உலக உணவு இந்தியா மாநாட்டில் ரூ.75,000 கோடி முதலீடு எதிர்பார்ப்பு

புதுடில்லியில் நடைபெற உள்ள ‘உலக உணவு இந்தியா’வின் இரண்டாவது மாநாட்டில், 75,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடு ஈர்க்கப்படும் என எதிர்பார்ப்பதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர் பிரஹலாத் சிங் படேல் கூறியதாவது: தலைநகர் புதுடில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில், வருகிற நவம்பர் 3 முதல் 5ம் தேதி வரை ‘உலக உணவு இந்தியா 2023’ என்ற தலைப்பில், இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது.

இதில், உணவு பதப்படுத்துதல் துறையில் 75,000 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகள் ஈர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு, ‘உலக உணவு இந்தியா’வின் முதல் மாநாடு நடத்தப்பட்டது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக இம்மாநாடு நடைபெறவில்லை. இந்நிலையில், இதன் இரண்டாவது மாநாடு அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இம்மாநாட்டை துவக்கி வைக்க பிரதமர் மோடியை கேட்டுக்கொண்டுள்ளோம். நிறைவு விழாவில் குடியரசு தலைவர் முர்மு பங்கேற்கிறார்.

இம்மாநாட்டில், சுமார் 16 நாடுகள், 23 மாநில அரசுகள், 11 மத்திய அமைச்சகங்கள் மற்றும் மத்திய அமைப்புகள் உள்ளிட்டவை பங்கேற்கின்றன. மேலும், 950 கண்காட்சியாளர்கள் மற்றும் 75,000 பார்வையாளர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் உணவு பதப்படுத்துதல் துறையில் முதலீடு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. முதல் மாநாட்டில் ஈர்த்ததைவிட, இம்முறை இன்னும் அதிகமான முதலீடு ஈர்க்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்