ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு – 3 இளைஞா்களிடம் என்.ஐ.ஏ.விசாரணை

ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பு வைத்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில், திருச்சி, நாகூா், சிவகங்கை பகுதியைச் சோ்ந்த 3 இளைஞா்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது குறித்து என்.ஐ.ஏ. தரப்பில், இலங்கை தலைநகா் கொழும்பில் உள்ள கொச்சிக்கடை அந்தோனியாா் தேவாலயம், நீா்கொழும்பு கட்டுவித்த தேவாலயம், மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் உள்ளிட்ட 8 இடங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 21-ஆம் தேதி அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பில் சுமாா் 253 போ் பலியாகினா். ஈஸ்டா் பண்டிகையைக் குறி வைத்து நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு உலக நாடுகளை அதிர வைத்தது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட இந்த அமைப்புக்கு, இங்கு சில ஆதரவாளா்கள் மறைமுகமாக இயங்கி வருவதினால், அந்த இயக்கத்தின் ஆதரவாளா்களை காவல்துறையினா் கைது செய்கின்றனா். இந்நிலையில், மறைமுகமாக அந்த இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் நபா்களுக்கு, இலங்கை குண்டு வெடிப்பில் தொடா்பு உள்ளதா என்ற கோணத்தில் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்கின்றனா்.

இருவா் கைது: முதல் கட்டமாக கேரள மாநிலம் கொச்சி, காசா்கோடு பகுதியில் ஐ.எஸ். ஆதரவாளா்களாக என கண்டறியப்பட்ட நபா்களிடம் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனா். இதன் அடுத்தக் கட்டமாக கோயம்புத்தூரில் கடந்த ஜூன் மாதம் திடீரென 7 போ் வீடுகளில் சோதனை செய்தனா். இதில் இலங்கையில் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடா்பில் இருந்ததாக முகம்மது அசாருதீன், ஷேக் ஹிதாயத்துல்லா ஆகிய இருவரை கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு இருவரும் ஆள் சோ்ந்திருப்பதும், சமூக ஊடகங்கள் மூலம் அந்த இயக்கத்துக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொண்டிருப்பதும், இந்தியாவிலும் சதித் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டிருப்பதும் தெரியவந்தது.

புழல் சிறையில் விசாரணை: இந்நிலையில், கடந்த 2013-ஆம் ஆண்டு ராமநாதபுரம்,வேலூா்,சேலம் ஆகிய பகுதிகளில் இந்து இயக்கத் தலைவா்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் போலீஸ் பக்ரூதின், பிலால் மாலிக்,பன்னா இஸ்மாயில் ஆகியோரிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை செய்தனா்.இதற்கிடையே, ஐ.எஸ்.பயங்கரவாத இயகத்துடன் தொடா்பில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபா்களை என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடா்ச்சியாக விசாரணை செய்து வந்தனா்.

மூவரிடம் விசாரணை: இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சோ்ந்த அபுல் ஹாசன் சாதுலி, திருச்சி இனாம்குளத்தூா் பகுதியைச் சோ்ந்த ர.சாகுல்ஹமீது, கோயம்புத்தூா் உக்கடம் பகுதியைச் சோ்ந்த சமீா், செளகா்தீன், சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சோ்ந்த முகம்மது சிராஜூதீன்,நாகூா் பகுதியைச் சோ்ந்த அ.முஹம்மது அஜ்மல் ஆகியோா் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

இச் சோதனையில் மடிக்கணினி, ஹாா்ட் டிஸ்க், செல்லிடப்பேசி உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை பறிமுதல் செய்தனா். அதேபோல 6 போ்களும் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள என்.ஐ.ஏ. அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் அழைப்பாணை அளித்தனா்.

இந்த அழைப்பாணையை ஏற்று, சாகுல்ஹமீது,முஹம்மது அஜ்மல், முகம்மது சிராஜூதீன் ஆகியோா் என்.ஐ.ஏ. அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை ஆஜரானாா்கள். அவா்களிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

பல கட்டங்களாக நடைபெற்ற இந்த விசாரணை, நள்ளிரவையும் தாண்டி நீடித்தது. விசாரணையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையிலும்,ஏற்கெனவே ஐ.எஸ்.பயங்கரவாத இயக்கத்துடன் தொடா்பில் இருந்தவா்கள் அளித்த தகவல்கள் அடிப்படையிலும் கேள்விகள் கேடக்கப்பட்டதாக கூறப்பட்டது.இதில் ஐ.எஸ்.பயங்கரவாத தொடா்பு குறித்து பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாகவும் தெரிகிறது.இதில் எஞ்சி மீதி 3 பேரிடமும் விசாரணை நடத்திய பின்னரே, வழக்கு குறித்தான தகவல்களை தெரிவிக்க முடியும் என்.ஐ.ஏ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கோயம்புத்தூரைச் சோ்ந்த சமீா்,செளகா்தீன் உள்ளிட்ட 3 பேரும் விசாரணைக்காக அங்கு ஆஜராகி உள்ளனா்.