கனியை ஏற்ற கனிவு;- மகான்களின் வாழ்வில்

ரா மகிருஷ்ண  இயக்கத்தின் முதல் பொதுச் செயலாளராக இருந்தவர் சுவாமி சாரதானந்தர். ஒருநாள் மதிய நேரத்தில் சுவாமிஜி யாரையோ பார்க்கக் கிளம்பினார். அவர் தனியாகச் செல்வதைப் பார்த்த மற்றொரு துறவி அசேஷானந்தரும் அவருடன் துணைக்குச் சென்றார்.

சுவாமி சாரதானந்தர் தனக்கு ஏற்கனவே அறிமுகமான காசநோயால் பாதிக்கப்பட்டிருந்த கொக்கானி என்ற பக்தரின் வீட்டிற்குச் சென்றார். சுவாமி சாரதானந்தரைப் பார்த்தவுடன் swamy-sadhanandarகொக்கானிக்கு மிகுந்த மகிழ்ச்சி. தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த அவர் சுவாமிஜியின் கைகளைப் பிடித்துக் கொண்டார். சுவாமியும் அவரது படுக்கையில் உடன் உட்கார்ந்து கொண்டு அவர் தலைமீது தமது கரத்தால் மெதுவாக வருடி விட்டார்.

கொக்கானி தனது வீட்டிலிருந்த சில பழங்களை எடுத்து வெட்டி ஒரு தட்டில் வைத்து சுவாமிஜியிடம் சாப்பிடச் சொல்லி கொடுத்தார். உடனிருந்த சுவாமி அசேஷானந்தர் இதைப் பார்த்தவுடன் பயந்தே போனார். தொற்று நோய் உள்ள ஒரு வியாதிக்காரன் கையால் வெட்டிக் கொடுத்த பழங்களை சாப்பிடுவதே ஆபத்தானது என்று தயங்கினார். ஆனால் சுவாமி சாரதானந்தரோ எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் அந்தப் பழங்களை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டு அசேஷானந்தரிடம் தட்டை நீட்டி எடுத்துக்கொள்ளும்படி வேண்டினார். வேறு வழியின்றி தயக்கத்துடன் அசேஷானந்தர் சிறிது எடுத்துக்கொண்டார்.

அங்கிருந்து விடைபெற்று திரும்பும் வழியில் அசேஷானந்தர் சுவாமிகளிடம் தொற்றுநோய் உள்ள அவரிடமிருந்து பழங்களை வாங்கி சாப்பிட்டது ஆரோக்கியமில்லாதது என்று தெரிவித்தார்.

சுவாமிகள் அதற்கு அன்புள்ளம் கொண்டவர்களிடமிருந்து உணவைப் பெறுவதால் எந்தக் கெடுதலும் வராது” என்று பகவான்  கூறியதையே பதிலாகத் தெரிவித்தார்.

சில தினங்களில் அந்த கொக்கானி காலமாகிவிட்டார். இதுபற்றி அசேஷானந்தர் குறிப்பிடும்போது, மரணத் தருவாயில் உள்ளவர்களிடம் விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் அவர்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்” என்றார்.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்