கோயில் நிலம் நிலம் மீட்பு

காஞ்சீபுரத்தில் உள்ள ஆதிபீடா பரமேஸ்வரி காளிகாம்பாள் கோயிலுக்கு சொந்தமான சுமார் மூன்று கோடி ரூபய் மதிப்பிலான மனை, கட்டடம் பெரிய காஞ்சீபுரம் ஜவஹர்லால் தெருவில் உள்ளது. இந்த சொத்திற்கு ரூ. 28 லட்சம் வரையிலான வாடகை செலுத்தாமல் பிரசாந்த், நந்தகுமார் ஆகியோர் ஆக்கிரமித்தும், அனுபவித்தும் வந்தனர். இது தொடர்பாக காஞ்சீபுரம் கோட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த இணை ஆணையர், உரிய கால அவகாசம் கொடுத்தும் வாடகை நிலுவைத் தொகையை செலுத்த தவறியதால் ஆக்கிரமிப்பை அகற்றி அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்து கோயில் வசம் ஒப்படைக்குமாறு செயல் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து, காஞ்சீபுரம் அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறையினர், வருவாய்த்துறை, மின்வாரிய அதிகாரிகளுடன் சென்று ஆக்கிரமிப்பு இடத்தை மீட்டு கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்துள்ளனர்.