காந்தி அடிகள் என்பதில் ‘அடிகள்’ என்ற அடைமொழியைக் கொடுத்தது யார்?

பரதன் பதில்கள்

காந்தி அடிகள் என்பதில் ‘அடிகள்’ என்ற அடைமொழியைக் கொடுத்தது யார்?

– ஜி. கிருஷ்ணமூர்த்தி, கொளத்தூர்

தமிழ்த் தென்றல் திரு.வி.க. காந்திஜியை ‘காந்தி அடிகள்’ என்று அழைத்தார். ‘மகாத்மா’ என்ற அடைமொழியைக் கொடுத்தது ரவீந்திரநாத் தாகூர்.

* ‘ஹிந்துத்துவம்’   சிறப்பென்ன?

– லலிதா ஜெயன், காஞ்சிபுரம்

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதே ஹிந்துத்துவம். மனித நேயத்தின் மற்றொரு பெயர்தான் ஹிந்துத்துவம். எங்க சாமி தான் உசத்தி என்று சண்டை போடாமல் ‘தெய்வம் ஒன்றே… அதை நாம் பலப் பல பெயர்களில் அழைக்கிறோம்’ என்பதே ஹிந்துத்துவம்.

எனது அப்பாவுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. எனக்கோ நம்பிக்கை உண்டு. நான் கோயிலுக்குச் சென்று வருவதைக் கண்டிக்கிறார். என்ன  செய்வது?

– அ. பூவரசன், மேட்டூர்

அவர் ஹிரண்யகசிபுவாக இருந்தால் நீங்கள் பக்தப் பிரகலாதனாக இருங்கள். கடவுளின் அருளாசி நிச்சயம் உங்களுக்குக் கிடைக்கும்.

* பரதனாரே…  தங்களைக்  கவர்ந்த  ஒரு  ஆட்டோ  வாசகம்?

– கே. தனசேகரன், கலியக்காவிளை

வாழ்க்கையில் சில வாய்ப்புகள் வரும்; சில வாய்ப்புகள் வாழ்க்கையே தரும்.

குரான் – பைபிள் – கீதை… ஒப்பிடுங்களேன்?

– சக்திதாசன், எழும்பூர்

‘இஸ்லாமியனாக இரு’ – குரான் சொல்கிறது.

‘கிறிஸ்தவனாக இரு’ – பைபிள் சொல்கிறது.

‘மனிதனாய் இரு’ – கீதை சொல்கிறது.

ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் சில தலைவர்கள்  தீபாவளிக்கு  மட்டும்  வாழ்த்து  சொல்வதில்லையே…  ஏன்?

– அகிலா சோமநாதன், பெங்களூரு

கங்கையில் ஒருவர் ஸ்நானம் செய்தால் அது கங்கைக்குப் பெருமையில்லை. ஸ்நானம் செய்தவருக்குத்தான் பெருமை. இவர்கள் தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால் அதனால் தீபாவளிக்கு ஒன்றும் பெருமையில்லை. இந்த கட்சிகளுக்கு கொடி பிடிக்கும் ஹிந்து தொண்டர்களுக்கு கொஞ்சமாவது சூடு, சொரணை இருந்தால் அந்தந்த கட்சித் தலைவர்களிடம் விளக்கம் கேட்கட்டும்.

கணவன்  மனைவிக்குள்  சண்டை  வராமல்  இருக்க  என்ன  வழி?

– கி. ரத்தினசாமி, ஊரப்பாக்கம்

‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பது போல எல்லா குடும்பத்திலும் சண்டைகள் இருந்தே தீரும். எனது நண்பர் ஒருவர் வீட்டில் இருவரும் பகலில் சண்டை போடுவார்கள். அன்று இரவே இருவரும் சேர்ந்து செகண்ட் ஷோ சினிமா சென்று வருவார்கள். மறுநாள் எல்லாம் சகஜமாகிவிடும்.

 

* குறியிட்ட கேள்விகளுக்கு புத்தகம் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.