சுதேசி ஜாக்ரன் மஞ்ச் விவசாய மசோதாவிற்கு புதிய தீர்மானம்

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்பதை உறுதி செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும் என்று சுதேசி ஜாக்ரன் மஜ்ச் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

விவசாயிகளின் நலனுக்காகவே புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. எனினும் குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்பாக விவசாயிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதற்காக சட்டத்தில் திருத்தம் செய்வது அவசியமாகிறது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் விவசாயிகளின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. இது நாட்டின் உணவு பாதுகாப்பு சார்ந்தது. இந்த திட்டம் அமலில் இருந்தால் மட்டுமே விவசாயிகள் அதிக அளவில் வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்வார்கள்.

எனவே குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும் என்பதை உறுதி செய்ய புதிய வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய வேண்டும். இல்லையெனில் புதிதாக சட்டம் இயற்ற வேண்டும்.

வேளாண் சந்தைகளை தாண்டி, வெளிச்சந்தைகளிலும் வேளாண் விளை பொருட்களை விற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. அத்தகைய சந்தைகளில், குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக வேளாண் விளை பொருட்களை வாங்கினால் சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்.

விவசாயிகள் நீதிமன்றம்

விவசாயிகள் தொடர்பான வழக்குகளை மாஜிஸ்திரேட் நீதி மன்றங்களில் விசாரிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களில் ஏற்கெனவே ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே நுகர்வோர் நீதிமன்றங்களை போல புதிதாக விவசாயிகள் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டும்.

புதிய சட்டங்களின்படி நிறுவனங்களும் விவசாயிகளாக கருதப்பட வாய்ப்புள்ளது. இது பொருத்தமாக இருக்காது. நிறுவனங்களுக்கு, விவசாயிகள் அந்தஸ்து வழங்கக் கூடாது.இந்த அம்சங்களை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக வேளாண் விளை பொருட்களை வாங்கினால் சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும்.