கலால் வரி முறைகேடு

டெல்லியில் நடைபெறும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சியில் கடந்த ஆண்டு புதிய கலால் வரிக் கொள்கை அமல்படுத்தப்பட்டது. இதில் பல விதிமீறல்கள், முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. 849 மதுபான கடைகளுக்கு விற்பனை உரிமம் வழங்கியது, 144 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டது. தடையில்லா சான்று இல்லாத ஒப்பந்ததாரருக்கு 30 கோடி ரூபாய் முன்வைப்புத் தொகையை திரும்ப அளித்துள்ளது. உள்நாட்டில் தயாராகும் வெளிநாட்டு மதுபானத்திற்கான இறக்குமதி கட்டணத்தை தள்ளுபடி செய்தது என்ற வகையில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுபான விற்பனையாளர்களுக்கு சாதகமாக கலால் வரித் துறை ஒப்பந்த புள்ளி விதிகளை தளர்த்தியுள்ளது. அமைச்சரவை கூட்டத்தின் ஒப்புதலின்றி இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த தவறான முடிவுகளை தலைமை செயலர் சுட்டிக்காட்டியதையடுத்து அதை மூடி மறைக்க, அவசர அவசரமாக அந்த முடிவுகளை சட்டப்பூர்வமாக்க முந்தைய தேதியிட்டு அதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது. எனவே, இந்த தொடர் விதிமீறல்கள் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து இத்துறை அமைச்சராக உள்ள அமைச்சர் மணிஷ் சிசோடியாவிடம் சி.பி.ஐ விரைவில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.