சிதம்பரத்திற்கு யோக்கியதை கிடையாது – எச்.ராஜா

‘சிதம்பரத்தை தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பினால் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வரும்’ என, பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஊழல் வழக்கில் கைதாகி, வழக்கு நடந்து கொண்டிருக்கும் போது, இன்றைய பொருளாதார நிலை குறித்து பேச, சிதம்பரத்திற்கு எந்த யோக்கியதையும் கிடையாது. சிதம்பரம் பெரிய அறிவு ஜீவியாயிற்றே… வழக்கு குறித்து தானே பேசக்கூடாது என்றவர், பத்திரிகையாளர்களை அழைத்து, பிரதமர் மோடி மீது புழுதி வாரி இறைத்துள்ளார்.

நம் நாட்டின் பொருளாதாரம், வீழ்ச்சி அடைந்து விட்டது என்று, கண்ணீர் வடிக்கிறார். எந்த குற்றச்சாட்டும் இல்லாமல், நான் அமைச்சராக பணியாற்றி உள்ளேன் என்று, சந்தடி சாக்கில் குறிப்பிடுகிறார். ‘நான் நிரபராதி’ என்று சொன்னாலே, நீதிமன்ற உத்தரவை மீறிய செயல்.

சுதந்திரம் பெற்றது முதல், 50 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த, காங்கிரஸ் கட்சி செய்த அலங்கோலத்தை சீர் செய்யவே, பல ஆண்டுகள் ஆகிவிடும். சிதம்பரத்தை தண்டனை கைதியாக்கி, சிறைக்கு அனுப்பினால் மட்டுமே, ஜனநாயகத்தின் மீது, மக்களுக்கு நம்பிக்கை வரும். இவ்வாறு, எச்.ராஜா கூறியுள்ளார்.