கரோனா வைரஸ் விவகாரத்தில் உண்மையை மூடி மறைத்த சீனா

வூஹானில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சீன அரசு உண்மையை முழுமையாக மூடி மறைத்தது. சீன அதிபர் ஜி ஜின்பிங் எங்கிருக்கிறார் என்பதுகூட யாருக்கும் தெரியவில்லை. இதுதொடர்பாக கடுமையான விமர்சனங்கள் எழுந்த பிறகே அவர் வெளியில் தலைகாட்டினார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் கான்பெர்ராவில் செயல்படும் சீன கொள்கை மையத்தின் இயக்குநர் ஆடம் நீ கூறும்போது, “சீனாவில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கிய ஆரம்ப காலகட்டத்தில்சீன அரசு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இதன் காரணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதை சமாளிக்க அரசு அதிகாரிகளே வதந்திகளை பரப்பத் தொடங்கிவிட்டனர். சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் லிஜியான் பகிரங்கமாக அமெரிக்கா மீது குற்றம் சாட்டினார். அமெரிக்க ராணுவமே, சீனாவில் கரோனா வைரஸை பரப்பியது என்று அவர் குற்றம் சாட்டினார். சீனாவின் சமூக வலைதளமான வீ சேட்டில் அமெரிக்காவை குற்றம்சாட்டி வதந்திகள் பரப்பப்பட்டன” என்று தெரிவித்தார்.

தாய்லாந்துக்கான அமெரிக்க தூதர் மைக்கேல் கூறும்போது, “கரோனா வைரஸ் தொடர்பான மாதிரிகளை சீனா முழுமையாக அழித்துவிட்டது. இந்த வைரஸ் தொடர்பான உண்மைகளை உலகுக்கு எடுத்துரைத்தவர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 70லட்சத்துக்கும் மேற்பட்டோர் வூஹானை விட்டு தப்பியோடி விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.

வூஹானில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபோது சீன அதிபர் ஜி ஜின்பிங் அந்த நகருக்கு செல்லவில்லை. சீன பிரதமர் லீ கெகியாங் மட்டுமே வூஹானுக்கு சென்று மருத்துவப் பணிகளை விரைவுபடுத்தினார். வைரஸ் முழுமையாக கட்டுக்குள் வந்த பிறகே அதிபர் ஜி ஜின்பிங் அங்கு சென்றார்.

கரோனா வைரஸ் குறித்து முதலில் மக்களை எச்சரித்த வூஹான்நகர மருத்துவர் லீ வென்லியாங் கடந்த ஜனவரி 3-ம் தேதி கைதுசெய்யப்பட்டார். வைரஸ் பாதிப்பால் 34 வயதான அந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு சீன அரசு முறையான மருத்துவ சிகிச்சை அளிக்கவில்லை என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டின.

சீன அரசு நினைத்திருந்தால் இந்த வைரஸ் உலகத்துக்கு பரவாமல் தடுத்திருக்க முடியும். ஆனால் அந்த நாட்டு அரசு வைரஸ் தொடர்பான உண்மைகளை மூடி மறைத்தது. சீன அரசு அளித்த தகவலின்படி உலக சுகாதார அமைப்பு கடந்த ஜனவரி 15-ம் தேதி ஓர்அறிக்கையை வெளியிட்டது. அதில், கரோனா வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவாது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போதே சீன அரசு உண்மையை கூறியிருந்தால் உலக நாடுகள் விழிப்புடன் செயல்பட்டிருக்கும்.

கரோனா வைரஸ் இயற்கையாக உருவான வைரஸ் என்று சீன அரசு கூறி வருகிறது. ஆனால் மேற்கத்திய நாடுகளின் விஞ்ஞானிகள் சீனாவின் கருத்தை மறுத்து வருகின்றனர். வூஹானில் மட்டுமே சீனாவின் வைராலஜி ஆய்வுக் கூடம் உள்ளது. அந்த ஆய்வுக் கூடத்தில் உருவாக்கப்பட்ட வைரஸ்தான் உலகத்தை ஆட்டிப் படைத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

கரோனா வைரஸால் அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகளில் சுமார் 300 கோடி மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். 7.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வரை 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு சீன அரசே காரணம். வைரஸ் குறித்த உண்மையை ஆரம்பம் முதலே சீன அரசு மூடி மறைத்து வருகிறது. அந்த நாடு உலகத்துக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்திருக்கிறது என்று சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.