சாலை விரிவாக்கத்துக்கு சொந்த வீட்டை இடித்து ஒப்படைத்த பாஜக எம்.எல்.ஏ: சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு

சாலை விரிவாக்கப் பணிக்காக, பாஜக எம்.எல்.ஏ. ஒருவர், தனது வீட்டை அவரே ஜேசிபி இயந்திரம் வைத்து இடித்து தரைமட்டமாக்கி மாநகராட்சியிடம் ஒப்படைத்துள்ளார்.

தெலங்கானா மாநிலம், காமாரெட்டி மாவட்டம் வண்டலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமணா ரெட்டி. இவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இதே தொகுதியில் முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகிய இருவரையும் தோற்கடித்து வெற்றி பெற்றார். இதனால் அனைவரின் கவனத்தையும் ரமணா ரெட்டி ஈர்த்தார். இந்நிலையில், மாஸ்டர் பிளான் திட்டப்படி தற்போது காமாரெட்டி பகுதியில் சாலைகளை 80 அடிக்கு அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதனால், பலர் தங்களது வீடு, கடைகளை இழக்க நேரிட்டுள்ளது. இந்நிலையில், வண்டலூர் கிராமத்தில் உள்ள தனது சொந்த வீட்டையும் எம்.எல்.ஏ. இடிக்க வேண்டி வந்தது. இந்நிலையில், நேற்று ஜேசிபி இயந்திரம் மூலம் தனது வீட்டை ரமணா ரெட்டியே முன் நின்று இடித்து தரைமட்டமாக்கினார்.

இதுகுறித்து ரமணா ரெட்டி செய்தியாளர்களிம் கூறும்போது, ‘‘மக்களின் நலனே எனக்கு முக்கியம். நான் ஒன்றும் பெரிய தியாகத்தை செய்துவிடவில்லை. மக்களுக்கோ, அதிகாரிகளுக்கோ ஒரு இக்கட்டான சூழ்நிலையை ஏற்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால், மக்களுக்கு ஒரு வேண்டுகோள். இதேபோன்று சாலையை அகலப்படுத்தும் திட்டத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்’’ என்றார்.

பாஜக எம்.எல்.ஏ. ரமணா ரெட்டியின் இந்த செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.