‘சத்திய ஞானசபையை ஆக்கிரமிக்கும் முயற்சியை தி.மு.க., நிறுத்த வேண்டும்!’

கடலுார், வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபைக்கு சொந்தமான இடத்தை, சர்வதேச மையம் என்ற பெயரில் ஆக்கிரமிக்கும் பணியை, தி.மு.க., துவங்கியிருக்கிறது. வள்ளலாரின் ஆன்மிக பணிகளுக்காக, மக்கள் தானமாக வழங்கிய நிலத்தில், 150 ஆண்டுகளுக்கு மேலாக அனைவரின் பசி தீர்க்கும் மேன்மையான பணி நடப்பதோடு, லட்சக்கணக்கான பக்தர்கள் தைப்பூச தினத்தன்று ஜோதி தரிசனமும் பெற்று வருகின்றனர்.

உண்மையில் தி.மு.க., அரசின் நோக்கம், சர்வதேச மையம் அமைப்பது தான் என்றால், சத்திய ஞான சபைக்கு சொந்தமான ஏற்கனவே ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, 30 ஏக்கர் நிலத்தை மீட்டோ அல்லது வேறு இடத்திலோ அமைக்க வேண்டும். மீண்டும் சத்திய ஞானசபைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க கூடாது என்று கண்டனம் தெரிவித்திருந்தோம்.

பின், வள்ளலாரின் பக்தர்கள் மற்றும் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், லோக்சபா தேர்தல் காரணமாகவும், கட்டுமான பணிகளை நிறுத்தி வைத்து நாடகமாடிய தி.மு.க., தற்போது, காவல் துறை பாதுகாப்புடன் மீண்டும் பணி துவங்கியிருப்பதாக தெரிய வருகிறது. அரசுக்கு பல ஆயிரம் ஏக்கர் இருக்கும் போது, விவசாய நிலங்களை அழித்து, ‘சிப்காட்’ பூங்கா அமைப்பது, சத்திய ஞான சபைக்கு சொந்தமான இடத்தில் மையம் அமைப்பது என, தி.மு.க., அரசின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு உரியதாகவே இருக்கின்றன.

மக்கள் மற்றும் பக்தர்களின் விருப்பத்திற்கு எதிராக சத்திய ஞான சபையை ஆக்கிரமிக்கும் முயற்சிகளை, தி.மு.க., அரசு உடனே நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.