காலஞ்சென்ற சடகோபன் ஜி

அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி) முன்னாள் தேசிய செயலாளர், மாநில அமைப்புச் செயலாளர், விஜயபாரதம் வார இதழின் முன்னாள் ஆசிரியர், எழுத்தாளர், பேச்சாளர் என திகழ்ந்த சங்கப் பிரச்சாரக் ஸ்ரீ. ந. சடகோபன் ஜி, 2026 அக்டோபர் 20 அன்று இறைவனடி சேர்ந்தார். மாணவர் சக்தி மாத இதழின் முன்னாள் ஆசிரியர் மு.சந்திரன் அவருடனான தனது நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்…

ஹிந்துத்துவ பணிகளுக்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்து, திருமணம் எதுவும் செய்து கொள்ளாமல் தேசப்பணி செய்து, பல இளம் பொறுப்பாளர்களை உருவாக்கியவர். மிகப்பெரிய அறிவுஜீவி. சொல் வேறு, செயல் வேறு என்று இல்லாமல் வாழ்ந்தவர்.
1980ல், ஏ.பி.வி.பி தொடர்பில் வந்த நான் இன்றும் தேசப் பணியில் தொடரக் காரணம், எனக்கான குரு பீடத்தில் இருந்தவர்களும், சகாக்களாக அமைந்தவர்களும் தான். 1983ல் முதன்முறை திருச்சிக்கு கோவிந்தாச்சார்யா ஜி செல்ல இயலாத காரணத்தால், அவருக்கு பதிலாக சென்று திருச்சி பைட்டக்கில் பங்கேற்றேன். அந்த நேரத்தில் எனக்கு அப்போதைய கோட்ட பிரச்சாரக் தனுஷ் ஜி, ஏ.பி.வி.பி பணிக்காக வந்திருக்கிறீர்கள், ஸ்ரீரங்கம் சென்று சிலரை சந்திக்குமாறு கூறியவர்களில் சடகோபன் ஜி, அண்ணாமலை ஜி இருவர் பெயரை தந்தார். மாலை பைட்டக் திருவானைக்கோவிலில் சந்திக்க திட்டம். போன் எதுவும் இல்லாத காலக்கட்டம். வீடு தொடர்பு மட்டுமே.

சடகோபன் ஜியை தேடிச் சென்ற நிலையில், அவர் வீட்டில் இல்லை. தந்தையாருடன் பேசி மாலை சடகோபன் ஜியை பைட்டக் வரச் சொல்லிவிட்டு வரும்போது, அவர் தந்தை வளையல் கடை விஜி அவர்களை சந்தித்து தகவல் தந்து செல்லுமாறு கூற அவரையும் பார்த்து பேசி விட்டு கிளம்பினேன். மாலை கூட்டத்திற்கு வந்தவர்கள் 4 பேர் மட்டுமே, அதில் ஒருவர் சடகோபன் ஜி. முதல் சந்திப்பிலேயே இவரை இயக்கத்தில் இழுக்க வேண்டும் என மனதில் தோன்றி விட்டது.
அப்போது தான் தமிழகத்தில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்திற்கு கட்டமைப்பு ஏற்பட்டு வந்த காலகட்டம். 1981ல், “பாரதி காட்டும் பாதை” எனும் அஞ்சல் வழி பயிற்சி மூலம், தொடர்பில் வந்த பலரை தொடர்பு கொள்வதன் மூலம் புதிய மாணவர் பட்டாளம் உருவாக்க முடியும் என்றார். 1984ல், வேலூரில் நடைபெற்ற முதல் மாநில மாநாட்டிற்கு திருச்சியிலிருந்து மாணவர்களை திரட்டி வரும் பணி சடகோபனுக்கு தரப்பட்டது. பிறகு மாநில பயிற்சி முகாம் திருச்சியில் நடத்த திட்டமிடப்பட்டது.

மாநில அமைப்புச் செயலாளராக ஆதித்யன் ஜி, தென்பாரத அமைப்புச் செயலாளர் கோவிந்தாச்சார்யா ஜி, அகிலபாரத பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொஸபாளே ஜி. ஆந்திராவிலிருந்து கௌரிசங்கர் ஜி, கேரளாவிலிருந்து முரளிதரன் ஜி என பலரும் தமிழகத்தில் ஏ.பி.வி.பி வளர்ச்சிக்கு அடிகோலிய காலக்கட்டமது.
சடகோபன் ஜியை ஏ.பி.வி.பி பணியில் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்தேன். ஏனெனில் அவர் பா.ஜ.க.வின் இளைஞரணியில் பொறுப்பில் இருந்தார். 1986ல் தூத்துகுடியில் கைவல்ய மடத்தில் மாநில ஊழியர் பயிற்சி முகாம் நடைபெற்றது. அப்போது மாநில பொருளாளர் பொறுப்பு எனக்கு.

முகாமில் யார் எல்லாம் முழுநேரம் வர இயலும் என்றபோது, தான் முழுநேர ஊழியராக வர விருப்பம் தெரிவித்த காரணத்தால், அவரை முழுநேர ஊழியராக ஒரு பகுதிக்கு செல்ல அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அந்த நேரத்தில் முகாம் முடிந்து நானும், சடகோபன் ஜியும் பஸ்ஸில் ஒன்றாக பயணிக்கும் வாய்ப்பு அமைந்தது. அப்போது தான் கூறினார், தனக்கு சட்டக் கல்லூரியில் பயில அழைப்பு வந்துள்ளதாகவும், என்ன செய்யட்டும் என்ற குழப்பத்தில் இருப்பதாகவும் கூறினார்.
அப்போது அவரிடம் தாங்கள் சட்டம் படித்து முடித்து விட்டு முழுநேர ஊழியராக வருவீர் என்றால், இயக்க பொறுப்பாளர்களிடம் பேசி அனுமதி வாங்கித் தருவது என் பொறுப்பு என்றேன். தயார் என்றார். அவ்வாறே சட்டம் பயின்று முடித்து விட்டு, முழுநேரப் பணிக்கு வந்து, சொன்ன சொல்லை காத்த சத்தியசீலன் சடகோபன் ஜி.

நெல்லையில் இருந்து முழுநேரப் பணியாற்றிய வேளையில், தென் தமிழகத்தில் பல அருமையான மாணவ தலைவர்களை உருவாக்கியதில் சடகோபன் ஜிக்கு பெரும் பங்கு உண்டு. சிறந்த பேச்சாளர், மனிதர்களை கணிப்பதில் வல்லவர், மனதில் பட்டதை பட்டவர்த்தனமாக பேசக்கூடியவர். மாணவர்களை எப்படி எல்லாம் இயக்கப் பணியில் ஈடுபடுத்தினால் அவர்கள் இயக்கத்தை புரிந்துக் கொள்ள இயலும் என்று அப்படி பணிகளை வழங்கக் கூடியவர். ஏ.பி.வி.பி.யின் தேசிய செயலாளராக பணியாற்றினார்.
தற்போது பி.எம்.எஸ் அகில இந்திய அமைப்புச் செயலாளராக இருக்கும் சுரேந்திரன் ஜி, 1992ல் தமிழக அமைப்புச் செயலாளராக செயல்பட்டு, பிறகு தென்னிந்திய அமைப்பு செயலாளராக பொறுப்பேற்ற வேளையில், சடகோபன் ஜி மாநில அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்று திறம்பட செயலாற்றினார். இவருடைய காலக்கட்டத்தில் தான் ஏ.பி.வி.பி.யில் பணியாற்ற பலர் முழுநேரமாக வரத் துவங்கினர்.

இயக்கப்பணிக்கென தமிழகம் எங்கும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்தவர். 1990, 2000-களில் அவரது பணி திருநெல்வேலியை மையமாகக் கொண்டு கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம், தென் மாவட்டங்கள், தமிழகத்தின் எல்லா இடங்களுக்கும் தொடர்ந்து பயணம் செய்துகொண்டிருந்தார். தேசியச் செயலாளராக இருந்தபோது, அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றிலும் விரிவாகப் பயணம் செய்தார்.
ஏ.பி.வி.பி.யில் அவர் செயலாற்றிய காலத்தில், காரியகர்த்தர்கள் தாங்களாகவே முடிவெடுக்க அவர் உதவினார்; அதுதான் முக்கியம் என்று கருதினார். இத்தகைய காரியகர்த்தர்களை பல தளங்களில் உருவாக்கியுள்ளார். வித்யார்த்தி விஸ்தாரக் போன்ற குறுகியகால முழுநேர ஊழியர்கள் உட்பட, பல முழுநேர ஊழியர்களை அவர் இயக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். ஏற்கனவே முழுநேர ஊழியர்களாக இருந்தவர்களையும் ஊக்கமூட்டி, அவர்கள் மேலும் சிறப்பாகச் செயல்பட பல நேரங்களில் பல விதங்களில் உதவி புரிந்திருக்கிறார்.
தனியாகப் பேசும்போதும் வெறும் தகவல்களால் மட்டுமின்றி, என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவை அளிப்பவர். எந்த விஷயத்தை எடுத்தாலும், அது நாட்டுக்கு நல்லதாக அமைய வேண்டும், நாட்டு மக்களுக்குப் பயனுள்ளதாக முடிய வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர். ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியிலும் உரையாற்றுவார்; சில நேரங்களில் இரண்டு மூன்று இளைஞர்களுடனும் உரையாடுவார். அவர் ஒரு சிறந்த எழுத்தாளரும் கூட. இந்தி நன்றாகப் புரியும், பேசவும் செய்வார். அதனால் நாடு முழுவதும் நடப்பவற்றைக் கிரகித்து, அவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்வது அவருக்கு மிக எளிதாக இருந்தது. மிகவும் எளிமையானவர்; அதே நேரத்தில் எதற்கும் அஞ்சாதவர்.

தன் எண்ணங்களைத் துணிவுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்பவர். அந்தத் தைரியம், பல காரியகர்த்தர்களுக்குப் பல சமயங்களில் தெளிவான முடிவுகளை எடுக்க உத்வேகம் அளித்தது.
அவர் சொல்வார்: “நாம் மனிதர்களை உருவாக்கும் பணியில் இருக்கிறோம். ஆகவே ஒவ்வொருவரும் தாமாகவே முடிவெடுக்க வேண்டும்; ஒவ்வொரு காரியகர்த்தரும் சுயமாகச் செயல்பட வேண்டும். நமக்கு இன்னும் அதிகமான காரியகர்த்தர்கள் தேவை; சுய உந்துதல், சுயக்கட்டுப்பாடு, சுயமாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் தேவை” என்பார்.
சங்கப் பணிக்கு திரும்பிய பிறகு, சங்க செய்தித் தொடர்பாளாராக சிறப்பாக செயல்பட்டார். பின்பு விஜயபாரதம் வார இதழின் ஆசிரியர் பொறுப்பில், பத்திரிகையை மேலும் மிளிரச் செய்தார். அவரின் வேகமான பணிக்கு ஒரு சிறு தடை போல் அவருடைய உடல்நலன் பாதிப்பு. அதனால் சுற்றுப்பயணம் செய்ய இயலவில்லை. அப்போதும் அவரின் வாசிப்பு குறையவில்லை. உலக நடப்புகள் குறித்து தெளிவாக மக்கள் எளிதில் புரிந்துக் கொள்ள. அறிந்துக் கொள்ளும் வகையில், இணையத்தளத்தில் அவரின் செயல்பாடு அமைந்திருந்தது. தனது இறுதி மூச்சை விடும் வரை அவர் ஸ்வயம்சேவக் பணியை அவர் கைவிடவே இல்லை, வாழ்க்கையில் குறைந்தது 100க்கும் மேற்பட்ட தேசியவாதிகளை உருவாக்கியிருப்பார்.
அவர்கள் இன்று பல்வேறு துறைகளில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் தேசிய சிந்தனைகளை தனக்கு நெருக்காமனவர்களிடம் விதைத்தாலே அந்த எண்ணிக்கை பெருகும்! அவர் வழியில் வாழ்ந்துக்காட்டி அவர் விட்டுச் சென்ற பணிகளை தொடர்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும். 