‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விமர்சிக்க 10 நாட்கள் காத்திருந்தேன்’

‘காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ள தீய நோக்கங்களை பாரபட்சமற்ற முறையில் ஊடகங்கள் வெளிக்கொண்டு வரும் என, 10 நாட்கள் காத்திருந்தேன்.

”யாரும் அதை பற்றி வாய்த்திறக்காத காரணத்தால், வேறு வழியின்றி அதை பற்றி பேசும் நிலைக்கு தள்ளப்பட்டேன்,” என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

 

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வாசித்ததும், அதில் முஸ்லிம் லீக் முத்திரை உள்ளது என்பதை உணர்ந்தேன். இதைப் பார்த்து ஊடகங்கள் அதிர்ச்சி அடையும், யாராவது இது குறித்து கருத்து தெரிவிப்பர் என, 10 நாட்கள் காத்திருந்தேன்.

ஆனால், ஊடகங்கள் அந்த தேர்தல் அறிக்கையில் இருப்பதை அப்படியே வெளியிட்டன. அதில் பொதிந்துள்ள நோக்கங்கள் வெளிவரவில்லை. வேறு வழியின்றி அந்த உண்மைகளை வெளிக்கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டேன்.

ஏழை மக்களுக்காக நான்கு கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டதை என் பிரசாரத்தில் தொடர்ந்து பேசி வருகிறேன். யாருக்கெல்லாம் வீடு கட்டித்தரப்படவில்லை என்ற பட்டியலை அளிக்கும்படி பிரசாரத்திற்கு செல்லும் தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

மூன்றாவது முறை ஆட்சி அமைந்ததும், அவர்களுக்காக மேலும் 3 கோடி வீடுகளை கட்டித்தரும் பணிகளை நான் துவங்க வசதியாக இருக்கும்.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 55 கோடி மக்கள் மருத்துவ காப்பீடு பெற்றுள்ளனர். இனி வரும் காலங்களில், 70 வயதுக்கு மேற்பட்ட ஆண் – பெண் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை பெறும் வகையில் திட்டம் விரிவாக்கப்பட உள்ளது. ‘ஆஷா’ சுகாதாரப்பணியாளர்கள், திருநங்கையருக்கும் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என, தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளோம்.

எங்கள் ஆட்சியில் 52 கோடி வங்கி கணக்குகள் திறக்கப்பட்டு, மக்களுக்கான நலத்திட்ட தொகைகள் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது. இதுவரை 36 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. உலகின் எந்த நாட்டிலும் ஓர் ஆண்டில் இத்தனை வங்கிக் கணக்குகள் துவக்கப்படவில்லை. நாங்கள் வளர்ச்சி குறித்து பேசுகிறோம். காங்கிரஸ் பரம்பரை சொத்துகளை கொள்ளையடிப்பது குறித்து பேசுகிறது. எனவே, அவர்களை தேர்ந்தெடுக்க வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.