கரையும் காங்கிரஸ்

ஊடக செய்திகளை காணும்போது உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்த பல்முனை தாக்குதல்களை நடத்துகிறது என்பது எளிதாக புரிகிறது. ஆனால், இதற்கு மற்றொரு கோணமும் இருக்கலாம். அது இவற்றின் உண்மை நோக்கமாகவும் இருக்கலாம்.

சில வாரங்களுக்கு முன் காங்கிரசில் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட 23 தலைவர்கள், காங்கிரஸ் கட்சியில் சோனியா குடும்பம் அல்லாத வேறொரு தலைமை வேண்டும் என போர்கொடி உயர்த்தினர். ஆனால் சோனியா குடும்பத்திற்கு இது பிடிக்கவில்லை. எனவே, முதல்கட்டமாக அவர்கள் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். உங்கள் இடம் இதுதான், உங்கள் மரியாதை இவ்வளவுதான் என அவர்களுக்கு உணர்த்தப்பட்டது.

மருத்துவ பரிசோதனையை காரணம் காட்டி ஒரு மாதம் வெளிநாடு சென்ற சோனியா, திரும்பியதும், ராகுல், பிரியங்காவை முன்னிலைப்படுத்த தக்க தருணத்திற்கு காத்திருந்தார். ஹத்ராஸ் சம்பவமும், விவசாய மசோதாவும் அதற்கு கைகொடுத்தன. ராகுலும் பிரியங்காவும் களமிறக்கப்பட்டனர். காங்கிரசின் மற்ற தலைவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது, காங்கிரசின் டிவிட்டரில் கை சின்னம், கொடி நீக்கி ராகுல் பிரியங்காவின் படங்கள் பதிவு போன்றவை இந்த கருத்துக்கு வலு சேர்க்கின்றன.

தற்போது கட்சி என்பது சோனியா, ராகுல், பிரியங்கா மட்டுமே.
அதுசரி, இதனால் நமக்கென்ன? இனி சில காலத்திற்கு இவர்கள்தான் காங்கிரஸ். தலையாட்டுபவர்களுக்கு மட்டுமே பதவிகள். தவறுகளை சுட்டிகாட்ட, வழி நடத்த யாரும் துணிய மாட்டார்கள்.

எனவே, இனி இவர்கள் தலைமை தொடரும்வரை, காங்கிரஸின் ஆட்சிக்கனவு, கனவாக மட்டுமே இருக்கும். இது நாட்டுக்கு நல்லதுதானே!?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பார் இலானும் கெடும் – திருக்குறள்