கணீரென தேசிய முழக்கம் செய்த ‘மணி’யன்!

அன்புடையீர் வணக்கம்.

சென்னையில் கடந்த  நவம்பர் 25, 26 தேதிகளில் விவேக பாரதி – தி கல்யாண் நகர் அசோசியேஷன் சார்பில் பாரதியார் விழா நடைபெற்றது. இரண்டு நாளும் விழாவில் கலந்து கொண்டேன். ஆர்.பி.வி.எஸ். மணியன் முதல்நாள் பாரதியார் பாடல்களில் வேதாந்த கருத்துகள்” என்ற தலைப்பிலும் இரண்டாவது நாள் பாரதியார் எழுத்துக்களில் ஹிந்துத்துவம்” என்ற தலைப்பிலும் பேசினார்.

பாரதி வாழ்ந்தது 39 ஆண்டுகளே. புலவனோடு பிறந்தது வறுமை என்பதுபோல் அவர் வாழ்வில் ஏழ்மையால் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்தார். இன்று பாரதி பற்றி நாம் ஆஹா, ஓஹோ என்றெல்லாம் பேசி வருகிறோம். ஆனால் அவர் வாழ்ந்த காலத்தில் அடுத்த நேர சாப்பாட்டுக்கே திண்டாடிக் கொண்டிருந்தார். அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டவர்கள் வெறும் 20 பேர்  என்பதைக் கேட்டபோது கண்கள்  கலங்கியது.

பாரதி நமது நாட்டைக் குறிப்பிடும்போது ஓரிரு இடங்களைத் தவிர பொதுவாக பாரதம், ஹிந்துஸ்தானம் என்றே குறிப்பிடுகிறார். சேதமில்லா ஹிந்துஸ்தானம் இதை தெய்வமென்று கும்பிடடி பாப்பா” என்கிறார். நூறு ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவர்களின் மதமாற்றத்தைச் சாடியுள்ளார்.

நிகழ்ச்சியில் ஆர்.பி.வி.எஸ் மணியன் எழுதிய அன்றாட வாழ்வின் ஆன்மிகம், விடுதலைப் போர் – தெரிந்த பெயர்கள், தெரியாத தகவல்கள் என்ற இரண்டு புத்தகங்கள் வெளிப்யிடப்பட்டன. பாரதி வாழ்ந்த காலத்தில்தான் அவரை கவனிக்க மறந்தோம். இப்போதாவது அவரின் தியாகத்தை நினைவுகூர்கின்ற நல்ல நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுத்த மணியனைப் பாராட்டுவோம்.

வாழி நலம் சூழ.

ம. வீரபாகு,  ஆசிரியர்