கனவை நனவாக்கிய மனைவி

காஷ்மீர் மாநிலம் பந்திபுரா மாவட்டத்தில் குரே செக்டர் ஸ்ரீநகரிலிருந்து 125 கி.மீ தொலைவில் உள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிக அருகில் உள்ள பகுதி. அடர்ந்த காடுகளை கொண்ட பகுதி என்பதால் பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் ஊடுருவும் ஆபத்தான பகுதி. ஆகஸ்டு 6, 2018 அன்று பெரும் எண்ணிக்கையில் பயங்கரவாதிகள் ஊடுருவுவதாக தகவல் கிடைத்தது.

இதை அடுத்து, இந்திய ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படையின் 36வது படாலியன் மேஜர் கவ்ஸ் தப் ராணே தலைமையிலான வீரர்கள் களம் இறக்கப்பட்டனர். பல பயங்கரவாதிகளைக் கொன்று வெற்றிக்கரமாக ஊடுருவலை தடுத்த நிலையில், மேஜர் கவ்ஸ் தப் ராணே வீர மரணம் அடைந்தார்.

மேஜர் கவ்ஸ் தப் ராணே வீர மரணம் அடைந்த பொழுது அவரது மனைவி கனிகா ராணிக்கு வயது 27. இரண்டு வயது மகன் அகஸ்தியா ராணேவோடு வாழ்க்கை சூன்யமான நிலையில் அரசின் பண உதவியையோ பொருளாதார உதவியையோ எதிர்த்து வாழ வேண்டிய சூழ்நிலையில் அவர் இல்லை. ஏனென்றால், அவர் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தார். கணவரது வீரமரணம் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. கணவரின் வழியில் ராணுவத்தில் சேர முடிவெடுத்து எஸ்.எஸ்.பி தேர்வை எழுதினார். அந்த தேர்வில் வென்றதன் மூலம் சென்னையில் இருக்கும் ஓ.டி.ஏ. ராணுவ கேந்திர மையத்தில் 46 வார கால கடுமையான ராணுவப்பயிற்சியை மேற்கொண்டார். இந்த பயிற்சியில் வெற்றிக்கரமாக தேறிய அவர் 22 நவம்பர் 2020 அன்று இந்திய ராணுவத்தில் பதவியேற்றார்.

‘‘மனதில் உறுதியிருந்தால் எதையும் சாதிக்கலாம். சிவிலியன் வாழ்க்கையில் 100 மீட்டர் தூரம் கூட ஓடியதில்லை. ஆனால் இன்று 40கி.மீ தூரம் ஓடுகிறேன். கணவர் தொடங்கிய தேசப்பணியை தொடர்ந்து நிறைவேற்ற எனது குடும்பத்தில் யாரும் இல்லை. மகனுக்கு இப்போதுதான் மூன்றரை வயதாகிறது. எனவே நானே ராணுவத்தில் சேர்ந்துவிட்டேன்.

வாழ்க்கை பலநேரம் நம்மை கீழே தள்ளிவிடும். நாம் உடனே எழுந்துவிட வேண்டும். எந்த முயற்சியும் பண்ணாமலேயே வீழ்ந்து கிடப்பது தவறு என்பார். எனது கணவரது மரணம் என்னைக் கீழே தள்ளியது. ஆனால் ராணுவப்பணியின் மூலம் நான் எழுந்துவிட்டதாக நினைக்கிறேன்” என்கிறார் கனிகா ராணே.