உழைப்பின் வலி

ஒரு செல்வந்தர் தனது மகனுக்கு தொழில் மற்றும் படிப்பினைக்காக தனது நண்பரின் நிறுவனம் ஒன்றில் 6 மாத காலத்திற்கு பணி செய்ய அனுப்பினார். ஆனால், அவனோ எந்த வேலையும் செய்யவில்லை. ஆனாலும் தனது நண்பர் மகன் என்பதால் அவரும் கண்டுகொள்ளாமல் 6 மாதம் கடந்ததும் ஒரு தங்க நாணயத்தை கூலியாக கொடுத்து அனுப்பினார். அந்த நாணயத்தை அப்பாவிடம் கொண்டு வந்து கொடுத்தான். அதனை வாங்கிய அப்பா, தூரமாக தூக்கி தூர எறிந்தார். மகன், ஒன்றும் பேசாமல் தனது படுக்கைக்கு சென்று விட்டான்.

மீண்டும் இன்னொரு நண்பரிடம் 3 மாதம் வேலைக்கு அனுப்பினார். அங்கும் எந்த வேலையும் செய்யவில்லை. அவரும் நண்பரின் மகன் என்பதால் 2 தங்க நாணயங்கள் கொடுத்து அனுப்பினார். அதையும் அப்பாவிடமே கொடுத்தான். முன்பு போலவே அந்த நாணயங்களையும் தூக்கி தூர எறிந்தார். அப்போதும் அவன் கண்டுகொள்ளவில்லை.

சிறிது காலம் கழித்து அறிமுகம் இல்லாத ஒரு இடத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு 3 மாதம் வேலை செய்து விட்டு 1/2 தங்க நாணயத்தை ஊதியமாக கொண்டு வந்து கொடுத்தான். முன்புபோலவே அதையும் தூக்கி எறிந்தார். ஆனால் இம்முறை அவனுக்கு கோபம் வந்தது விட்டது. இது என்ன தெரியுமா? எனது வியர்வை, எனது உழைப்பு, 3 மாதம் கடுமையாக உழைத்ததற்கான கூலி. அலட்சியமாக தூக்கி எறிந்து விட்டீர்களே என கத்தினான்.

அபொழுது அப்பா, ‘இதைத்தான் உன்னிடம் நான் எதிர்பார்த்தேன். முன்பு நீ உழைக்காமல் கொண்டு வந்து கொடுத்த தங்க நாணயத்தை நான் எறிந்தபோது உனக்கு கோபம் வரவில்லை. காரணம் அப்போது உனக்கு உழைப்பின் அருமை தெரியவில்லை. இப்போது நீ உழைத்து கொண்டு வந்த பணத்தை நான் எறிந்த பொழுது உனக்கு கோபம் வருகிறது. காரணம், நீ கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்ததால் உழைப்பின் வலி உனக்கு தெரிகிறது. இதைத்தான் நான் உன்னிடம் எதிர் பார்த்தேன்’ என்று சொல்லி மகனை அணைத்துக்கொண்டார்.

உழைக்காமல் எது கிடைத்தாலும் நிலைக்காது அதன் அருமையும் தெரியாது