி. இவ்வாறு அவர் கூறினார்.