9. ஶ்ரீ குருஜி கோல்வல்கர்
நான் ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ வார இதழில் பணி செய்து கொண்டிருந்த நேரம் அது. ஆசிரியர் சுதாங்கனிடம் கேட்டேன். “ஒரு நாள் காலை கண் விழிப்பது முதல் இரவு உறங்கும் வரை காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் உடனிருந்து குறிப்பெடுத்து, அதை வாசகர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று”.
அனுமதி கிடைத்தது.
அலுவலகத்தில் ஏகப்பட்ட புகைப்படக்காரர்கள் இருந்தாலும், மடத்துக்கு தெரிந்தவர் ஒருவரை சௌகரியமாய் இருக்கும் என்று அழைத்துக் கொண்டு போய்விட்டேன். முதலில் காஞ்சிபுரத்தில் மேனேஜரைப் பார்த்துச் சொல்லிவிட்டு, பின்பு ஏனாத்தூர்.
காலையில் பெரியவாளுக்கு ஆரத்தி முதல் அடுத்தடுத்த நிகழ்வுகள். புகைப்படக்காரர் படம் எடுத்துக் கொண்டிருந்தார். நான் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தேன்.
நான் பெரியவாளிடம் கேட்டேன். “மதியம் மூன்று மணிக்கு பெரியவா உபநிஷத் பாடம் எடுக்கிறார் என்று சொன்னார்கள். ஆதிசங்கரர் படத்தில் இருப்பது போல் நான்கு ஐந்து சிஷ்யர்கள் இருப்பார்களா.”
பெரியவா: “அதென்ன நான்கு, ஐந்து”.
நான்: ”சிருங்கேரியோடு நிறுத்தி விட்டால் நான்கு. நம்மையும் சேர்த்துக் கொண்டால் ஐந்து.”
பெரியவா கையை உயர்த்தி ஆசீர்வதித்தார். மதியம் மூன்று மணி அளவில் மாடியறையில் உபநிஷத் பாடம். வயதான சன்னியாசி ஒருவர், ஸ்வாமிகள் எதிரே அமர்ந்திருந்தார். நான் உடனே கீழே சென்று புகைப்படக்காரரைத் தேடினேன். அவர் தென்படவில்லை. மேலும் கீழும் ஏறி இறங்கினேனே ஒழிய, புகைப்படக்காரர் வரவில்லை.
பாடம் எல்லாம் முடிந்தபிறகு புகைப்படக்காரர் வந்தார். அதற்குள் பெரியவா எழுந்து விட்டார். நான் அவரிடம் எதுவும் சொல்லவில்லை. என் முக பாவத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்ட பெரியவா கேட்டார்.”
என்ன போட்டோகிராபர் இல்லையா” என்று.
“ஆமாம்” என்றேன்.”
“எங்கே போனாராம்”.
“அது முக்கியமில்லை பெரியவா. ஏதோ கதை சொல்றார்” என்றேன். என்னுடைய பதட்டம் அவரை பாதிக்கவில்லை.
“பதறாதே. இப்போது என்ன பண்ணலாம்” என்றார் அவர்.
“மீண்டும் அவரை உட்கார வச்சு படம் எடுத்துடலாம்” என்றேன் நான்.
“உபநிஷத் பாடம் போல போஸ் கொடுக்கக் கூடாது.”
“இன்னொரு முறை பாடம் எடுக்கிறேன். இது அரை மணி நேரம்தான் ஆகும். அதற்குள் உனக்கு வேண்டிய படமெல்லாம் எடுத்துக் கொள்” என்று சொன்னார்.
அப்படியே செய்தேன்.
இரவு வரை பதிவு செய்து கொண்டேன். பெரியவா பதறாமல் இருந்தது, மனதில் சுற்றி வந்தது. நாள் முடியும் வரை, புகைப்படக்காரர் பயத்தில் இருந்தார். பெரியவா எபெக்ட் நான் பதறவில்லை.
மேடைப்பேச்சு, தேர்தல் கூட்டம், மாநாட்டு உரைகள் இதையெல்லாம் கேட்டுப் பழகியவர்களுக்கு சங்கத்தில் கொடுக்கப்படும் பௌத்திக் வித்தியாசமாக இருக்கும். ஆரவாரம் இல்லாத, சிதறல்கள் இல்லாத கருத்துரையாகவும் எடுத்துக்காட்டாக சிறிய கதைகளும் மட்டுமே இருக்கும். இதில் பழகியவர்களுக்கு முனைவர் இரா. வன்னியராஜன் ஜி தொகுத்தளித்து இருக்கும், இந்த புத்தகம் ஒரு கையேடாக இருக்கும்.
ஸ்ரீ குருஜி நெடுநோக்குப் பார்வையும், தேசப்பணியும், விஜயபாரதம் பிரசுரம்
சங்கத்தை நிறுவியவர் டாக்டர் ஸ்ரீ ஹெக்டேவார். நாக்பூர் நகரில் ஐந்து பேரோடு அது ஆரம்பிக்கப்பட்டது. ஒரு சமயத்தில் டாக்டர்ஜி யிடம் ஒருவர் கேட்டார். ‘இந்த சங்கம் வளர்ந்து பெரிய அளவில் ஆகி, அப்போது அதிலும் ஊழல் வந்து விட்டால் என்ன செய்வீர்கள்’ என்று. தயக்கம் இல்லாமல் வந்தது டாக்டர் ஜியின் பதில், “மீண்டும் ஐந்து பேரோடு ஆரம்பிப்பேன்”. இப்படி சொல்லிலும், செயலிலும், நேர்மையும், துணிச்சலும் கலந்த பாஷை தான் சங்கத்தாருடையது. ஸ்ரீ குருஜி கோல்வல்கரின் உரைகளைத் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் வன்னியராஜன் ஜி.
புத்தகத்தைப் பார்ப்போம்.
ஒரு வருத்தமான நேரம் / குருஜியின் தாயார் மறைவு. அந்த நேரத்தில் காஞ்சி ஸ்ரீ சங்கராச்சாரியார், குருஜிக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதத்தில், “உங்களைப் போன்ற எண்ணற்ற புத்திரர்களுக்கு தாயான பாரத அன்னை, இன்று அல்ல பல ஆயிரம் ஆண்டுகளாக எண்ணற்ற புத்திரர்களை ஈன்ற பாரத அன்னை வருங்காலத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் வரை இவ்விதமே புத்திரர்களுக்கு பிறப்பளிக்கும் பாரத அன்னை, எல்லோருக்கும் ஆதாரமாகவும், ஊட்டமளிப்பவர்களாகவும் இருப்பவள். புனிதமானவள், அழியாத உயிர் துடிப்பு உடையவள், பிரகாசித்துக் கொண்டிருக்கிறாள். அந்த பாரத அன்னையின் சேவைக்காக உறுதி கொண்ட உங்களுக்கு, அன்னையின் பிரிவு என்ற துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லை. நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு துக்கம் ஏற்பட காரணமில்லை” என்றார் சங்கராச்சாரியார்.
தொடர்ந்து ஸ்ரீ குருஜி சொல்கிறார்.
‘ஜகன்மாதா இல்லாமல் ஞானம் இல்லை என்பது தெரிந்ததே, உபநிஷத்தில் ஒரு கதை வருகிறது. யுத்தத்தில் அசுரர்களை வென்றதற்காக, தேவர்கள் தங்கள் பராக்கிரமத்தைக் குறித்து மிகவும் கர்வம் அடைந்தனர். கர்வம் ஏற்பட்டது நல்லதல்ல. தேவர்கள் சபையில் ஒன்றுகூடி கம்பீரமாக இருக்கும்போது, அவர்கள் முன் எதிர்பாராத வகையில் ஓர் உருவம் தோன்றியது. அடையாளம் காண முடியாத அந்த உருவத்தைக் கண்டு தேவர்கள் பயமடைந்தனர். யாராவது ஒருவர் அதை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அவர்களில் யார் மிகவும் பலசாலியோ, அவர் எதிரில் சென்று முயல வேண்டும்.
முதல் முதலாக அக்னிதேவன் சென்றான். “உன் பலம் எத்தகையது?” என்று யக்ஷன் கேட்டான். நான் அக்னி. இந்த உலகிலுள்ள பொருள் அனைத்தையும் என்னால் எரிக்க முடியும்” என்று கூறினான். யக்ஷன் ஒரு புல்லைப் போட்டுவிட்டு, “இதை எரித்துக் காட்டு” என்றது. அக்னி தன் முழுச் சக்தியையும் கொண்டு, அந்தப் புல்லை எரிக்க முயன்று தோற்றது.
அடுத்ததாக வாயுதேவன் முன்வந்தான்.
வாயு தோல்வியை ஒப்புக்கொண்டு வெட்கத்துடன் திரும்பி வந்தான். தேவர்களின் இந்தத் தோல்விக்கு எது காரணமாக இருந்தது என்று இந்திரன் யோசனை செய்ய ஆரம்பித்தான்.
அக்கணமே இந்திரன் முன் பிரகாசமான ஒரு பெண்மணி காணப்பட்டாள். மிகத் தேஜஸ்வியும், தங்கம் போன்ற மேனியுடையவளுமான அவள் சொன்னாள்: “நீ எதைத் தேடுகிறாயோ, என்னிடம் வாய் மூலமாக வெளிப்படுத்து.”
நம் தேசத்தில், பாரம்பரியத்தில் ஞானம் அளிப்பவள் தாயின் வடிவானவள். அந்த சமயம் உலகத்தைத் தாங்கி நிற்பவள் என்ற முறையில் மட்டுமே, விளையாட்டுக் கருத்துக்காக என்றபடி எல்லாரும் உடையவள் சக்தி. இந்த மூன்று வடிவில் ஜகன்மாதா விளக்கப்பட்டிருக்கிறாள். ஜகன்மாதாவே நம் எல்லோரின் உயிரான வேறு மக்களுக்குத் தோன்றுகிறாள். நம் தேசத்தில் தாய்நாடு, ஜகன்மாதா என்று தாய்மையின் மூன்று தோற்றங்கள் விளக்கப்பட்டுள்ளன என்கிறார் குருஜி.
இத்தகைய தெளிவை, கருத்துரையை, வெளிப்படுத்த ஒரு தகுதி இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய முடிவு.
கண்ணுக்குத் தெரிந்த வீட்டில் இருக்கும் தாயாரில் தொடங்கி, விண்வெளியில் பரவி இருக்கும் பராசக்தி வரை, எல்லா இடத்திலும் தாய்மையை காணும் பண்பு மற்றும் ஆற்றலை நாம் உணர முடிகிறது.
சங்கத்தை பற்றி எழுப்பப்படுகின்ற விமர்சனங்கள் பல வகை. சில சீக்காளி, சில நோயாளி. மென்மையாகச் சொன்னாலும், மோதிப் பார்த்தாலும் இவர்களுடைய அடிநாதம் ஒன்றுதான்.
சங்கம் வேண்டாம் என்பதுதான் அது. ஆர்.எஸ்.எஸ் காரர்கள் குறுகிய நோக்கம் கொண்டவர்கள், அவர்களுக்கு வரலாறு, புவியியல் இரண்டுமே தெரியாது, அவர்களுடைய அறிவின் எல்லை புராணங்கள் தான் என்பது அடிக்கடி சொல்கிற குற்றச்சாட்டு.
என்ன செய்வது நம்முடைய அனுபவம் வேறு மாதிரி இருக்கு. குருஜி கோல்வல்கர் எழுதியது “Bunch of Thoughts” என்ற புத்தகம். இந்தப் புத்தகத்தில் இங்கிலாந்திற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே நடந்த போர் ஒன்றை பற்றி குறிப்பிடுகிறார் குருஜி.
போர் நடந்த இடம் வாட்டர் லூ, இன்றைய பெல்ஜியம். பிரெஞ்சு படைத்தலைவர் நெப்போலியன். ஆங்கிலப்படைத் தலைவர் டியூக் ஆப் வில்லிங்டன். போரின் முடிவில் இங்கிலாந்திற்கு வெற்றி. தன்னுடைய வெற்றியைப் பற்றி குறிப்பிட்ட டியூக் ஆஃப் வெலிங்டன் “The battle of Waterloo was won on the playfields of Eton and Harrow” என்றார்.
ஈடன் என்பது புகழ்பெற்ற கல்லூரி. ஹாரோ என்பது புகழ் பெற்ற பள்ளிக்கூடம். நாங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போதே, பெரும் யுத்தத்திற்கான பயிற்சியைப் பெற்று விட்டோம். அதன் விளைவு தான் “வாட்டர் லூ போர்” என்று பொருள் கொள்ள வேண்டும்.
உலக சரித்திரத்தின் விரிவான ஒரு வாக்கியத்தை அதன் வரலாற்றுப் பின்னணியை அழகாகச் சொல்கிறார் குருஜி. ஆனால் இது கழகத்தவர் கண்ணில் படாது. தோழர்களுக்கும் உறைக்காது.
கட்டுரையாளர் : சுப்பு தொடரும்…