சமூகத்திற்கு நாம் திருப்பிக் கொடுப்பதே தர்மம்

“வைஷ்ணவ ஜன தோ தேனே கஹியே, ஜே பீர் பராயீ ஜாணே ரே” — பிறருடைய துயரத்தை உணர்பவனே உண்மையில் உயர்ந்த மனிதன் என்று அழைக்கப்படத் தகுதியானவன். பிறர் படும் துன்பத்தை உணர்வதும், அந்த உணர்விலிருந்து இயல்பாகவே அவர்களின் துயரத்தைப் போக்க முயற்சி செய்வதும் — இதுவே தர்மம் என்று கூறப்பட்டுள்ளது.
மன்னர் ரந்திதேவரின் புகழ்பெற்ற பிரார்த்தனை இந்தக் கருத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறது: “எனக்கு ராஜ்யமும் வேண்டாம்; சொர்க்கமும் வேண்டாம்; மோட்சமும் வேண்டாம். துன்பத்தால் வாடும் உயிர்களின் துயரம் நீங்க வேண்டும் என்பதே எனது ஒரே விருப்பம்.”
“காமயே துக்கதப்தானாம் பிராணினாம் ஆர்திநாசனம்.”
இந்தப் புரிதல்தான் சுதந்திரத்திற்குப் பிறகு பாரதத்தின் அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களின் சிந்தனையில் மேலோங்கி, அரசுத் துறைகளின் அடிப்படை செயல்பாடுகளாக எடுத்துச் செல்லப்பட்டது. மக்களவையின் முத்திரைக்கு மேலே “தர்மசக்ர ப்ரவர்த்தனாய” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் “சத்யம் வத, தர்மம் சர” — உண்மையைப் பேசு, தர்மத்தின் வழியே — என்ற வாசகம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் குறிக்கோள் “யதோ தர்மஸ்ததோ ஜயஹ” — தர்மம் எங்கு இருக்கிறதோ, அங்கு வெற்றி உள்ளது — என்பதாகும். பாரதத்தின் தேசியக் கொடியின் மையத்தில் இடம்பெற்றுள்ள சக்கரமும் தர்மசக்கரமே.
பாரதத்தில் ‘ராஷ்ட்ரம்’ என்பது மேற்கத்திய கருத்தில் உள்ள நேஷன்-, ஸ்டேட் என்பதற்கு இணையானது அல்ல. இங்கு தேசம் என்பது சமூகத்தையே குறிக்கிறது. டாக்டர் ராதாகிருஷ்ணன், ஆன்மிக அடிப்படையிலான, ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான பாரதிய வாழ்க்கைப் பார்வையை “ஹிந்துக்களின் வாழ்க்கை முறை மற்றும் தத்துவம்” (“Hindu View Of Life”) என்று குறிப்பிட்டார். இந்த அடித்தளத்தில் தர்மத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்வதே ஹிந்துத்துவத்தின் வெளிப்பாடாகும்.
பாரதம் முழுவதும் பரந்து வாழும் சமூகம் ஒன்றே; நாம் அனைவரும் சமமானவர்கள்; அனைவரும் நம்முடையவர்களே என்ற உணர்வை, ஒரு ஸ்வயம்சேவகர் ஷாகாவின் செயல்பாடுகள் மூலமாகவும், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வரும் சக கார்யகர்த்தர்களுடன் இணைந்து வாழ்வதன் மூலமாகவும் உள்வாங்கிக் கொள்கிறார்.
மனிதனால் ஏற்படும் பேரிடர்களாக இருந்தாலும், இயற்கைப் பேரிடர்களாக இருந்தாலும், அவற்றின் போது ஸ்வயம்சேவகர்கள் ஆற்றிய இடையறாத, இதயப்பூர்வமான சேவையை சமூகம் மீண்டும் கண்டுள்ளது.
தேசப் பிரிவினையின் கொடுமைகள், நிலநடுக்கங்கள், வெள்ளங்கள் முதல் கொரோனா போன்ற பெருந்தொற்று வரை — பல்வேறு பேரிடர் காலங்களிலும் இந்தச் சேவை தொடர்ந்துள்ளது. சங்கத்தின் சிந்தனையை எதிர்ப்பவர்கள்கூட, ஸ்வயம்சேவகர்களின் தேசப்பற்று, ஒழுக்கம், அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பார்த்து பாராட்டாமல் இருந்ததில்லை.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட “பாக் மில்கா பாக்” திரைப்படம், புகழ்பெற்ற ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங்கின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது. நாட்டுப் பிரிவினைக்குப் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக பாரதத்திற்கு இடம்பெயர்ந்த எண்ணற்ற ஹிந்துக் குடும்பங்களில் மில்கா சிங்கின் குடும்பமும் ஒன்று என்பதை அந்தத் திரைப்படம் காட்டுகிறது.
அந்தத் திரைப்படத்தில், இடம்பெயர்ந்து வந்த குடும்பங்களுக்காக சங்க ஸ்வயம்சேவகர்கள் நிவாரண முகாம்களை நடத்தும் காட்சிகள் மூன்று இடங்களில் இடம்பெறுகின்றன. காங்கிரஸ் தலைமையிலான அரசு இருந்த காலத்தில் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் RSS-ன் நிவாரணப் பணிகள் இவ்வாறு இடம்பெற்றிருப்பது, ஒரு துணிச்சலான செயலாகவே இருந்தது.
இந்தக் காட்சிகள் குறித்து திரைப்படத்தின் இயக்குநரிடம் நான் ஆர்வத்துடன் கேட்டபோது, அவர் கூறிய பதில்: “இந்தப் படத்தில் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக பாரதத்திற்கு வந்தவர்களில் நான் நேரடியாகச் சந்தித்த ஒவ்வொருவரும், நான் பேசிய ஒவ்வொருவரும் தவறாமல் சங்கம் செய்த சேவையையும், உதவியையும் பற்றியே கூறினர்.”
திவிசீமா (Diviseema coast of Andhra Pradesh) முதல் ‘Ready for Selfless Service’ வரை
1977ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியான திவிசீமா கடற்கரையை மிகப் பயங்கரமான புயல் தாக்கியது. பெரும் அழிவை ஏற்படுத்திய அந்தப் பேரிடரில் சங்க ஸ்வயம்சேவகர்கள் காட்டிய வேகமும் துணிச்சலும் இன்றும் நினைவுகூரப்படுகிறது.
அழுகி, துர்நாற்றமடைந்திருந்த உடல்களைக்கூட அவர்கள் தயக்கமின்றி எடுத்து இறுதிச்சடங்கு செய்தனர். இதனால் அவர்கள் “சவ சேனா” — சடலங்களுக்காகப் பணியாற்றிய படை — என்று அழைக்கப்பட்டனர். முழுமையாக அழிந்துபோன முலபாலேம் கிராமத்தில் (Mulapalem Village) ஒவ்வொரு குடும்பத்திற்கும் நிரந்தர வீடுகள் கட்டிப் கொடுக்கப்பட்டது. அந்தக் கிராமம் தீனதயாள்புரம் (Deendayalpuram) என்று பெயரிடப்பட்டது. அதன் திறப்பு விழாவில் அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் டாக்டர் சென்னா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். இருவரும் சங்கத்தின் நிவாரணப் பணிகளைப் பாராட்டிப் பேசினர்.
அந்த நிகழ்வில்தான் புகழ்பெற்ற காந்திய சிந்தனையாளர் பிரபாகர் ராவ், RSS என்பதற்கு ஒரு புதிய விளக்கத்தை அளித்தார்:
“RSS என்றால் உண்மையில் ‘Ready for Selfless Service’ என்றார். அதாவது தன்னலமற்ற சேவைக்குத் தயாராக இருப்பவர்கள் என்று பொருள்.”
அய்லா புயல்: அழிவின் உள்ளே சென்ற சேவை
2009 மே மாதத்தில் மேற்கு வங்கத்தை அய்லா புயல் தாக்கியது. குறிப்பாக 24 பர்கானாஸ் மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஸ்வயம்சேவகர்கள் உடனடியாகக் களத்தில் இறங்கினர்.
அதற்குப் பிறகு சிறிது காலத்தில், சங்கத்தின் பயிற்சி முகாம் ஒன்றிற்காக நான் அங்கு சென்றிருந்தேன். நிவாரணப் பணிகள் நடைபெறும் இடத்தைச் சென்றடைய முதலில் ஜீப்பில் செல்ல வேண்டியிருந்தது. பின்னர் படகில் சென்று, இறுதியில் முழங்கால் அளவு சேற்றில் நடந்து செல்ல வேண்டியிருந்தது.
அங்கு வேறு யார் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தார்கள் என்று நான் கேட்டபோது, சாலைகளை ஒட்டிய பகுதிகளில்தான் பிற அமைப்புகள் பணியாற்றி வந்ததாகவும், அழிவு மிக மோசமாக இருந்த உள்பகுதிகளில் சங்க ஸ்வயம்சேவகர்கள் மட்டுமே பணியாற்றியதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.
கேதார்நாத் பேரழிவும் ஒரு எதிராளியின் சாட்சியும்
2013ஆம் ஆண்டு கேதார்நாத்தில், மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட மேக வெடிப்பு (Cloud Burst), திடீர் வெள்ளப்பெருக்கு மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. அப்போது நாடு முழுவதும் உள்ள ஸ்வயம்சேவகர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக பொதுமக்களிடம் நிதி திரட்டிக் கொண்டிருந்தனர்.
அந்தக் காலகட்டத்தில் விதர்பாவைச் சேர்ந்த எம்.டி. ராம்டேகே என்பவரின் மின்னஞ்சல் ஒன்று எனக்குக் கிடைத்தது. அவர் எழுதியிருந்தார்: “நான்
ஆர்.எஸ்.எஸ்.ஸின் தீவிர எதிர்ப்பாளர். நான் தீவிர அம்பேத்கர்வாதி. டாக்டர் அம்பேத்கர் அமரத்துவம் வாய்ந்த புத்தரின் அவதாரம் என்று நான் நம்புகிறேன். ஆனாலும்
ஆர்.எஸ்.எஸ்.ஸைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளை மிகுந்த நேர்மையுடன் செய்கிறார்கள் என்பதை எனது சொந்த அனுபவத்திலிருந்து கூற முடியும். அவர்களிடம் நிவாரணப் பணிக்காக நீங்கள் நூறு ரூபாய் கொடுத்தால், அவர்கள் தங்களுடைய பணத்திலிருந்து மேலும் பத்து ரூபாய் சேர்த்து நூற்றுப் பத்து ரூபாயைச் செலவிடுவார்கள். எனவே, இந்த நேரத்தில் சங்க ஸ்வயம்சேவகர்கள் உங்களிடம் நிவாரண நிதி கேட்டு வந்தால், அவர்களுக்கு தாராளமாக உதவுங்கள்” என்பதுதான் அந்த செய்தி.
ஒரு ஸ்வயம்சேவகருக்குள் தன்னலமற்ற, இதயப்பூர்வமான சேவைக்கான இந்த இயல்பை உருவாக்குவது ஷாகாதான். இயற்கைப் பேரிடர்களாக இருந்தாலும், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவுகளாக இருந்தாலும், அவற்றுக்குப் பின்னர் நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை ஸ்வயம்சேவகர்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அரசியல் விரோதத்தின் காரணமாக காங்கிரஸ் அரசு சங்கத்தின் மீது இரண்டு முறை — முதலில் 1948லும், பின்னர் 1975லும் — அநியாயமான, சட்டவிரோதமான, ஜனநாயகத்திற்கு எதிரான தடைகளை விதித்து, அமைப்பை ஒடுக்குவதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் ஜனநாயக ரீதியான எதிர்ப்பு, உறுதியான போராட்டம் இவற்றின் மூலம் ஒவ்வொரு முறையும் சங்கம் மீண்டும் வலிமையுடன் எழுந்து, தனது பணியை இன்னும் தீவிரமாகத் தொடர்ந்தது.
அடுத்த வாரம் தொடரும்…

கட்டுரையாளர்: அகில பாரத செயற்குழு உறுப்பினர்,
ஆர்.எஸ்.எஸ்
தமிழில்: மருத்துவர் சுபா