சரக்கு ரயில் சேவைக்கு மூன்று புதிய வழித்தடம்

அதிக ரயில் போக்குவரத்து நெரிசல் உள்ள வழித்தடங்களில் நெரிசலை குறைப்பதற்காகவும், பயணியர் ரயில் போக்குவரத்து சேவையை மேம்படுத்தும் நோக்கத்திலும், சரக்கு ரயில்களுக்கு பிரத்யேகமான மூன்று பொருளாதார வழித்தடங்களை உருவாக்க உள்ளதாக நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். அதன் விபரம்: எரிசக்தி, கனிமம் மற்றும் சிமென்ட் துறைகளுக்கான வழித்தடம், துறைமுகங்களை இணைக்கும் வழித்தடம், அதிக நெரிசல் உள்ள ரயில் வழித்தடம் என, மூன்று பொருளாதார ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதன் வாயிலாக, ரயில் போக்கு வரத்து நெரிசல் குறைக்கப்படுவதுடன், பயணியர் ரயில் சேவை மேம்படுத்தப்படும். இது பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்யப்படுவதுடன், பயண நேரத்தையும் கணிசமாக குறைக்கவும் உதவும்.

இந்த மூன்று புதிய பொருளாதார வழித்தடங்கள் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுடன், சரக்கு போக்குவரத்து கட்டணங்களை வெகுவாக குறைக்கும். மேலும், பயணியரின் பாதுகாப்பு, வசதி மற்றும் சொகுசான பயணத்தை அளிக்க, 40,000 சாதாரண ரயில் பெட்டிகள், வந்தே பாரத் ரயில் பெட்டிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும்.

கடந்த ஆண்டு அக்டோபரில் துவங்கப்பட்ட பிராந்தியங்களுக்கு இடையிலான விரைவு ரயில் போக்குவரத்து சேவையான ஆர்.ஆர்.டி.எஸ்., ரயில்கள், பிற நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.