ஊடகத்தை மிரட்டும் அரசு

தங்கள் ஆட்சியின் அவலங்களை உலகிற்கு தெரியப்படுத்திய ஒரே காரணத்துக்காக ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்தை எப்படியாவது முடக்க வேண்டும், அர்னாப் கோஸ்வாமியை கைது செய்தே ஆக வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது சிவசேனா அரசு.

இதற்காக “இந்தியா டுடே’ தொலைகாட்சியின் பெயரில் இருந்த டி.ஆர்.பி ரேட்டிங் முறைகேட்டை ரிபப்ளிக் தொலைக்காட்சி மீது திருப்ப முயன்றார் மும்பை போலீஸ் கமிஷனர். இதை குறித்த ஹன்ஸா கமிஷன் அறிக்கையை ரிபப்ளிக் வெளியிட்டது.

தங்களின் சதிகள் அப்பட்டமாக வெளியானதால் அர்னாப்பை எப்படியாவது கைது செய்வதற்கென்றே ஒரு குழுவை அமைக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்து முயற்சித்தார் முதல்வர் உத்தவ் தாக்கரே.
இதற்காக அர்னாபிடம் 20 மணி நேர விசாரணை, பத்திரிகையாளர் பிரதீப் பண்டாரி மீது பிணையில் வெளி வர முடியாத கைது என உத்தவின் உத்தரவிற்கு கட்டுப்பட்டு தலையாட்டும் காவல்துறை கமிஷனர் பரம்பீர் சிங் நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

இடதுசாரிகள் சார்புடைய ‘எடிட்டர்ஸ் கில்ட்’ அமைப்பு மும்பையில் உள்ள 1000 பத்திரிகையாளர்கள் மீதான அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஆயினும் அது ரிபப்ளிக் மீதான அரசின் காழ்ப்புணர்சி நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை.
இது குறித்து பேசிய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இந்தியா டுடே மீது சுமத்தப்பட்ட குற்றத்தை ரிபப்ளிக் மீது சுமத்தியது தவறான நடைமுறை என கருத்து தெரிவித்தார்.

மகாராஷ்டிரா அரசின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளது. விரைவில் இதற்கு நல்ல நீதி கிடைக்கும் என நம்புவோம்.