உலக வரைபட திருத்தம் – ஒரு வரலாற்று மாற்றம்

ஐக்கிய நாடுகள் பொதுச்சபை செப்டம்பர் 4, 2026 அன்று உலக வரை படங்களில் நிலப்பரப்பின் உண்மையான அளவைச் சரியாகக் காட்டும் சமபரப்பு (Equal-area) வரலாற்று தீர்மானத்தை நிறைவேற்றியது. “Correct the map: rebalancing global cartographic representation and promoting equitable representation of the world’s regions, particularly Africa” என்ற தலைப்பில் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதனால் உலக வரைபடம் திருத்தப்பட்டு, புதிய பதிப்புகள் வெளியாகும். இதில் உலக நாடுகளின் எல்லைகள் மாற்றப்படவில்லை. பூமியின் அரசியல் வரைபடமும் புதிதாக வரையப்படவில்லை. மாற்றப்படுவது Map Projection -அதாவது உருண்டையான பூமியைத் தட்டையான காகிதத்தில் மற்றும் திரையில் காட்டும் முறை.
இதற்கு 164 நாடுகள் ஆதரவாக வாக்களித்தன. அமெரிக்கா மட்டும் எதிர்த்து வாக்களித்தது. எஸ்டோனியா, ஜார்ஜியா, லிதுவேனியா, மால்டோவா, செர்பியா மற்றும் உக்ரைன் ஆகிய ஆறு நாடுகள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.
ஏன் இந்த திருத்தம்?
நாம் பள்ளிகளில் பார்க்கும் உலக வரைபடம் 16-ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மெர்கேட்டர் புரொஜெக்ஷனை (Mercator Projection). அடிப்படையாகக் கொண்டது. இதில் வட துருவத்திற்கு அருகில் உள்ள ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகள் மிகப் பெரியதாகவும், நிலநடுக்கோட்டில் உள்ள ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற கண்டங்கள் மிகச் சிறியதாகவும் காட்டப்படுகின்றன.
அதில் பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள பகுதிகள் சிறியதாகவும், துருவப் பகுதிகள் பெரிதாகவும் தோன்றும். அதனால் கிரீன்லாந்து ஆப்பிரிக்காவைப் போலவே பெரிதாகத் தெரியும். உண்மையில் ஆப்பிரிக்கா சுமார் 30.3 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது; கிரீன்லாந்து வெறும் 2.16 மில்லியன் சதுர கி.மீ. மட்டுமே. ஆப்பிரிக்கா, கிரீன்லாந்தை விட கிட்டத்தட்ட 14 மடங்கு பெரியது. Equal Earth போன்ற புதிய projectionகளில் இந்த உண்மையான அளவு தெளிவாகத் தெரியும். இந்த முயற்சியை முன்னெடுத்தது ஆப்பிரிக்க யூனியன், குறிப்பாக டோகோ.
பழைய வரைபடங்கள் ஆப்பிரிக்கா உள்ளிட்ட Global South பகுதிகளை, அவற்றின் உண்மையான அளவைக் காட்டிலும் சிறியதாகக் காட்டுகின்றன என்பதே அவர்களின் வாதம். ஆப்பிரிக்கா உண்மையில் 14 ஐரோப்பாக்களை உள்ளடக்கும் அளவு பெரியது, ஆனால் உலக வரைபடத்தில் சிறியதாகத் தெரிகிறது. இந்த தவறைத் திருத்தி, கண்டங்களின் உண்மையான பரப்பளவை காட்டும் புதிய உலக வரைபடம்.
இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது. ஆனால் கூடவே ஒரு கடுமையான நிபந்தனையையும் வைத்தது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெளிவாகக் கூறினார்: “இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகளான ஜம்மு – காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படி தான் காட்டப்பட வேண்டும். தவறான அல்லது தவறாக வழி நடத்தும் எந்த சித்தரிப்பும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்த எங்கள் நிலைப்பாடு தெளிவானது, நிலையானது மற்றும் பேரம் பேச முடியாதது. மேலும் இந்த தீர்மானம் எந்த ஒரு குறிப்பிட்ட வரைபடத்தையோ, எல்லைக் கோட்டையோ அங்கீகரிக்கவில்லை என்றும், இது வெறும் புவியியல் பரப்பளவை சரி செய்யும் தொழில்நுட்ப முயற்சி மட்டுமே என்றும்” கூறினார்.
ஒப்பீட்டளவில் பூமத்திய ரேகைக்கு அருகில் பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு இந்தியா. சம-பரப்பு வரைபடங்களில் இந்தியா மற்றும் பிற பகுதிகளின் புவியியல் அளவு பாரம்பரிய மெர்கேட்டர் புரொஜெக்ஷனை விட மிகவும் யதார்த்தமான விகிதத்தில் தோன்றும், அதாவது சரியான அளவு விகிதாச்சாரத்தில் தோன்றும். எனவே, இது வெறும் ஆப்பிரிக்காவின் அளவு பற்றிய கதை மட்டுமல்ல. பாரம்பரிய வரைபடங்களில் நீண்டகாலமாக சிதைந்த விகிதங்களில் தோன்றிய அனைத்து நாடுகளின் காட்சிப் பிரதிநிதித்துவத்தையும், யதார்த்தமாக்கும் முயற்சி இது.
பள்ளியில் படிக்கும் குழந்தை முதன்முதலில் வரைபடத்தின் மூலமே உலகைப் பார்க்கிறது. அதே வரைபடம் அவர்களின் புவியியல் புரிதலின் அடித்தளமாக அமைகிறது. ஒரு கண்டம் எவ்வளவு பெரியதாகத் தோன்றுகிறது, ஒரு குறிப்பிட்ட நாடு எங்கு அமைந்துள்ளது, உலகின் புவியியல் சமநிலை எப்படி இருக்கிறது என்பதை அது தீர்மானிக்கிறது.
இந்த தீர்மானம் Mercator வரைபடத்தை தடை செய்யவில்லை. ஆனால் இனி பள்ளிகள், அரசு நிறுவனங்கள், கூகிள் மேப்ஸ் (Google Maps) போன்ற தொழில்நுட்ப நிறுவனங்கள், சம பரப்பளவு வரைபடங்களை பயன்படுத்த ஊக்குவிக்கும். ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு நாடுகளின் உண்மையான முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்தும்.

ஆர்கனைசர் ஆங்கில இணையக் கட்டுரையைத் தழுவியது
தமிழில் : சுபதி கார்த்திக்