கர்நாடக சட்டப்பேரவையில் பாக். ஆதரவு முழக்கம் எழுப்பியது உண்மை: முஸ்லிம்கள் 3 பேர் கைது

சட்டப்பேரவையில் கடந்த 27-ம் தேதி மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றையதினம் மாலையில் வாக்குகள்எண்ணப்பட்டு, காங்கிரஸ் வேட்பாளர் சையத் நசீர் ஹூசேன் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவரது ஆதரவாளர்கள் சையத் நசீன் ஹூசேனை வாழ்த்தி முழக்கம் எழுப்பியதுடன், ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கம் எழுப்பினர்.
இதன் காணொலி க‌ன்னட தனியார் சேனல்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பியதற்கு பாஜக, மஜத ஆகிய கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த விவகாரத்தில் கர்நாடக அரசை கண்டித்து பாஜகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதுடன், பெங்களூருவில் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். மேலும், ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து, கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் எனவும் கோரினர்.
இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா இந்தவிவகாரம் குறித்து வழக்குப்பதிவுசெய்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். அதன்படி,3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், சம்பவத்தினத்தன்று சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட வீடியோ, ஆடியோ பதிவை தடய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பினர். கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா, ‘‘தடயவியல் சோதனையில் கர்நாடக சட்டப்பேரவையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பியது உண்மை என தெரியவந்துள்ளது. 2 முறை பாகிஸ்தான் ஆதரவு முழக்கம் எழுப்பப்பட்டதை தடயவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. ஆனால் அதனை யார் எழுப்பியது என தெரிவிக்கவில்லை. எனவே இது தொடர்பாக 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரிக்கின்றனர்” என்றார்.
எம்.பி. மீது நடவடிக்கை தேவை: இதுகுறித்து கர்நாடக‌ பாஜகதலைவர் விஜயேந்திரா கூறுகையில், ‘‘நாங்கள் கூறியதை இப்போது கர்நாடக அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரும் காங்கிரஸ் நிர்வாகிகள். நாட்டுப்பற்று இல்லாமல், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பும் அளவுக்கு நிர்வாகிகளை காங்கிரஸ் வளர்த்தெடுத்துள்ளது. ஆனால் இந்த உண்மை நன்றாக தெரிந்தும் காங்கிரஸ் எம்.பி.சையத் நசீர் ஹூசேன் மறைத்து வந்தார். அவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.