காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசை கண்டித்து போராட்டம்: அண்ணாமலை தகவல்

காவிரி நதிநீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்துப் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

கரூரில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: பெரம்பலூரில் பாஜக நிர்வாகிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர். இதுபோன்ற வன்முறையைக் கண்காணிக்கத்தான், பாஜக தலைமையிடக் குழுவினர் தமிழகம் வந்துள்ளனர். அவர்கள் மேலிடத்தில் இதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.

காவிரிப் பிரச்சினையில் தமிழர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது. காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்து, விவசாயிகளுடன் சேர்ந்து பெரிய போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். காவிரி பிரச்சினையில் மத்திய அரசு நடுநிலையுடன் செயல்படுகிறது. ஆனால், தமிழக முதல்வர் மவுனம் சாதிப்பது ஏன்? செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவுமில்லை. அவர் இன்னமும் அமைச்சராக நீடிப்பதால், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளது. அவரது சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருக்கிறார். மேலும், வருமான வரி சோதனையின்போது அதிகாரிகளை திமுகவினர் தாக்கியுள்ளனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.