“காங்கிரசை ஆட்டிப்படைக்கும் தோல்வி பயம்”: ஸ்மிருதி இரானி கேலி

“அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் செய்தது. தோல்வி பயம் அந்தக் கட்சியை ஆட்டிப்படைக்கிறது” என நிருபர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கிண்டல் செய்தார்.

வரும் லோக்சபா தேர்தலில் உத்தரப் பிரதேசம் மாநிலம் அமேதி தொகுதி ஸ்மிருதி இரானிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இந்தத் தொகுதியில் போட்டியிட்ட அவர், காங்கிரஸ் தலைவர் ராகுலை வீழ்த்தினார். வரும் லோக்சபா தேர்தலில் ராகுல் மீண்டும் அமேதியில் போட்டியிடுவார் என காங்., தலைவர் பிரதீப் சிங்கால் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அமேதி தொகுதிக்கு காங்கிரஸ் தனது வேட்பாளரை அறிவிப்பதில் காலதாமதம் செய்தது. தோல்வி பயம் அந்தக் கட்சியை ஆட்டிப்படைக்கிறது. அமேதியை காந்தி குடும்பத்தின் கோட்டை என்று கூறுபவர்கள், வேட்பாளரை அறிவிக்க ஏன் அதிக நேரம் எடுக்கிறார்கள்?. அமேதி தொகுதியில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வருகிறேன். வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று புதிய சரித்திரம் படைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.