காஷ்மீரில் ஒவ்வொரு கிராமத்திலும் 5 பேருக்கு அரசு வேலை: உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

காஷ்மீரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும், தகுதியுள்ள தலா ஐந்து பேருக்கு அரசுப்பணி வழங்கப்படும் என்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் கடந்தாண்டு உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதன் மூலம்,  அங்குள்ள 4,490  ஊராட்சிகளுக்கு, 35,096 ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.

அண்மையில், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்து, வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்தது; இதன் மூலம், அந்த மாநிலம் தேசிய நீரோட்டத்துடன் இணைத்துள்ளது. அங்கு பல்வேறு வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு  திட்டங்களை வகுத்துள்ளது.

இச்சூழலில், காஷ்மீர் மாநில ஊராட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் அடங்கிய 20 பேர் குழு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, செவ்வாய் கிழமையன்று டெல்லியில் சந்தித்தது. அப்போது, தங்களுக்கு அச்சுறுத்தல் உள்ளதால், உரிய பாதுகாப்பு அளிக்குமாறு அக்குழுவினர்  கேட்டுக்கொண்டனர்.

ஊராட்சி தலைவர்கள் மத்தியில் அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

காஷ்மீரில், பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள அனைத்து ஊராட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு, உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.  அத்துடன், அவர்களுக்கு ரூ. 2 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும். மேலும், ஊராட்சி உறுப்பினர்களின் மதிப்பூதியம் தற்போதுள்ள ரூ.2,500 என்பதை உயர்த்துவது பற்றியும் பரிசீலிக்கப்படும்.

காஷ்மீரின் வளர்ச்சியில் அரசு அக்கறை கொண்டுள்ளது. அங்குள்ள ஒவ்வொரு கிராமத்தை சேர்ந்த, தகுதியுள்ள தலா 5 இளைஞர்களுக்கு,  அரசு வேலை வழங்கப்படும்.  காஷ்மீர் மாநிலத்தில்,  15 முதல் 20 நாட்களில், மொபைல்போன் சேவை சீரமைக்கப்படும்.

நிலைமை படிப்படியாக சீரடைந்ததும், காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும். ஊராட்சி தலைவர்கள், தங்களது கிராமங்களுக்கு சென்று 370வது பிரிவு நீக்கத்தால் உண்டாகும் பலன்களை, மக்களிடம் விளக்க வேண்டும் என்று, அமித் ஷா அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பின் போது, காஷ்மீரை சேர்ந்த மத்திய அமைச்சரான ஜிதேந்திர சிங்கும் உடன் இருந்தார்.