கிராம மக்கள் உதவியுடன் நேபாளத்துக்கு அரிசி கடத்தல்

அரிசி  ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளதை தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் மஹாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து, நம் அண்டை நாடான நேபாளத்துக்கு அரிசி கடத்துவது அதிகரித்துள்ளது.

அடுத்தடுத்து பண்டிகைகள் வருவதை அடுத்து, அரிசி விலையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கத்தில், பாசுமதி ரகத்தை தவிர இதர வகை அரிசி ஏற்றுமதிக்கு மத்தியஅரசு ஜூலையில் தடை விதித்தது. இதையடுத்து, நேபாளத்தில் அரிசி விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் எல்லையில் அமைந்துள்ள உ.பி.,யின் மஹாராஜாகஞ்ச் மாவட்டத்தில் இருந்து, அரிசி கடத்தலில் ஈடுபடுவோர், நேபாளத்துக்கு அரிசி கடத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர்.

உள்ளூர் கிராம மக்களை, இந்த கடத்தலுக்கு அவர்கள் பயன்படுத்துகின்றனர். வேலை இல்லாத இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள் வாயிலாக இவர்கள் அரிசி கடத்துகின்றனர். 10 கிலோ அடங்கிய பைகள் அல்லது சிறிய வாகனங்கள் வாயிலாக அதிகாலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் இந்த அரிசி கடத்தல் அரங்கேறுகிறது. இந்த கடத்தலில் ஈடுபடுவோருக்கு 1 குவின்டால் அரிசி கடத்தலுக்கு, 300 ரூபாய் பணம் தரப்படுகிறது. நேபாளத்தில் எல்லையில் அமைந்துள்ள சிறிய குடோன்களுக்கு கடத்தப்படும் இந்த அரிசி, வாரம் ஒரு முறை அங்கிருந்து பெரிய குடோன்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது. நேபாளத்தின் லும்பினி மாகாணத்தின் நாவல்பராசி மற்றும் ருபான்டேஹி மாவட்டங்களுடன், உ.பி.,யின் மஹாராஜாகஞ்ச் மாவட்டம், 84 கி.மீ., எல்லையை பகிர்வதால், இந்த கடத்தல் எளிதாக நடப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர்