சாலையில் கிடந்த நகையை போலீசில் ஒப்படைத்த பெண் பட்டதாரி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார் பேட்டை அடுத்த மேட்டாத்துாரைச் சேர்ந்தவர் தமிழ்வாணன் மனைவி சிவசங்கரி, 27, பி.எஸ்சி., பட்டதாரியான இவர், உளுந்துார்பேட்டையில் இன்ஜினியரிடம் வேலை செய்கிறார். நேற்று மதியம் 2:00 மணிக்கு சாப்பிட விருத்தாசலம் சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையில் கிடந்த பையை கண்டார். அதை எடுத்து பார்த்தபோது, 6 சவரன் நகை இருந்தது. இதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய்.

உடனே, நகை இருந்த பையை உளுந்துார்பேட்டை போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ப்ரீத்தாவிடம் ஒப்படைத்தார். சிவசங்கரியின் நேர்மையை பாராட்டி, அவருக்கு போலீசார் 1,000 ரூபாயை பரிசாக வழங்கினர்.

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நகை உளுந்துார்பேட்டை அடுத்த ஏமம்நத்தகாளி பகுதியை சேர்ந்த அன்பழகன் மனைவி பிரேமா, 25, என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது. அந்த நகைகளை பிரேமாவின் உறவினரான மேட்டுபாச்சாப்பாளையத்தைச் சேர்ந்த முருகவேல் மனைவி மீனா, 58, வங்கியில் அடமானம் வைத்திருந்த நேற்று மீட்டு எடுத்து வந்தபோது தவறவிட்டதும் தெரிந்தது.பிரேமா மற்றும் மீனாவை போலீசார் நேரில் அழைத்து நகைகளை ஒப்படைத்தனர். நகைகளை பெற்றுக் கொண்ட இருவரும், நகையை போலீசில் ஒப்படைத்த சிவசங்கரிக்கு நன்றி தெரிவித்தனர்.