மொழிவாரி தலைவலி!

பாரதம் விடுதலை பெற்றபோது தற்போதைய தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா பகுதிகள் சேர்ந்து சென்னை மாகாணமாக இருந்தது. இதிலிருந்து தெலுங்கு பேசும் மக்களின் பகுதிகளை தனியாகப் பிரித்து ஆந்திரா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று பொட்டி ஸ்ரீராமலு என்பவர் 56 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தே போனார். மத்திய அரசு மாநிலங்கள் மறு சீரமைப்பு கமிஷனை நியமித்தது. கமிஷனின் அறிக்கைப்படி 1956 நவம்பர் 1-ம் தேதி மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.india-map

ஆர்.எஸ்.எஸ்.ஸின் இரண்டாவது தலைவராக இருந்த ஸ்ரீகுருஜி கோல்வல்கர் மொழிவாரி மாநிலம் அமைப்பது எதிர்காலத்தில் ஆபத்தானது என்று எச்சரித்தார். அவர் எச்சரித்தது போலவே இன்று சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

மாநிலங்கள் பிரிவு என்பது நிர்வாக வசதிகளை மட்டுமே மையமாக வைத்து இருக்கவேண்டுமே தவிர மொழியின் அடிப்படையில் கூடாது என்று கருத்து தெரிவித்தார். மாநிலத்திற்குள் மாவட்டங்களை அமைப்பது போன்று தேசத்தில் மாநிலங்கள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

மொழிவாரி மாநிலம் அடைந்தவுடன் திருப்தி அடைந்தார்களா? இல்லையே : ஒரே மொழி பேசும் பகுதியாக இருந்தாலும் கூட உ.பி.யில் இருந்து உத்தராகண்ட், ம.பி.யில் இருந்து சத்தீஸ்கர், பீகாரிலிருந்து ஜார்க்கண்ட் ஆகியவை பிரிக்கப்பட்டன.

ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிக்க ஒரு யுத்தமே நடந்தது. இரண்டு பகுதிகளிலுமே தெலுங்கு பேசுபவர்கள்தான் வசிக்கிறார்கள். தெலுங்கானா பிரிவு, நாமும் போராடினால் தனிமாநிலம் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தை வேறு சில குழுக்களுக்கு ஏற்படுத்தியது.

மேற்கு வங்கத்தில் மூன்றே மாவட்டங்களில் உள்ள நேப்பாளிகள் கூர்க்காலேண்ட் வேண்டும் என்றும் அசாமில் உள்ள போடோ மக்கள் போடோ லேண்ட் வேண்டும் எனவும் வன்முறை போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இதையெல்லாம் கவனித்து வரும் டாக்டர் ராமதாசுக்கும் தமிழகத்தையும் இரண்டாகப் பிரிக்க போராடலாமோ என்று எண்ணம் வரலாம்.

இமயம் முதல் குமரி வரை ஒரே நாடு; ஒரே மக்கள்; ஒரே கலாச்சாரம்; இதில் காங்கிரசும் கழகங்களும் பேசும் புதுச்சேரி கலாச்சாரம், கோவா கலாச்சாரம் போன்ற கருத்துக்கெல்லாம் ஏது இடம்? முழுமையான வலுகொண்ட தேசிய அரசு அமையுமானால் எல்லா பிரிவினைப் போக்குகளும் வாலைச் சுருட்டிக் கொள்ளும். அதற்காக தேசம் காத்திருக்கிறது.