காரைக்காலில் ரூ. 40.30 கோடியில் பணிகள்; காணொலியில் பிரதமர் துவக்கி வைப்பு

காரைக்காலில் மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தின் கீழ், பிரசாத் மற்றும் சுதேசி தர்ஷன் 2.0 திட்டத்தில் ரூ.40.30 கோடி மதிப்பில் திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் மற்றும் கடல்கரை மேம்பாட்டு திட்டப் பணி துவக்க விழா நடந்தது.

காரைக்கால், திருநள்ளாறு ஆன்மிக பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் திட்டங்களை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், தேனீ ஜெயக்குமார், சாய் சரவணன்குமார், அமைச்சராக நியமிக்கப்பட்ட திருமுருகன், செல்வகணபதி எம்.பி., முன்னிலை வகித்தனர். கலெக்டர் மணிகண்டன் வரவேற்றார்.

முன்னதாக புதுச்சேரியில் இருந்து கவர்னர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி காணொலி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் மூலம் காரைக்கால் ஆன்மிக தளங்கள், புராதன கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு சுற்றுலா உள்கட்டமைப்பு பணிகள் ரூ. 40.30 கோடி மதிப்பில் மேற்கொள்ள உள்ளது. நிகழ்ச்சியில் சிவா எம்.எல்.ஏ., சுற்றுலாத்துறை செயலர் கேசவன், இயக்குநர் முரளிதரன், பா.ஜ., மாநில துணை தலைவர் ராஜசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.