சர்வதேசப் பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கும் நிலையில் பாரதம் விஜயதசமி உரையில் பரம்பூஜனீய சர்சங்கசாலக்

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் தொடங்கப்பட்ட நாளான விஜயதசமி விழா 2026 அக்டோபர் 20 அன்று நாகபுரியில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் பரமபூஜனீய சர்சங்கசாலக் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் உரையாற்றினார். பேருரையின் சாராம்சம்...

நாம் இன்று விஜயதசமியை கொண்டாட குழுமியுள்ளோம். ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு கொண்டாட்டங்களும் நிறைவடைந்துள்ளன. இந்த ஆண்டு, சுவாமி ரவிதாஸ் ஜி மகாராஜ் அவர்களின் 650-வது பிறந்த ஆண்டாகும். சங்க ஷாகாக்கள் மூலமாக, சுவாமி ரவிதாஸ் ஜி அவர்களின் வாழ்க்கை, சிந்தனைகள் மற்றும் அவரது பங்களிப்புகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
தனது கடின உழைப்பு, தவம், தியாகம் மற்றும் தளராத அர்ப்பணிப்பு மூலம் அவர் சமுதாயத்தில் பக்தி உணர்வையும், தர்மத்தின் மீது உறுதியான பற்றையும், சமூகங்களிடையே நல்லிணக்கத்தையும் உருவாக்கினார். அந்நியப் படையெடுப்பாளர்களின் அடக்குமுறைகளாலும், துன்புறுத்தல்களாலும் நமது நாட்டின் தர்மத்தை பின்பற்றி வந்தவர்கள் பாதிக்கப்பட்டிருந்த காலகட்டத்தில் அவர் இந்தப் பணியை மேற்கொண்டார்.
மகான் ரவிதாஸ் அவர்கள் தமது உபதேசங்கள் மற்றும் எடுத்துக்காட்டான வாழ்க்கை மூலம் அளித்த சிந்தனைகள், இன்றும் நம் அனைவருக்கும் ஊக்கமளித்து வழிகாட்டி வருகின்றன. நமது தர்மத்தைக் காப்பதற்காக, தமது உயிரையே தியாகம் செய்த மாமனிதர்களை நினைவுகூரும் ஆண்டாகவும், இது அமைந்துள்ளது.
சிறந்த ஞானி, கல்வியாளர், சுதந்திரப் போராட்ட வீரர், தர்ம ரட்சகர் என்று பன்முகம் கொண்டவரும், சுத்தி இயக்கத்தை முன்னெடுத்த ஆரிய சமாஜத்தின் போற்றுதலுக்குரிய துறவியுமான, சுவாமி சிரத்தானந்தர் அவர்களது பலிதானத்தின் 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

ஒடிசாவின் வனவாசி மக்களிடையே தங்கி, அந்த மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து, இறுதியில் அவர்களின் மத்தியிலேயே பலிதானமானவர் சுவாமி லக்ஷ்மணானந்தர். அவரது நூறாவது ஆண்டும் கடைப்பிடிக்கப்படுகிறது.
நமது “ஸ்வ” எனும் சுயஅடையாளத்தை பாதுகாக்க, “சுதேசி மேளா” மற்றும் “ஹிந்து மேளா” நடத்தி, சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்திய வங்காளத்தைச் சேர்ந்த ராஜ் நாராயண் பாசு அவர்களின் 200-வது பிறந்த ஆண்டும் தற்போது கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த நூறு ஆண்டுகளாக, இதே ‘ஸ்வ’ எனப்படும் சுயஅடையாளம் மற்றும் நமது பண்பாட்டின் அடிப்படையில், பாரதத்தை ஒருங்கிணைத்து, வலுப்படுத்தும் பணியையே சங்கம் மேற்கொண்டு வருகிறது. சங்கத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, வாழ்க்கையில் நல்மாற்றத்தை ஏற்படுத்தும் ஐந்து முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. முதலில் ஸ்வயம்சேவகர்கள் அவற்றை தங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து, பின்னர் அவற்றை சமுதாயத்தின் மத்தியில் எடுத்து சென்றனர்.
அந்த ஐந்து முன்னெடுப்புகளில் ஒன்று ‘ஸ்வ’. சுயஅடையாளம். அது குறித்த புரிதலை ஏற்படுத்துவதும் சுதேசி வாழ்க்கை முறையை கடைப்பிடித்தலும் அதில் அடங்கும்.
நமது ‘ஸ்வ’ என்பதன் அடிப்படை
நமது அரசியல் சாஸனத்தில், “பாரத நாட்டின் மக்களாகிய நாம்” (We, the People of India) என்று நம்மை ஒரே மக்களாக வரையறுத்துள்ளோம். எத்தனையோ விதங்களில் பன்முகத்தன்மை கொண்டிருந்தாலும், ஆழ்ந்த, உணர்வுப்பூர்வமான ஒற்றுமையால் பிணைக்கப்பட்ட சமுதாயமாக நாம் விளங்குகிறோம். மக்களிடையே நிலவும் இந்தப் பிணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி, மேலும் வலுவூட்ட வேண்டியது அவசியம். நமது அரசியல் சாஸனம் தெளிவாக இதை வலியுறுத்துகிறது.

இந்த உணர்வுபூர்வமான பந்தத்தின் முக்கியத்துவத்தை நாம் அறிந்திருந்தாலும், உலகமே அதை உணர்ந்திருந்தாலும், கடந்த காலங்களில், இந்த சிந்தனைகளுக்கு மாறாக நமது நடைமுறைகள் அமைந்து விட்டன, அதனால் நாம் தாழ்ந்தோம். “விஸ்வகுரு” என்ற உயர்ந்த நிலையில் இருந்த நாம் வீழ்ச்சி கண்டு, அந்நியர்களிடம் அடிமையாகும் நிலைக்குத் தள்ளப்பட்டோம்.
கடும் போராட்டங்களின் எத்தனையோ தியாகங்களின் பலனாக, அந்த கடினமான காலகட்டத்தில் இருந்து நாம் மீண்டு, ஒற்றுமையாக முன்னேறி வருகிறோம். நாம் இவற்றை மறக்காமல், அடிப்படை உண்மையைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். அதற்கேற்ப உயரிய பண்புகளையும், தரத்தையும், நமது வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணத்திலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இன்றுள்ள சூழ்நிலைகளை காணும் போது, நாட்டின் சுதந்திரத்திற்காக நாம் எவ்வளவு அர்ப்பணிப்பு, தியாகம், ஒழுக்கம் ஆகியவற்றை மேற்கொண்டோமோ, தற்போது அதைவிட அதிகமான அளவு நாம் மேற்கொள்வது அவசியம்.

பல்வேறு நம்பிக்கைகள், சமயங்கள், மரபுகள், மாநிலங்கள், ஜாதிகள், மொழிகள், உணவுப் பழக்கங்கள், பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறை என்று எண்ணற்ற பன்முகத்தன்மையை கொண்டாடும் நாடு பாரதம். அனைத்தையும் ஏற்று, அவற்றின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, சுய உணர்வுடன் அணுகுவது மட்டுமே, நமது ஒற்றுமையின் அடித்தளமாக அமையும்.
அதிர்ஷ்டவசமாக, நமது எண்ணற்ற ஆன்மிக ஞானிகளின் நேரடி போதனைகள் காரணமாக, இந்த சிந்தனையானது நீண்ட நெடுங்காலமாகவே பாரதத்தில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. படைப்பில் காணப்படும் பன்முகத்தன்மை இயல்பானது, அதே நேரத்தில் மாறிக் கொண்டே இருக்கும் தன்மை கொண்டது. இங்கே ஒருமை என்ற சிந்தனை என்றும் நிலையானது, மாறாதது என்பதை உணர்த்துகிறது. நமது மரபு கற்பிப்பதும் இதையே.
இந்த ஒருமையை தனக்குள்ளும், தன்னை சுற்றியுள்ள உலகத்திலும் உணரும் ஆற்றல் மனிதர்களுக்கு உண்டு. இந்த மெய்யுணர்வின் மூலமாக மட்டுமே, நாம் தேடும் நிலையான இன்பத்தை பெற முடியும்.

“இதே உண்மையைப் பல்வேறு கோணங்களில்
வேதங்களில் நாம் பாடினோம்; அருகமரச் செய்து,
உபநிடதங்களில் இதே தத்துவத்தை நாம் உணர்த்தினோம்.
கோயில்கள், மடங்கள், குருத்வாராக்கள் சென்று,
சத்சங்கத்தின் வழியாக இதே ஞானத்தைப் பெறலாம்”
பன்முகத்தன்மையின் அனைத்து வடிவங்களையும் மதித்து ஏற்றுக் கொள்வது, அவற்றைப் பாதுகாத்துப் பேணுவது, அதே நேரத்தில் நிலையற்றவை அல்லது காலத்திற்குப் பொருந்தாதவற்றை மாற்றிக் கொள்ளும் இயல்புடன் இருப்பது பாரதத்தின் தன்மை. எப்போதும் நிலையான நமது சனாதனப் பார்வையே இந்த இயல்புக்குக் காரணம். இந்த உணர்வு பாரத மக்களிடையே வலிமையாக இருந்த காலங்களிலெல்லாம், எல்லாத் துறைகளிலும் உலகிற்கே முன்மாதிரியான தேசமாகப் பாரதம் விளங்கியது.
ஆனால் இவற்றை நாம் மறந்த போதும், பரஸ்பர தொடர்பு விட்டுப் போய் நம்பிக்கையிழந்த போதெல்லாம் நாம் பலவீனமடைந்தோம். இந்த வாழ்க்கை முறையை கைவிட்டு, குறுகிய மனப்பான்மை, ஆணவம், அச்ச உணர்வு மேலோங்கிய போது தான், நமது வீழ்ச்சி துவங்கியது.
நமது நிலைத்தன்மை மற்றும் அடையாளத்திற்கு அடிப்படையாக விளங்கும் உண்மையை மீண்டும் நினைவுகூர்ந்து, இவற்றை மேம்படுத்தும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட உறுதி பூணுவோம்.

சங்கத்தின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள்
சங்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு, ஷாகாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தவும் பல்வேறு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பாரதம், ஹிந்து சமுதாயம், சங்கம் குறித்து விரிவாக எடுத்துச் சொல்வதற்கான நிகழ்ச்சிகள், பாரதம் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் நடைபெற்றன.
இதுவரை கிடைத்துள்ள நிகழ்ச்சிகளின் விவரங்கள் அறிக்கை
வீட்டுத் தொடர்பு இயக்கம்: நாடு முழுவதும் 4,61,527 கிராமங்களிலும், 41,076 நகரங்களில் குடியிருப்புப் பகுதிகளிலுமாக, மொத்தம் 10,19,88,511 வீடுகளை ஸ்வயம்சேவகர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டார்கள்.
முக்கியஸ்தர்கள் சந்திப்பு: சங்கத்தின் 1,117 மாவட்டங்களில் நடைபெற்ற இந்தச் சந்திப்புகளில், 4,26,497 முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.
சமுதாய நல்லிணக்கக் கூட்டம்: 5,036 தாலுகாக்களில் நல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன
ஹிந்து மாநாடுகள்: 34,187 மண்டல்களில் நடைபெற்றன.
இளைஞர் மாநாடுகள்: 39,25,225 இளைஞர்கள் பங்கேற்றனர்.

சில சங்க கார்யகர்த்தர்கள் மேற்கத்திய நாடுகளுக்கு பயணம் செய்து, அங்குள்ளவர்கள் மத்தியில் பாரதம், ஹிந்துத்துவம், சங்கம் குறித்து சரியான தகவல்களை எடுத்துரைத்தனர். அனைவரையும் அரவணைக்கக்கூடிய, நன்மை பயக்கும் சனாதன தர்மம் குறித்தும், நமது பாரதப் பண்பாடு குறித்தும் உண்மையான புரிதலை மக்களிடம் ஏற்படுத்தினர். சங்கத்தின் நோக்கங்கள், அதன் பணிகள் பற்றியும் விளக்கினர்.
பாரதம் குறித்து அறியும் ஆர்வம் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. முழுமையற்ற உலகக் கண்ணோட்டம் காரணமாக அந்நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றன.
பன்முகத்தன்மையை எவ்வாறு கையாள்வது, வளர்ச்சியையும் சுற்றுச்சூழலையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது, மூன்றாவது மனிதர்கள் இடத்திலும் பரிவுடன் எவ்வாறு நடந்து கொள்வது, குடும்ப வாழ்க்கை சிதைவடைவதையும், அடுத்த தலைமுறையினருக்கு வழங்கப்பட வேண்டிய நற்பண்புகள் அழிவதையும் எவ்வாறு தடுப்பது, இவை போன்ற கேள்விகளுக்கு அவர்களிடம் தெளிவான பதில்கள் இல்லை. இதன் காரணமாகவே, இன்று புவிசார் அரசியல் பதற்றங்கள், பொருளாதார நிச்சயமற்ற தன்மை, சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் ஆதிக்க மனப்பான்மை காரணமாக ஏற்படும் அழிவுகள் ஆகியவற்றை உலகம் சந்தித்து வருகிறது.

இந்தப் பிரச்சினைகள் அனைத்திற்கும் தீர்வுகளை வழங்கும் ஆற்றல் பாரதத்திடம் இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அதனால் தான், அங்கு நமது கார்யகர்த்த்ர்கள் எடுத்துரைத்த கருத்துகளை மிகுந்த ஆர்வத்துடன் ஏற்றுக்கொண்டார்கள். அதைத் தொடர்ந்து பல்வேறு விவாதங்களும் நடைபெற்றன.
நூற்றாண்டை முன்னிட்டு நமது நாட்டிலும், உலகின் பிற நாடுகளிலும் தொடங்கப்பட்ட அனைத்து வகையான கலந்துரையாடல்களும் எதிர்காலத்திலும் தொடர்ந்து, தடையின்றி நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், நமது கார்யகர்த்தர்கள் திட்டங்களை உருவாக்கி வருகின்றனர்.

ஐந்து நல்மாற்றங்கள் (பஞ்ச பரிவர்த்தன்)
சங்கம் முன்வைத்துள்ள ஐந்து நல்மாற்றங்களுக்கான முன்னெடுப்புகள், சமுதாயத்தின் அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளன. உலகின் பிற நாடுகளிலும், இவற்றின் தேவை உணரப்பட்டுள்ளது.
அந்த ஐந்து முன்முயற்சிகள்:
1. சாமாஜிக் சமரசதா — சமுதாய நல்லிணக்கம்
2. குடும்ப பிரபோதன் — குடும்ப மேன்மை
3. பர்யாவரண் — சுற்றுச்சூழல் பாதுகாப்பு
4. ஸ்வ-போத் மற்றும் சுதேசி — சுயம் குறித்த விழிப்புணர்வு மற்றும் சுதேசியம்
5. நாகரிக் அனுசாசன் — குடிமக்கள் கடமை
இவை ஓராண்டு மட்டும் மேற்கொள்ளப்பட வேண்டிய நிகழ்ச்சிகள் அல்ல. மாறாக, நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட செயல்பாட்டு நெறிகளாகும் .

செயல்களைப் பழக்கங்களாகவும், பழக்கங்களை நற்பண்புகளாகவும் மாற்றும் இந்த முயற்சிகள், வாழ்க்கையின் அனைத்து பரிமாணங்களிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டும். அப்போதுதான் அர்த்தமுள்ள மாற்றம் உருவாகும்.
உலகை ஒன்றிணைத்து நிலைநிறுத்தும் தார்மிக வாழ்க்கை முறைக்கான பழக்கவழக்கங்கள், நமது சமுதாயத்தில் பாரம்பரியமாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு சம்ஸ்காரங்கள் மூலம் வழங்கப்பட்டு வந்துள்ளன.
பகுத்தறிந்து பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியம்
இன்றைய காலகட்டத்தில், குடும்பத்தில் பெரியவர்கள் மூலமாகவோ, பள்ளி பாடத்திட்டங்கள் மூலமாகவோ, அல்லது சமூக சூழல் மூலமாகவோ இத்தகைய சம்ஸ்காரங்களை கொண்டு செல்வது நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால், அனைத்து விதமான தகவல்களும் செய்திகளும் இப்போது சமூக ஊடகங்கள் வழியாக அனைவருக்கும் கிடைக்கின்றன. பல நாடுகளில், இளைய தலைமுறையினர் இந்த ஊடகங்கள் வழியாக பெறப்படும் தகவல்களை, எது சரி, எது தவறு என்று பகுத்தறியாமல் உள்வாங்கிக் கொள்கிறார்கள். இதன் பாதகமான விளைவுகளை அனுபவித்த பிறகு, அந்த நாடுகள் இத்தகைய ஊடக தளங்களுக்கு சில விதிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளன. நம் நாட்டிலும், குறிப்பாக OTT தளங்களைப் பொறுத்தவரை, இத்தகைய நடவடிக்கைகளின் தேவையை சமுதாயம் அதிகளவில் உணர்ந்து வருகிறது. அரசாங்கம் இந்த விஷயத்திற்கு உரிய கவனம் செலுத்த வேண்டும். அதே சமயம், தகவல்கள் தடையின்றிக் கிடைத்தாலும், எது தகுந்தது, எது தகாதது என்று பகுத்தறியும் திறனை, இளைய தலைமுறைக்குக் கற்பிக்க வேண்டும்.

இத்தகைய பகுத்தறிவு இல்லாததால் தனிப்பட்ட, குடும்ப, சமூக வாழ்வில் பல்வேறு பாதகமான விளைவுகள் தென்படுகின்றன. இதே பகுத்தறிவின்மை தான், உலகம் முழுவதும் இளைய தலைமுறையினர் போதைப்பொருட்களுக்கு அடிமையாகக் காரணமாகிறது. போதைப்பொருள் பழக்கம், ஒரு தீவிரமான தேசிய பிரச்சனை. அரசு, நிர்வாகமும், சமூகமும் இதை சரியான நேரத்தில் கவனித்து, அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்க வேண்டும். இன்றைய பெற்றோர்களும், சமுதாயத்தில் உள்ள பெரியவர்களும் இந்தப் பகுத்தறிவை இளைய தலைமுறைக்கு ஊட்ட வேண்டும், அதே நேரத்தில் தீங்கு விளைவிக்கும் பழக்கங்கள் உருவாக வழிவகுக்கும் அனைத்து தாக்கங்கள் மற்றும் செயல்பாடுகளிலிருந்து, இளைய தலைமுறையினர் தங்களை விலக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நோக்கத்துடன், பாரதத்தில் இந்தப் பிரச்சனையைத் தீர்க்கப் பணியாற்றும் அனைவரையும் ஒன்றிணைத்து, அதை எதிர்கொள்ள ஒரு தேசிய அளவிலான இயக்கத்தை உருவாக்க ஸ்வயம்சேவகர்கள் முயற்சி செய்வார்கள்.

வருங்காலத்தில் மிகுந்த செழிப்படைந்து, விஸ்வகுருவாக தன் பங்கை நிறைவேற்றும் பாரதத்தைக் கட்டியெழுப்பும் மாபெரும் பொறுப்பு, வருங்கால சந்ததியினரின் தோள்களில் இருக்கிறது. இந்த சவாலை ஏற்று வெற்றிகரமாக எதிர்கொள்ள, நமது இளைஞர்கள் ஒவ்வொரு வகையிலும் முழுமையாகத் தயாராக இருக்க வேண்டும்.
சமச்சீரான, முழுமையான வளர்ச்சிக்கான தொலைநோக்கு
பொருள் ரீதியாக வசதியாய் வாழவும், அறிவு மற்றும் பகுத்தறிவின் அடிப்படையில் மனிதர்கள் தங்கள் நடத்தையை செம்மைப்படுத்தவும், அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உதவுகின்றன. எனவே, புதிய அறிவு, அறிவியல் வளர்ச்சிகள், தொழில்நுட்பம் இவற்றை வரவேற்று ஏற்றுக்கொள்ள வேண்டும். இருப்பினும், தொழில்நுட்பம் வெறும் ஒரு கருவி மட்டுமே என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். நுகர்வு அல்லது பொருள் முதல்வாத கண்ணோட்டத்தில் மட்டுமே வளர்ச்சியை மேற்கொள்ளும்போது, அது கொண்டு வரும் வசதிகளுக்காக மிகப்பெரிய தீமைகளை ஏற்க நேரிடும்.
சமீபத்தில் நேபாளம் சந்திக்க நேர்ந்த மிகக் கொடூரமான பேரிடரில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பாரதம், திபெத், பூடான், சீனா உள்ளிட்ட பல நாடுகளின் வழியாகப் பரந்து விரிந்துள்ள ஒட்டுமொத்த இமயமலைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒருதலைப்பட்சமான வளர்ச்சிப் போக்கின் விளைவுகளும், இந்தப் பேரழிவின் அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக இருக்கக்கூடும்.

இத்தகைய மிகப்பெரிய மனித உயிரிழப்பால் ஏற்பட்ட ஆழ்ந்த துயரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். இத்தகைய துயரங்களுக்குப் பிறகு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும், உதவியும் வழங்க இயல்பாகவே ஒன்று சேர்கிறோம். இருப்பினும், நாம் வளர்ச்சியின் முழுமையான மற்றும் சமச்சீரான தொலைநோக்குப் பார்வையை வளர்த்துக் கொள்வது அவசியம். ஒரு கருவியை எந்த திசையில் பயன்படுத்த வேண்டும் என, பொருத்தமான விதத்தில் தீர்மானிப்பவனும், அதன் பயன்பாட்டில் எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்பவனாக மனிதனே செயல்படுகிறான். எனவே, அறிவையும், தொழில்நுட்பத்தையும் பெறுவதோடு, அதை முறையாகப் பயன்படுத்த உரிய பகுத்தறிவையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் அதன் பயன்பாட்டை நிர்வகிக்கும் நெறிமுறை மற்றும் நடைமுறை ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையெனில், அணு அறிவியல் அறிவு, ஆக்கப்பூர்வமான ஆற்றலை விட, உயிரை அழிக்கும் ஆயுதங்களை அதிகமாக உருவாக்கும்; செயற்கை நுண்ணறிவு போன்ற மிகவும் பயனுள்ள தொழில்நுட்பங்கள் கூட மக்களை தவறாக வழிநடத்தவும், ஏமாற்றவும், பொய்களைப் பரப்பவும் பயன்படுத்தப்பட்டுவிடும்.
பாரதத்தின் சனாதனமான வாழ்க்கைப் பார்வை, முழுமையானது, ஒருமையுணர்வு வாய்ந்தது. எனவேதான் நல்லிணக்கம், கட்டுப்பாடு இவற்றில் வேரூன்றியதோர் கலாச்சாரம், உலகம் முழுவதும் செழித்து வளர வேண்டும் என்று நாடுகிறோம். நமது முன்னோர்கள் இந்த பார்வையை
“ஸ ப்ரதமா ஸம்ஸ்க்ருதி விஸ்வவரா” முழு உலகையும் அரவணைக்கத் தகுதியான முதன்மையான கலாச்சாரம் என்று வர்ணித்தனர். இந்த பார்வையின் அடிப்படையில், பாரதம் உலகின் முன், முழுமையான ஒருங்கிணைந்த வளர்ச்சியின் புதிய மாதிரியை நிறுவ வேண்டும், அது அனைவருக்கும் ஒரு எடுத்துக்காட்டாகத் திகழும்.

ஹிந்து உணர்வு மற்றும் ஹிந்து இயல்பு – ஒற்றுமையின் அடித்தளம்
இந்த சனாதன உலகப் பார்வை தான், நமது தேசத்தின் உணர்வு. இதுவே உலகோர் அனைவர் மத்தியிலும், ஹிந்துவின் உலகப் பார்வை என அறியப்படுகிறது. இது எந்தவொரு குறிப்பிட்ட வழிபாட்டு முறையையும், எந்தவொரு குறிப்பிட்ட உணவுப் பழக்கம் அல்லது வாழ்க்கை முறையையும், அல்லது எந்தவொரு குறிப்பிட்ட சமுதாய அல்லது அரசியல் சித்தாந்தத்தையும் பின்பற்றுவதில்லை. எந்தவொரு குறிப்பிட்ட ஜாதி, மொழி அல்லது மாநிலத்தை சேர்ந்தவராக இருப்பதை ஒரு முன்நிபந்தனையாக ஆக்குவதில்லை.
வேறுபாடுகள் அனைத்தையும் கடந்து, ஆன்மிகம், மனிதநேயம் மற்றும் உலக சகோதரத்துவம் ஆகிய பண்புகளை இது முன்னிறுத்துகிறது. பாரத மக்களிடையே நிலவும் இந்த உணர்வு தான் பாரதியத்தன்மைக்கு விளக்கம். “பாரதம்” என்பது அறிவொளியில் திளைத்தவர்களின் நிலம், “பா” என்பது அறிவின் ஒளி. உலகம் முழுவதையும் ஒன்றிணைக்கக்கூடிய மற்றும் ஒன்றிணைக்க விரும்பும் இந்த ஹிந்து உணர்வை நினைவில் கொள்வதும், வளர்ப்பதும், பாரதத்தின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், இன்றியமையாத முன்நிபந்தனையாகும். தாய்நாட்டின் மீது தீவிர பக்தி, பாரதியர்களாகிய நமக்கு வழிவழி வந்த நமது மூதாதையரின் பாரம்பரியம் / லட்சியங்கள் மீதான பெருமித உணர்வு, மற்றும் பாரதத்தின் சனாதன கலாச்சாரத்தின் மேன்மைக்கு ஏற்ப, நம் வாழ்வை வடிவமைக்க தொடர்ச்சியான முயற்சி, இவைகளில் இந்த உணர்வு வெளிப்படுகிறது. பழங்காலத்திலிருந்தே, பாரதத்தில் வசிக்கும் மக்கள் இதே உலகப் பார்வையால் வழிநடத்தப்பட்டு, ஒரே சமுதாயமாக வாழ்ந்து வருகின்றனர்.
பாரதியர் ஒருமை: உள்ளார்ந்தது, நிபந்தனையற்றது
நாம் சக மனிதர்களுடனும், பாரதத்துடனும், பாராட்டும் பந்தம் உயிர்ப்புள்ள ஒன்று, நெஞ்சார்ந்த பந்தம்; எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத நிபந்தனையற்ற பந்தம். ஒருவிதத்தில் அதை சுயமான, எதிர்பார்ப்பற்ற பந்தம் என்று கூறலாம். “பாரதத் தாயே! நான் நாளை இருப்பேனோ மாட்டேனோ, ஆனால் உன்புகழ் என்றென்றும் மங்காது மிளிரட்டும்” எனும் இந்த பந்தம், நாம் ஒரு கூட்டுப்பறவைகள் என்ற எண்ணத்தின் பால், பரஸ்பர அன்புடன், நாம் ஒன்று என்ற அடிப்படையில் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வந்த பந்தம்.

நம் பந்தத்தின் வேர் போன்ற இந்த எண்ணத்தை புரிந்து கொண்டோமானால், நமக்கிடையிலான உறவு வலுப்படும். நமது விடுதலை வீரர்கள் இதற்கான சிறந்த உதாரணம். அவர்கள் நம் நாட்டின் மீது வைத்திருந்த பற்று முற்றிலும் முழுமையானது, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாதது. அவர்கள் முழு அர்ப்பணிப்புடன் எதிர்பார்ப்பில்லாது போராடியதாலேயே, பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டு வெளியேறினர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம், இந்த ஹிந்து உணர்வை எழுப்பி, சமுதாயத்தை ஒன்றுபடுத்தி வலிமையான சமுதாயமாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. வலிமையற்ற சமுதாயம் பெருமையிழந்து பாதுகாப்பற்ற, தறிகெட்டதாக மாறிவிடும். தன்னையோ, சுற்றியுள்ளவரையோ பாதுகாக்க முடியாமல் போகும். ஆகவே, ‘ஒழுங்குபடுத்தப்பட்ட வலிமையான ஹிந்து சமுதாயத்தை உருவாக்குவோம்’ என்று நாம் கூறும்போது நாம் பிற மதங்களை புறந்தள்ளுவோம் என்றோ, இந்த தேசத்தின் ஒற்றுமைக்கு எதிராக ஏதோ சொல்வதாகவோ நினைத்துவிடக்கூடாது.

ஹிந்து சமுதாயத்தின் பார்வையும், இயல்பும், நாம் அனைவரும் ஒன்று என்ற அடிப்படை கொண்டது. பரஸ்பர அன்பு, ஒற்றுமை மற்றும் நன்னடத்தையை நமது முயற்சி பேணிக் காக்கும். பல தலைமுறைகளாக வழிவழி வந்துள்ள இப்படிப்பட்ட எண்ணமே, விமானி கேப்டன் ஸ்மித் மச்சார், சுயநலமில்லாமல் எத்தனையோ பேரின் உயிர் காக்க தன்னை அர்ப்பணிக்கச் செய்தது.
நல்லிணக்கத்தில் வேரூன்றிய நடத்தை அவசியம்
இது சிந்தனை அல்லது சொற்கள் பற்றிய விஷயம் மட்டுமல்ல. இந்த உணர்வு ஒவ்வொருவரின் நடத்தையிலும் பிரதிபலிக்க வேண்டும். நம் பாரதம் ஒரு பரந்த நிலப்பரப்பு; விதவிதமான இயற்கைத் தோற்றங்களாலும், வளமான சூழல்களாலும் அலங்கரிக்கப்பட்டது. பல்வேறு மதங்கள், பல்வேறு மாநிலங்கள், மொழிகள், ஜாதிகள், உணவுப் பழக்கங்கள், மரபுகள், வழக்கங்கள் ஆகியவற்றால் ஆன வண்ணமயமான சமுதாயமே நம் பாரதம். நாம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்பொழுது, பரஸ்பர நல்லெண்ணமும், நாம் அனைவரும் ஒன்று என்பது நம் எண்ணத்திலும், சொற்களிலும், செயல் மூலமும் வெளிப்படவேண்டும்.
கடந்த கால வரலாற்றின் வேரூன்றிய சந்தேகங்கள் நம்மை ஒருவரிடமிருந்து ஒருவரை பிரித்து வைக்கின்றன. வரலாற்றின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளும் போது, ஏற்கனவே உள்ள சிக்கல்களை அகற்றி, புதிய முடிச்சுகள் உருவாகாதபடி, நாம் நடந்து கொள்ள வேண்டும். சிறிய விஷயங்களில் சண்டையை தூண்டும் அல்லது தூண்டுபவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும்.

இவ்வளவு பரந்துபட்ட, பன்முகத்தன்மையுள்ள சமுதாயத்தில், பரஸ்பர நம்பிக்கை, நல்லிணக்கம் வாய்ந்த சூழலை உருவாக்க நாளாகும். ஆனால் தேசத்திற்கும், உலகிற்கும் நன்மை விரும்புவோர் தன்னடக்கத்துடன், உறுதியுடன் தங்களையும், சமுதாயத்தையும் கையாண்டு, முன்னேறிச் சென்று கொண்டே இருக்கவேண்டும்.
நமது சமுதாயத்தை தொடர்பு கொள்ளும் போது, நம் நடத்தையின் மீது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். நாம் யாருடன் தொடர்பு கொண்டாலும், அது சாதாரண மக்களாக இருந்தாலும், அரசாங்கம் அல்லது நிர்வாகமாக இருந்தாலும், நம் நடத்தை குறித்து மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக சமுதாயத்தில் எந்தவொரு திட்டம் அல்லது கொள்கை நடைமுறைப்படுத்தப்படும் போது, நம் நடத்தை எப்போதும் மரியாதையுடனும், அன்புடனும் இருக்க வேண்டும். நம் குடிமக்களின் கண்ணியத்தையும், மரியாதையையும் நாம் மதிக்க வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருப்போம்.
சங்கத்தின் நற்கருத்துக்கும், அதன் நோக்கங்களின் நேர்மைக்கும், களங்கம் கற்பிக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இடையிடையே நிகழும் சில விரும்பத்தகாத அல்லது எதிர்பாராத சம்பவங்களை சுட்டிக்காட்டி, அவற்றுடன் சங்கத்திற்கு எந்தத் தொடர்பும், பங்கும், ஆதரவும் இல்லாதபோதும், சங்கத்தின் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
சங்கத்தின் பணிகள் தூய்மையான, தன்னலமற்ற, அன்பின் அடிப்படையில் அமைந்தவை. ஸ்வயம்சேவகர்களின் அர்ப்பணிப்பு, சேவை, கடின உழைப்பின் வழியே அவை முன்னெடுக்கப்படுகின்றன. சங்கம் தனக்கென எதையும் நாடுவதில்லை. அடிப்படை உண்மையின் மீதான உறுதியும், அந்த உண்மையை நிலைநிறுத்தும் அர்ப்பணிப்பும் வழிகாட்ட, ஸ்வயம்சேவகர்கள் நம்பிக்கையுடனும், உறுதியுடனும் தங்கள் பணியை, இலக்கு நிறைவேறும் வரை தொடர்ந்து செய்து கொண்டிருப்பார்கள்.

நாம் அனைவரும் நன்கு அறிந்த விஷயங்களையே நான் மீண்டும் வலியுறுத்துகிறேன். காரணம், இன்றைய சூழலில் அறிவார்ந்தவர்களும், விவேகமுள்ளவர்களும் கூட திசைதிருப்பப்பட வாய்ப்புள்ளது.
மேற்கத்திய நாடுகளிலிருந்து ஒரு புயல் கிளம்பியுள்ளது. அது, தீய சக்திகளின் உதவியோடு, பாரதம் உட்பட உலகம் முழுவதும் நல்லொழுக்கம், பண்பாடு மற்றும் நற்பண்புகளில் வேரூன்றிய அனைத்தையும் அழித்து சிதைக்க முனைகிறது. உலகின் முன்னேறிய நாடுகள் என்று அறியப்படும் பல நாடுகளும், இந்தப் புயலால் பாதிக்கப்பட்டு, அதன் முன் பலவீனமாக நிற்கின்றன.
ஆனால் கடந்த சில தசாப்தங்களில், பாரதம் தனது சொந்த வலிமையாலும், உறுதியான கொள்கைகளாலும், உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. வலுவான கொள்கைகள், தலைமைத்துவம், தேசியப் பெருமை, உலகின் மீதான பொறுப்புணர்வு ஆகியவற்றின் மூலம் பாரத சமுதாயத்தின் கூட்டு முயற்சி, ஒவ்வொரு துறையிலும் பலன் கொடுக்கத் துவங்கியுள்ளது.
பாரதம் இவ்வாறு முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், உலக நாடுகளில் குழப்பம் ஏற்படுத்தி, சுயநல நோக்கில், தங்கள் அனுதாபிகளை அதிகாரத்தில் அமர்த்த முயலும் இந்த தீயசக்திகளின் திட்டங்கள் முறியடிக்கப்படும், அவர்களின் செயல்பாடுகள் முடக்கப்படும் என்ற நம்பிக்கையுள்ளது. தீய சக்திகள், இந்த உண்மையை நன்கு அறிந்துள்ளன. அதனால் பாரதமே அவர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் இறுதி இலக்காகவும் உள்ளது.
பாரதத்தையும், ஹிந்து சமுதாயத்தையும், சங்கத்தையும் சிதைக்க வழிகளைத் தேடி, திட்டங்களை வகுக்கின்றனர். அவர்களின் இயல்புக்கும், மனப்பான்மைக்கும் ஒத்த சிலர் அவர்களுக்கு துணை நிற்கின்றனர். குறுகிய அரசியல் ஆதாயங்களுக்காக, விவேகமின்மையால் சில அரசியல் தலைவர்களும் அவர்களுடன் இணைகின்றனர்.
நம் பரந்த சமுதாயத்தில் பல பிரச்சினைகள் உள்ளன. நிர்வாகத்தில் குறைகள் இருப்பதும் இயல்பே. இதன் காரணமாக சில போராட்டங்களும் உருவாகக் கூடும். ஆனால் அந்தப் போராட்டங்கள் தீர்வுகளை நோக்கிச் செல்ல வேண்டும். போராட்டங்கள் நடைபெறும் போது, அரசு மற்றும் நிர்வாகம் அமைதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுத்தாலும், அரசியல் தலைவர்கள் தங்கள் பங்கை ஆற்றினாலும், அவை சமுதாயத்தில் பிளவு, பகை, வெறுப்பு, கசப்பு, பிரிவினை ஆகியவற்றை உருவாக்கும் வகையில் இருக்கக்கூடாது.

உணர்ச்சி மேலிடும் தருணங்களிலும், நம் செயல்கள் அரசியல் சாஸனம், சட்டம் இவற்றின் வரைமுறைகளுக்குள் இருக்க வேண்டும். நம் சொல், நடத்தை, செயல் அனைத்தும் நாகரிக உரையாடலின் கண்ணியத்தையும், ஒழுக்கத்தையும் பிரதிபலிக்க வேண்டும். இதை எப்போதும் நாம் நினைவில் கொள்வோம். வாக்குகள், மலிவான புகழ், அரசியல் லாபம் ஆகியவற்றின் கவர்ச்சியால் நம் விவேகமும், நல்லிணக்கமும் மங்கிவிடக் கூடாது.
சமூக முயற்சிகள் வழியே தீர்வுகள்
சமுதாயத்தின் அனைத்து பிரச்சினைகளை அரசு மட்டும் தீர்க்க முடியாது; அதேபோல் போராட்டங்கள் மட்டுமே தீர்வை தரும் என்பதும் உண்மையல்ல. இது அனுபவம் காட்டும் நிஜம். சமுதாயத்தின் பங்கேற்பும், மக்களிடையே உரையாடலும் மட்டுமே தீர்வுகளை உருவாக்கும்.
சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் இப்படிப்பட்ட சமுதாய முன்னெடுப்புகளை ஊக்குவிக்கின்றனர். குறிப்பாக கிராமப்புற பள்ளிகளில் மேற்கொண்ட முயற்சிகள் ஊக்கமளிக்கும் வகையில் இருந்துள்ளன. 21 மாநிலங்களில், 210 மாவட்டங்களை உள்ளடக்கிய 1,296 பள்ளிகளில் மேற்கொண்ட ஆய்வில், ஸ்வயம்சேவகர்களும், கிராம மக்களும் இணைந்து பங்கேற்ற இடங்களில், மாணவர் வருகை அதிகரித்தது, கல்வி நிலை உயர்ந்து, பெற்றோர் பங்கேற்பும் அதிகரித்தது எனத் தெரியவந்துள்ளது.

கல்வி, அடிப்படை வசதிகள் மட்டுமல்லாமல், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் போன்றவற்றில் சமுதாய பங்களிப்பு அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கான கிராமங்களில், கிராம மக்கள் பங்கேற்பின் அடிப்படையில், முழுமையான வளர்ச்சிக்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஸ்வயம்சேவகர்கள் மேற்கொள்ளும் சேவை முயற்சிகள் அனைத்தும், நம் நாட்டினரிடையே சுயமரியாதை, சுயநம்பிக்கை, தற்சார்பு, தேச சேவையில் பங்கேற்பு ஆகியவற்றை மக்களுக்கு ஊட்டும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த முயற்சிகள், அந்த உயர்ந்த இலக்குகளை நடைமுறைப்படுத்த தேவையான வலிமை, திறன் இவற்றை மக்களுக்கு அளிக்கின்றன.
எச்சரிக்கை அவசியம்
சமுதாயத்தையும், தேசத்தையும், நமதென்ற உணர்வுடன் நாம் நிறைவேற்றும் கடமையே நமக்கு உந்துதல். அதுவே நம் சமுதாய இயக்கங்களையும் வழிநடத்த வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல், அந்த இயக்கம் அரசியல்வாதிகளின் கருவியாக மாறி, ஒருவரை, ஒரு குழுவை அல்லது ஒரு சிந்தனையை எதிர்த்து வெறுப்புப் பிரச்சாரத்தை முன்வைக்குமானால், பாரதத்தை பலவீனப்படுத்த விரும்பும் சக்திகள், அதனைப் பயன்படுத்திக் கொள்ளும்.
கருத்து வேறுபாடுகளை ஆழப்படுத்தி, பகைமை எண்ணத்தை ஊதிப்பெரிதாக்கி, நாட்டின் நிர்வாகத்தின் மீது நம்பிக்கையின்மையை உருவாக்கி, பிளவு, கடும் அதிருப்தி, பிரிவினை, குழப்பம், அசம்பாவிதம் ஆகிய சூழலை உருவாக்குவதே அந்த சக்திகளின் நடைமுறை. பாரதத்தை கட்டுப்படுத்தி வைக்க விரும்பும் உலக சக்திகளும், சில நேரங்களில் இந்த முயற்சிகளில் பங்கெடுக்கின்றன.

எனக்கு ஒரு பழைய மராட்டி கீதத்தின் இறுதி வரிகள் நினைவிற்கு வருகிறது, அதை ஸ்ரீமதி ஆஷா போஸ்லே பாடியிருந்தார்:
“தீயவர் திட்டங்கள் நிறைந்திருக்கு,
பிளவுகளை பெரிதாக்கி, இருளின் போர்வையில்
அப்பாவிகளை அடித்துக் கொல்ல காத்திருக்கு;
ஆகையால், பாரா உஷார்,
கண்களை இலக்கு மேல் வைத்திரு”
இத்தகைய பிளவுபடுத்தும் போக்குகள் உருவாக்கும், அறிவுக் குழப்பத்திலிருந்து நம்மை காத்துக் கொண்டு, பரஸ்பர நல்லிணக்கத்தை பாதுகாக்க நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. எந்த விதத்திலும் கலங்காமல், தூண்டிவிடப்படாமல், பாரதம் விஸ்வகுரு ஆகவேண்டும் என்ற நம் லட்சியத்தை மனதில் உறுதியாகக் கொண்டு, தொடர்ந்து முயற்சி செய்வோம்.
பரஸ்பர அன்பிலும், ஒழுக்கத்திலும், தேசிய லட்சியத்தின் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பிலும் வேரூன்றிய சமுதாயமே ஒன்றுபட்டு, வெல்ல முடியாத வலிமையைப் பெறுகிறது.
தொன்றுதொட்டே “உலகம் ஒன்றே” என்ற உண்மையை நம் சமூகம் உணர்ந்திருந்தது என்று சங்கம் திடமாக நம்புகிறது. அந்த ஒற்றுமையின் அனுபவத்தை உலகிற்கு பகிர்வதற்காக, நம் சமூகம் காலங்காலமாகப் பல்வேறு நிலைகளில் வாழ்ந்தாலும், நல்லிணக்கத்துடன், அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, மதித்து, கௌரவித்து வாழ்ந்து வந்துள்ளதே அதன் சாரம்.
ஒற்றுமையின் பால் உறுதியாக நிலைநிற்போம்
நமது வாழ்வின் குறிக்கோள் நம் மனதில் உயிர்ப்புடன் இருந்தபோது வெற்றி நமதாக இருந்தது. லார்ட் கர்ஸான், முஸ்லிம்களை, ஹிந்துக்களிடமிருந்து பிரிக்க, மத அடிப்படையில் வங்காளத்தைப் பிரிக்க முயன்றபோது, “ஒரே நிலம் – ஒரே மக்கள்” என்ற அடிப்படையில் சமுதாயம் உறுதியுடன் எதிர்த்தது. பிரிட்டிஷ் அரசு அந்தப் பிரிவினையை வாபஸ் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அந்தக் காலகட்டத்தில் தான் வந்தே மாதரம் என்ற முழக்கம், ஒற்றுமையையும், தேசப்பற்றையும் பிரதிபலிக்கும் சின்னமாக உருவானது. வங்கப்பிரினை தோற்கடிக்கப்பட்டது. ஆனால் 1947ல் அதே முடிவை நம்மால் ஏன் அடைய முடியவில்லை? ஏனெனில் நம்மை பிரிக்க நினைத்தவர்கள், “நாம் வேறுபட்டவர்கள், வெவ்வேறு தோற்றமுடையவர்கள், நம்பிக்கைகள் வேறு, நாம் தனித்தனியாகதான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம்மிடையே விதைத்திருந்தனர்.
பிரிவினை பற்றிய பிடிவாதமும், அரசியல் ஆதிக்கத்தின் பேராசையும், சுயநலமும் சேர்ந்து, நம்மை ஒன்றாகக் கட்டியிருந்த அடித்தளங்களை மறக்கத் தூண்டின. ஒருசாராரை திருப்திப்படுத்தும் நோக்கம், இந்தப் பிளவுபடுத்தும் சிந்தனையை மேலும் வலுப்படுத்தியது. இறுதியில், நாடு பிரிக்கப்பட்டது.
ஆனால், பிரிவினை உள்ளிட்ட இந்த அழிவு ஆட்டத்தினால், எதிர்பார்க்கப்பட்ட தனித்துவமான சுயாட்சி வாழ்க்கையின் அமைதியும், மகிழ்ச்சியும் ஒருபோதும் நிஜமாகவில்லை. அதற்கு பதிலாக, எல்லைகளிலும், நாட்டுக்குள்ளும் தீராத அமைதியின்மை, பரஸ்பர நம்பிக்கையின்மை, பாதுகாப்பின்மை, சிறிய விஷயங்களுக்கே இடையறாத சண்டைகள் ஆகியவற்றை நாமே நமக்குக் கொண்டு வந்தோம்.
வங்காளப் பிரிவினைச் சதியை தோற்கடித்த வந்தே மாதரம், இன்று கூட அதே ஒற்றுமையின் ஊக்கமாக வலிமையுடன் நிற்கிறது. அது நம் தேசியப் பாடல். அதை முழுமையாக, பெருமையுடன், தெளிவான, உரக்கப் பாடுவதில் எந்தத் தயக்கமோ, எதிர்ப்போ இருக்கக் கூடாது.

தாய்நாடான பாரதத்தின் மீது பக்தியும், நம் முன்னோர்களின் வாழ்க்கையைப் பற்றிய பெருமையும், நற்பண்புகளைப் பின்பற்றும் உணர்வும், பாரதப் பண்பாடு போதிக்கும் உலகளாவிய மானுடப் பண்புகளின் அடிப்படையில் வாழ்வை வடிவமைத்துக் கொள்ளும் நேர்த்தியும், நம்மை ஒற்றுமையுடன் வைத்திருக்கின்றன.
மதம், மாநிலம் மொழி, ஜாதி போன்ற பல்வேறு வேறுபாடுகளுடன் முரணாக இல்லாமல், அவற்றை எல்லாம் தாண்டி நிற்கிறது இந்த அடித்தளம். இந்த அடிப்படையை இடையறாது சிந்தித்து, புரிந்து, முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதன் மூலம், நம் ஒற்றுமையை மட்டுமல்லாமல், ஒவ்வொருவரின் தனித்துவமான அடையாளத்தையும் வலுப்படுத்திக் கொண்டே இருப்போம்.
நம் அடையாளங்கள் அச்சுறுத்தப்படுகின்றன என்ற தவறான பயத்தால், அல்லது அந்த அடையாளங்களின் பெருமைகளில் மயங்கி, நம் ஒற்றுமையின் அடித்தளங்களை மீண்டும் கைவிட்டு, அதே தடைகளில் தடுமாறும் பிழையை நாம் செய்யக்கூடாது.
நாம் தனிப்பட்ட அகங்காரங்களை, நம் வழிபாட்டு முறைகள் குறித்த தவறான புரிதல்களை, பல்வகைமையைப் பிரிவாகக் கருதும் மனப்போக்கையும் கைவிட வேண்டும்.
பாரதத்தின் மீதான பக்தி, முன்னோர்களைப் பற்றிய பெருமை, நம் பண்பாட்டின் மீதான அர்ப்பணிப்பு, இம்மூன்றையும் முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு, தேசத்தின் சுபிட்சப் பாதையில் நாம் பயணிப்போம்.

பாரதத்தின் உலகளாவிய பொறுப்பும் நம் கடமையும்
இன்று உலகை அச்சுறுத்தும் பிரச்சினைகளின் வேர், வாழ்க்கையைப் பற்றிய அரைகுறைப் பார்வையே. இதை விட்டுவிட்டோமென்றால், மனித முயற்சிகளிலும், சாதனைகளிலும் உலகின் பிற பகுதிகளிடமிருந்து, நாம் கற்றுக்கொள்ள வேண்டியவையும் ஏராளம்.
பிறரிடமிருந்து கற்றுக்கொள்வதோடு மட்டுமல்லாமல், நம் தேசிய அடையாளத்தின் தனித்துவத்தை தெளிவாகப் புரிந்து உள்வாங்கிக்கொண்டு, ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் காப்பதற்கான முயற்சியில் நம்மை அர்ப்பணிப்போம். தர்மத்தின் முழுமையான ஞானத்துடன், அனைத்து துறைகளிலும் முழுமையான வளர்ச்சிப் பாதையை வகுக்கும் பாரதத்தை நாம் கட்டியெழுப்ப வேண்டும். உலகிற்கு மகிழ்ச்சியும், அமைதியும் தரும் புதிய பாதையை, பாரதம் காட்ட வேண்டும்.
நம் தேசிய சிந்தனையில் வேரூன்றி நின்று, உலகத்திற்கு புதிய வளர்ச்சிப் பாதையை அமைக்க வழிகாட்ட வேண்டும். வாழ்க்கையில் நாம் செய்யும் அனைத்தும் உயர்ந்ததாக இருக்க வேண்டும்; அது சமுதாயத்திற்கும், தேசத்திற்கும், பாதுகாப்பு, ஒற்றுமை, சமூக நீதி, முன்னேற்றம், மரியாதை ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இந்தப் பொறுப்பு குறித்து, நாம் எப்போதும் விழிப்புடன் இருப்போம்.

பாரதம் விஸ்வகுருவாய் ஆவதற்கு, நாம் அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன், கடுமையாய் உழைக்க வேண்டும். இதற்கு மாற்று வழியோ, குறுக்குப் பாதையோ கிடையாது. மிகச் சாதாரணமான மனிதனும் கூட, தனது தனிப்பட்ட, குடும்ப, சமூக, தொழில், வாழ்க்கையில் சிறிய நற்செயல்களின் மூலம் மாற்றத்தை ஏற்படுத்தி, தனது கடமையை நிறைவேற்ற முடியும்.
பஞ்ச பரிவர்த்தன் (சமுதாயக் கடமைகளை உணர்த்தும் ஐம்பெரும் மாற்றங்கள்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் முயற்சிகளும், ஸ்வயம்சேவகர்கள் மேற்கொள்ளும் பல்வேறு செயல்பாடுகளும், இந்த அணுகுமுறையையே பின்பற்றுகின்றன. அவை படிப்படியாக தேச சேவையிலும், தேசபக்தியின் பாதையிலும் ஒவ்வொருவரையும் வழிநடத்துகின்றன.
சங்கப் பணியின் நூற்றாண்டு விழாவையொட்டிய நிகழ்ச்சிகளை நிறைவு செய்து, அதன் நோக்கங்களை எட்டிய பின்னர், எப்போதும் போல புத்துணர்ச்சியுடனும், கட்டுப்பாடு வாய்ந்த ஒருங்கிணைந்த, உழைப்பாற்றல் மிக்க, வெற்றிகரமான சமுதாயத்தை உருவாக்குகிற இலக்கை நோக்கி சங்கம் தனது பயணத்தைத் தொடரும்.
கேசவர் கனவாம் லட்சியம் எய்திட
அவர்தம் பாதையில் முன்னேறிடுவோம்
அதற்கெனவே நம் வாழ்வுதனை அர்ப்பணித்திடுவோம்
பாரோர் நம்மை உயர்வாய்ப் பார்த்திட
பாரதத்தாயவள் பெருமிதம் கொள்வாள்
லட்சிய கீதமிசைத்தே முன்னேறிடுவோம்
அயரா வீறுநடை பயின்றே அணிவகுத்தே!