கண்ணன் என் கைக்குழந்தை

ஆனந்தி தன் இரண்டு வயதுக் குழந்தை கண்ணனைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.

கண்ணன் ரகளை செது  கொண்டிருந்தான். கண்ணில்  சோப்பு பட்டுவிட்டதாம். ‘ஆ… ஊ…’ என்று ஊரை கூட்டிக் கொண்டிருந்தான்.

ஆனந்திக்கு வேலைக்கு நேரமாகி விட்டது. இவள் வேலைக்குக் கிளம்புமுன் தன் வீட்டு வேலைகளைச் செதுவிட்டு குழந்தையை தயார் செதுவிட்டுக் கிளம்பவேண்டும்.

புருஷன் ஒரு குடிகாரன். எப்போதாவது சுயநினைவு இருக்கும்போது வீட்டிற்கு வருவான். அவள் அங்கே இங்கே என்று சேர்த்து வைத்திருக்கும் பணத்தை எடுத்துக் கொண்டு சாராயக் கடைக்குப் போவிடுவான்.

பிறகு போதை தெளிந்தால்தான் அவனுக்கு வழியே தெரியும். வேலைக்குப் போகமாட்டான்.

எனக்கு வேலை கிடைச்சிருக்கு. ஒரு சாமான் வாங்கணும். நூறு ரூபா கொடு” – என்பான் ஆனந்தியிடம்.

இவளும் எங்கோ கடன் வாங்கித் தன் கணவனுக்குத் தருவாள். அவ்வளவுதான் பிறகு அவன் வரவே மாட்டான்! பணம் தரமாட்டேன் என்றால் அந்தப் பச்சைக் குழந்தையைப் போட்டு அடிப்பான்.

ஆனந்திக்கு அழுகை வந்தது.

‘நான் பாட்டுக்கும் எம்புட்டு சந்தோஷமா அஞ்சாப்பு படிச்சுட்டு இருந்தேன். இந்த ஆயா என்னை ஒரு குடிகாரனுக்குக் கட்டி வைச்சு என் வாழ்க்கையே கெடுத்துடிச்சு’ – என்று தனக்குள் புலம்புவாள்.

குழந்தை பிறந்தாலாவது அவனுக்கு பொறுப்பு வரும் என்று நினைத்திருந்தாள். அதுவும் இல்லை. இப்போது இவளுக்குத் தான் கூடுதல் பொறுப்பு. குழந்தையையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் போக வேண்டும்.

இவள் தா, குழந்தையைப் பார்த்துக் கொள்ள மறுத்துவிட்டாள்.

உன்னை எம்பாடுபட்டு கட்டிக் கொடுத்தேன். உன் தலையெழுத்து. இன்னமும் உனக்காக ஓடியாடிட்டு இருக்க முடியாது. நான் நாலு வீடு பாத்திரம் கழுவி வயத்தைக் கழுவறேன். நீயாச்சு, உன் புருஷனாச்சு. அந்தப் புள்ளை ரொம்ப ரகளை பண்ணும். என்னால முடியாது.”

ஆனந்தி யோசித்தாள். வீரபாண்டி கிராமத்தில் இவளுக்கு பாட்டி ஒருத்தி உண்டு. அங்கிருந்து கோவை டவுனுக்கு வரவே ஒரு மணி நேரமாகும். பேசாமல் குழந்தையை அவளிடம் ஒப்படைத்தால்…?

பாட்டிக்கு வயதாயிற்று. ஓடி ஆடி வேலை செய முடியாது. ஏதோ கிராமத்தில் ஒரு குடிசை இருக்கிறது. உட்கார்ந்தபடி, நாட்டாமை பார்த்தே தன் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருக்கிறாள்.

அவளிடம் குழந்தையை ஒப்படைத்தால்…?

இந்தக் கண்ணனோ மகா குறும்புக்காரன். நின்ற இடத்தில் நிற்க மாட்டான். சதா துறுதுறுவென்று ஓடிக்கொண்டிருப்பான். கண்மூடித் திறப்பதற்குள் நடு வீதிக்கு ஓடிவிடுவான்.

தீராத விளையாட்டுப் பிள்ளை.

இவனுடன் விளையாட கோபிகைகள் இல்லை.

இவன் காளிங்க நர்த்தனம் செயாவிட்டால் என்ன? இவன் வீட்டில் ஆடும் ஆட்டம்! அப்பப்பா? அதுவே ஒரு நர்த்தனம்தான்!

ஆனந்தி ஒரு முடிவுக்கு வந்தாள். ஒரு வயதான பெரியவரைக் கவனித்துக் கொள்ளும் ஆயா பொறுப்பு ஒரு தனியார் மருத்துவமனை  மூலமாக இவளுக்கு வந்திருக்கிறது. மாதம் நாலாயிரம் ரூபா சம்பளம். ஏஜெண்டுக்கு ஆயிரம் ரூபா போக இவளுக்கு மூவாயிரம் மிஞ்சும். நல்ல வாப்பு. பெரியவர் ஒருவர் படுத்த படுக்கையாக இருக்கிறார். அவர் மனைவிக்கும் வயதாகி விட்டது. இதய நோயாளி வேறு. பகலில் வீட்டோடு ஆயா வேண்டுமாம்.

வேளா வேளைக்கு பெரியவருக்கு மருந்து தரவேண்டும்.

ஆகாரம் ஸ்பூனில் ஊட்ட வேண்டும்.

அசுத்தத்தைத் துடைக்க வேண்டும்.

பெரியவருக்கு ஸ்பான்ஞ் பாத் தரவேண்டும்.

இரவு வீடு திரும்பி விடலாம். நைட் ட்யூட்டிக்கு வேறு ஆள் வருவார்கள்.

ஆனந்தி ஒத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

பிறகு கண்ணனை என்ன செவது?

பாட்டியிடம் கேட்டாள்.

இதோ பார்! புள்ளையைக் கொண்டு இங்கே வந்துவிடு. என்னால டவுனுக்கெல்லாம் வர முடியாது.”

இன்றுதான் ஆனந்தி வேலைக்குப் போகும் முதல்நாள். எட்டு மணிக்கு கோவையில் இருக்க வேண்டும் என்றால், இவள் 7 மணி பஸ்ஸில் கிளம்ப வேண்டும். அதற்கு முன்…?

தூங்கிக் கொண்டிருக்கும் கண்ணனைத் தட்டி எழுப்பி, குளிப்பாட்டி, அவன் படுக்கையில் செதிருக்கும் அசிங்கங்களைத் துடைத்து, அவனுக்கு ‘பீடிங் பாட்டிலில்’ பால் தந்து… உடை மாற்றி இதோ ஆனந்தி கிளம்பிவிட்டாள்.

கண்ணன் அவளைப் பார்த்து சிரிக்கிறான்.

கண்ணனுக்கு மை எழுதி… தலைமயிரை இறுகக் கட்டி,  கிருஷ்ணன் கொண்டை போட்டு, கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்து…

இவள் என்ன டி.வி. விளம்பரத்தில் வரும் தாயா?

தன் மகனை பெருமையுடன் பார்த்தபடி குஷன் மெத்தையில் படுத்துக் கொண்டு திருஷ்டி பொட்டு வைக்க!

ஆயா நான் வேலைக்கு கிளம்பறேன். கண்ணனுக்கு வேணுங்கிறதை எல்லாம் செது எடுத்து வைச்சுட்டேன். நல்லா பாத்துக்கோ ஆயா…”

கண்ணனை கட்டில்…”

ஆமா ஆயா, கயித்தை நல்ல நீளமா விட்டு கண்ணனை கட்டில் கால்லே கட்டிப் போட்டுட்டேன்! நீ கொஞ்சம் பாத்துக்கோ தாயீ. கயிறு சிக்கி… குழந்தைக்கு…”

சரி… சரி நீ கிளம்பு…”

ஆனந்தி கண்களில் நீர்வழிய குழந்தை கண்ணனை ஒரு நீளமான கயிற்றில் இறுக்கிக் கட்டுகிறாள். கண்ணன் ‘டாடா’ சோல்கிறான். அவனுக்கு இப்போது தெரியாது. கட்டப்பட்ட கயிற்றின் நீளம் முடிவடைந்து போனால்தான், தான் சிறைபட்டிருப்பது தெரியும்.

வெள்ளி அரைஞாண் கயிற்றில் கட்டப்பட்டிருந்த கயிறு அசைய, கண்ணன் தத்தி தத்தி நடந்து வாசலுக்கு வருகிறான். வேலைக்குப் போகும் தன் அன்னைக்கு ‘டாடா’ சோல்கிறான்.

இவன் என்ன அந்த பகவான் கிருஷ்ணனா? உரலில் கட்டப்பட்டிருந்த பகவான் கண்ணனால் சாப விமோசனம் பெற்ற தேவ புருஷர்கள் அங்கு தோன்றவா போகிறார்கள்?

ஆனந்தி யசோதையும் அல்ல!

இந்தக் கண்ணன் கடவுளும் அல்ல!

ஆனந்தி சிறையில் தன் பிள்ளையை பெறவில்லை! ஆனால் இவள் பெற்ற பிள்ளையை வேறுவழியின்றி சிறை வைக்கும் தா இவள்!

இவள் வேலைக்குப் போகும் தா! அதிக படிப்பறிவற்றவள்!

ஒரு குடிகாரனின் ஏழை மனைவி!

இவளின் வாழ்க்கை சாபம், தீராத சாபம்!

இவளைக் காக்க, சாபவிமோசனம் நீக்க எந்தக் கண்ணன் வரப்போகிறான்?

வாழ்க்கையைத் தவற விட்டுவிட்ட ஆனந்தி, பஸ்ஸை தவற விட்டு விடக்கூடாது என்று வேகமாக நடந்து கொண்டிருக்கிறாள்!