கோரக்பூர் மருத்துவமனை சோகம்: பிஞ்சுகள் உதிர்ந்த வேளையில் நஞ்சாக செய்தி பரப்பினார்கள்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூரிலும் தமிழ்நாட்டில் உள்ள ஆம்பூரிலும் அண்மையில் நடைபெற்ற சம்பவங்கள் துன்பகரமானவை. ஆனால் அதே நேரத்தில் இந்த நிகழ்வுகள், ஓரளவுக்கேனும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது.

கோரக்பூர் விவகாரத்தை கவனிப்பதற்கு முன் ஆம்பூர் பிரச்சினையை நோக்குவோம். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் ஆகஸ்டு 13ம் தேதி பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லை. இதனால் இருவர் உயிர் இழக்க நேரிட்டது. அது மட்டுமல்ல பிரேதங்களை எடுத்துச்செல்லக் கூட உரிய வழிவகை செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் இத்தகைய அசிரத்தையான போக்கு காணப்படுகிறது என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.

கோரக்பூர், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தொகுதி. ஒருவார காலத்திற்குள் சுமார் 70 குழந்தைகள் கோரக்பூரில் உள்ள பாபா ராகவதாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் உயிர் இழந்துள்ளன. இதற்கு பிரதான காரணம் அவசர சிகிச்சைப் பிரிவில் போதுமான அளவு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லை என்று உடனடியாக செய்திகள் இறக்கைகட்டி பறந்தன.

குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ரூ. 68 லட்சம் பாக்கி உள்ளது. இதனால்தான் ஆக்ஸிஜன் சிலிண்டர் சப்ளை பாதிப்புக்கு இலக்கானது என்றும் அடுத்தடுத்து செய்திகள் பரவின. ஆனால் இந்த விவகாரம் ஒரே நாளில் பூதாகாரமாக உருவெடுத்துவிட்டதா என்பதை குற்றஞ் சாட்டுபவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறார்கள்.

இந்தப் பிரச்சினை இதற்கு முன் ஆட்சி நடத்திய அகிலேஷ் யாதவ் காலத்திலிருந்தே இருக்கிறது. இப்போதும் இது நீடித்துள்ளது என்று சிலர் விளக்கம் அளித்துள்ளனர். இதற்கிடையே ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் இறக்கவில்லை, மூளைக் காச்சல் எனப்படும் கடுமையான நோய்த் தொற்று காரணமாகத்தான் குழந்தைகள் உயிர் இழந்துள்ளன என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

ஆண்டுதோறும் பாரதத்தில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு விதமான நோய்த் தொற்று பரவுவது வழக்கமாக உள்ளது. நோய் நாடி மட்டும் சிகிச்சை அளிக்கக் கூடாது நோய் முதல் நாடி சிகிச்சை அளித்தால்தான் எதிர்காலத்தில் இத்தகைய நோய்கள் உக்கிரமாகத் தாக்காது என்பதை உத்தரவாதப்படுத்த முடியும். டெங்கு, பன்றிக் காய்ச்சல், மூளை அழற்சி என வெவ்வேறு வியாதிகள் தாக்கினாலும் இவற்றுக்கெல்லாம் அடிப்படை போதுமான அளவு சுகாதார வசதி இல்லை என்பதுதான்.

அமெரிக்கா போன்ற நன்கு வளர்ந்த நாடுகளில் மக்கள் தொகை அளவுக்கும் மருத்துவர்களின் அளவுக்கும் இடையில் உள்ள விகிதாச்சாரம் சுகாதார தரத்துக்கு ஏற்புடைய வகையில் உள்ளது. ஆனால் நம் நாட்டில் இந்த விகிதாச்சாரம் சுகாதாரத் தரத்திற்கு ஏற்புடைய வகையில் இன்னும் உயரவில்லை. இதை நோக்கி நெடுந் தொலைவு பயணிக்க வேண்டி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தூய்மை பாரதத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருவது வரவேற்கத் தக்கது. வீடுகளும் வீதிகளும் தூய்மையாக இருந்தால் இப்போது படையெடுக்கும் வியாதிகளில் பலவற்றை விரட்டியடித்துவிட முடியும்.

கிழக்கு உத்தரப் பிரதேச மாவட்டங்களில் நுரையீரல் தொற்றால் குழந்தைகள் மரணமடைவது காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருக்கும் சோகமாகும். பஞ்ச பூதங்களும் மாசுபடுத்தப்பட்டு வருவதுதான் இதற்கு மூல காரணம். 1978 முதல் இதுவரை 25,000த்துக்கும் அதிகமான குழந்தைகள் நுரையீரல் தொற்றால் மரணமடைந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நுரையீரல் தொற்று, பன்றிகளிடமிருந்து மனிதர்களுக்கு கொசுக்களால் பரவுகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தொடக்கத்திலேயே கவனித்தால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும். ஆனால் தொடக்கத்திலேயே மருத்துவ மனையை நாடுவோர் சொற்பமே. இதனால்தான் உயிர் இழப்பு அதிகமாகிவிடுகிறது. இதை அரசியல் காரணங்களின் அடிப்படையில் இப்போது பெரிதுபடுத்துகிறார்கள். எனினும் இதன் மைய இழையாக உள்ள சுகாதாரக் குறைபாட்டைக் கட்டாயம் களையவேண்டும். சுகாதார பிரச்சினையை அரசியல் சிக்கலாக மடைமாற்றம் செய்வது கண்டனத்துக்குரியது. குழந்தைகளின் உயிர்களை பகடைக்காய்களாக்கி அரசியல் ஆதாயம் தேடத் துடிப்பவர்களே உண்மையான நோயாளிகள் என்றால் மிகையல்ல.

சுதந்திர தின உரையாற்றிய உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் மூளை வீக்கம் உள்ளிட்ட நோய்களுக்கான தீர்வு தூய்மை இந்தியா திட்டத்தில் பொதிந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது சாலப் பொருத்தமே. இதை அவர் நிச்சயமாக முன்னெடுப்பார் என்று உ.பி. மக்கள் உறுதியாக நம்புகிறார்கள்.

இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக  டாக்டர் கபீல் என்பவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர்மீது மருத்துவ ரீதியான, பொருளாதார ரீதியான எண்ணற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பிரச்சனையை திசை திருப்புவதற்காகவே இதை அவர் பூதாகாரப்படுத்தினார் என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. முதல்வர் யோகி ஆதித்யநாத் எடுத்து வரும் செம்மையான நடவடிக்கைகள் காரணமாக மோசடியில் ஈடுபட்டு வந்த நபர்கள் கலக்கமடைந்துள்ளனர். இதனால் இல்லாததையும் பொல்லாததையும் பரப்பி குட்டையை குழப்பி ஆதாயம் தேட துடிக்கின்றனர். கபிலைப் போன்ற நபர்களை களையெடுப்பதில் உ.பி. அரசு முனைப்பு காட்டி வருகிறது. போர்கால அவசரத்துடன் இத்தகைய நடவடிக்கை மூலம், எதிர்காலத்தில் பிஞ்சுகள் உதிராது என்பதை முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதிப்படுத்துவார் என்பது திண்ணம்.