கைமாறிய கமண்டலம்

ஒருமுறை புத்தர் அவரது சீடரோடு பிச்சை ஏற்க ஒரு வீட்டிற்குச் சென்றார். அங்கிருந்த பெண்மணி புத்தரை மிகவும் கடினமாக ஏசினாள். நன்றாய்த் தானே உடம்பு இருக்கிறது. ஏன் இப்படி ஊர்ப்பணத்தில் வாழ வேண்டும்?” என்றாள். உடன் இருந்த புத்தரின் சீடருக்குக் கோபம் வந்துவிட்டது. அவர் அந்தப் பெண்ணோடு சண்டை போட முயன்றார். அப்போது புத்தர் அவரைத் தடுத்து நிறுத்தினார்.

பின், புத்தரும் அவரது சீடரும் நடக்கத் தொடங்கினர். புத்தர் தனது கமண்டலத்தைச் சீடரிடம் கொடுத்து அதை எடுத்து வரச் செய்தார். சற்று நேரம் கழித்து, புத்தர் சீடரிடம் கேட்டார். இது யாருடைய கமண்டலம்” சீடர்கள் கூறினர், உங்களுடையது. கொஞ்ச தூரம் போன பிறகு புத்தர் கூறினார். இந்தக் கமண்டலம் இனி எனக்கு வேண்டாம், நீயே வைத்துக் கொள்” என்றார்.

சற்று நடந்தபிறகு, புத்தர் மீண்டும் அதே கேள்வியைச் சீடரிடம் கேட்டார். இது யாருடைய கமண்டலம்?” சீடர் கூறினார். இது என்னுடையது”. புத்தர் கேட்டார், என்னப்பா இது? முன்பு கேட்டபோது என்னுடையது என்றாய்! இப்போது உன்னுடையது என்கிறாயே!” சீடர், முன்பு உங்களுடைய கமண்டலத்தை நான் தூக்கி வந்தேன். இப்போது இதை நீங்கள் எனக்கு என்று தந்துவிட்டதால், நான் எடுத்துக்கொண்டேன். எனவே இது என்னுடையதாகிவிட்டது.” என்றார்.

புத்தர் சிரித்தவாறே கூறினார், ஆக, எடுத்துக்கொண்டால்தான் உன்னுடையது! இல்லாவிட்டால் அது உன்னுடையது அல்லவே! அதுபோல, அந்தப் பெண்மணி திட்டியதை நீ எடுத்துக்கொண்டால்தானே அது உன்னுடையது. இல்லையெனில் அது உன்னுடையது அல்லவே? ஏன் தேவையற்றதை எடுத்துக்கொள்ள வேண்டும், கோபப்படவேண்டும்?” என்று புத்தபிரான் அறிவுறுத்தினார்.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில் அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்