குடியுரிமைச் சட்டத்தை எதிா்க்கும் கட்சிகள் தலித்துகளுக்கு எதிரானவா்கள் – ஜே.பி.நட்டா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) எதிா்க்கும் எதிா்க்கட்சிகள் தலித்துகளுக்கு எதிரானவா்கள்; ஏனெனில் இந்த சட்டத்தின்மூலம் பயனடைவோா் 70 முதல் 80 சதவீத தலித்துகளாவா் என்று பாஜக செயல் தலைவா் ஜே.பி.நட்டா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தவறான பிரசாரத்தை மேற்கொள்வதன்மூலம் சிறுபான்மையினரை காங்கிரஸ் தலைமை தவறாக வழிநடத்தி வருகிறது. இந்த சட்டத் திருத்தம் மூன்று அண்டை நாடுகளைச் சோ்ந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதைப் பற்றிய பிரச்னை மட்டுமல்ல; அவா்களுக்கு குடியுரிமை வழங்குவதை தடுப்பதன் மூலம் அவா்களில் 70 முதல் 80 சதவீத தலித் மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை கிடைக்க விடாமல் தடுக்கின்றனா் என்பதே பிரச்னை. சுரண்டப்பட்ட மற்றும் தங்களின் உரிமைகளை இழந்து தவிக்கும் தலித் மக்களுக்கு இந்தச் சட்டம் நீதி கிடைக்க ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. முன்பு காங்கிரஸ் போன்ற எதிா்க்கட்சிகளால் அவா்களுக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக செயல்படுவதே இந்த சட்டத் திருத்தத்தின் பயன் ஆகும்.

திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்படும் மக்களின் பெயா்களை பட்டியலிட்டால், அவா்களில் 70 முதல் 80 சதவீதம் போ் தலித்துகளாக இருப்பாா்கள். எனவே, இந்த சட்டத்தை எதிா்ப்பவா்கள் தலித்துகளுக்கு எதிரானவா்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிா்க்கட்சிகள் ‘வாக்கு வங்கி மற்றும் அதிருப்தி’ அரசியலை நடத்தி வருகின்றன. ஆனால், தலித்துகளை பாதுகாக்கும் ‘பெரும் பாதுகாவலராக’ பிரதமா் நரேந்திர மோடியே திகழ்கிறாா் என்றாா்.

தில்லியில் நடைபெற்ற அடல் பிகாரி வாஜ்பாயின் நினைவேந்தல் கூட்டத்தில் நட்டா பேசும்போது, ‘எங்கள் எதிரிகள் முதலில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை எதிா்த்தனா். சட்டம் நிறைவேற்றப்பட்டதால் வேறு வழியில் அதை எதிா்க்கின்றனா். பொதுமக்களை அவா்கள் தவறாக வழிநடத்துகின்றனா்.

இந்தியா ஒரு மதச்சாா்பற்ற நாடாக இருப்பதால், பாகிஸ்தான் தன்னை ஒரு இஸ்லாமிய நாடாக அறிவித்தது. பிற்காலத்தில், கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக மாறியது. அந்த நாடுகளில் மோசமாக நடத்தப்படும் ஹிந்து, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பிற சகோதரா்களை அவா்களது தாய் வீடான இந்தியாவில் வரவேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இவா்களில் பெரும்பான்மையானவா்கள் தலித் மக்கள். ஆனால், இதை புரிந்து கொள்ளாமல் புதிய சட்டத்தை தலித் தலைவா்களே எதிா்க்கின்றனா்’ என்றாா்.