சீனாவின் மின் பொருட்களுக்கு கட்டுப்பாடு

லடாக் பிரச்னைக்குப் பின், சீனாவுக்கு எதிராக பல நடவடிக்கைகள் எடுத்துவரப் படுகிறது,

இந்நிலையில், மத்திய மின் துறை அமைச்சர், ஆர்.கே.சிங்., மாநில மின்துறை அமைச்சர்களுடன், நேற்று, வீடியோ வாயிலாக பேசினார். அப்போது, அவர் கூறியதாவது: இந்தியாவில் அனைத்து பொருட்களும் தயாரிக்கப் படுகின்றன. இருந்தும், ஆண்டுக்கு, 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள மின் சாதனங்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

அதில், சீனாவின் பங்கு, 21 ஆயிரம் கோடி ரூபாய். இந்த அளவிற்கு வர்த்தக வாய்ப்பளிக்கும் நாட்டில், சீனா அத்துமீறியுள்ளதை ஏற்க முடியாது. அதனால், சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து, மின் சப்ளை சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம்.

தற்போது, பி.ஆர்., அந்தஸ்தின் கீழ், அண்டை நாட்டு பொருட்கள் இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுகிறது. இனி, சீனா, பாகிஸ்தான் பொருட்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட மாட்டாது. சீனாவில் இருந்து இறக்குமதியாகும் மின் சாதனங்களில், ‘மால்வேர் அல்லது ட்ரோஜன்’ வைரஸ்கள் இருக்கலாம். அவற்றின் மூலம், எங்கிருந்தும், இந்திய மின் வினியோகத்தை முடக்கும் ஆபத்து உள்ளது.

அதனால், மின் வினியோக நிறுவனங்கள், சீன நிறுவனங்களின் மின்சாதனங்களை இறக்குமதி செய்ய வேண்டாம். அப்படியே இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டாலும், அதற்கு மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு இறக்குமதியாகும் சாதனங்கள், ஆய்வு செய்யப்படும். அதில் திருப்தியில்லையெனில், திருப்பி அனுப்பப்படும்.