சபரிமலை கோயிலில் குழந்தைகள் மாற்றுத்திறனாளிகளுக்காக தனி வரிசை

 

சபரிமலையில் குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக சன்னிதானம் பெரிய நடை பந்தலில் தனி கியூ ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலையில் நடப்பு மண்டல சீசனில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ள நிலையில் திருப்பதி மாடலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுப்பப்படுகின்றனர். மர கூட்டத்திலிருந்து சன்னிதானத்துக்கு சரங்குத்தி வழியாக செல்லும் போது ஆறு கியூ காம்ப்ளக்ஸ்களில் பக்தர்கள் தங்க வைக்கப்பட்டு அங்கிருந்து கட்டம் கட்டமாக அனுப்பப்படுகின்றனர்.

பின் இவர்கள் பெரிய நடைபந்தலில் உள்ள கியூவில் காத்து நின்று 18 படி ஏற வேண்டும். இதில் ஒரு கியூ குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுடன் அவரது பெற்றோர் ஒருவரும் அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயது முதிர்வால் சோர்வடைந்தவர்கள் இந்த கியூவில் அனுமதிக்கப்படுவார்கள்.

இவர்கள் அதிக நேர காத்திருப்பு இல்லாமல் 18 படி ஏறி சென்று தரிசனம் நடத்த முடியும்.குழுக்களாக வருபவர்கள் இவ்வாறு பிரிந்து தனி கியூவில் செல்லும்போது எங்கு சந்திக்க வேண்டும் என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு செல்லும்படி தேவசம்போர்டு கேட்டுக் கொண்டுள்ளது.

சபரிமலை சன்னிதானத்தில் உள்ள ஓட்டல்களில் உணவு தரத்தை கண்காணிக்கவும், பக்தர்களின் புகார்களை கேட்கவும் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் புகார்கள் இருந்தால் 98471 02687, 97456 02733 அலைபேசி எண்களில் தெரிவிக்கலாம்.