உலக நாய்கள் தினம்

கிராமங்கள் ஆனாலும் சரி, நகரங்கள் ஆனாலும் சரி செல்லப் பிராணிகள் வளர்ப்பில் நாய்களுக்குதான் எப்போதுமே முதலிடம். நம் அன்றாட வாழ்க்கையில் நாய்களின் பங்கினையும் அவற்றின் அன்பு மற்றும் விஸ்வாசத்தை பாராட்டவும், உலகெங்கிலும் உள்ள வீடற்ற, ஆதரவற்ற, துஷ்பிரயோகம் செய்யப்படும் நாய்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இன்று சர்வதேச நாய்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

நாய் நன்றியுள்ளது மட்டுமல்ல பாதுகாப்பானது, தோழமையானது. குடும்பத்தில் அதுவும் ஒரு அங்கத்தினர் போல. வீட்டில் எத்தனைவிலங்குகள், பறவைகள் வளர்த்தாலும் நாய்க்கு மட்டும்தான் நம்முடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. பலருக்கு நாய் என்றால் உயிர், சிலருக்கு பயம், அனைத்திற்கும் நம் மனநிலை தான் காரணம். செல்ல பிராணிகளுடன் வசிப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகம் உண்டாகாது என்கின்றனர் மனோதத்துவ நிபுணர்கள்.

உலகம் முழுவதும் நாய்கள் இருந்தாலும் அவை பார்ப்பதற்கு ஒன்று போல் இருந்தாலும் தோற்றத்தில் பல்வகை வேறுபாட்டுடன் காணப்படுகின்றன. அவற்றின்  தோற்றம், எடை, நிறம், உயரம், பண்புகள், நடத்தைகளை சான்று வழங்கும் உலகளாவிய அமைப்பான ‘கென்னல் கிளப்’, 350 நாய் இனங்களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. பல்வேறு வகைகளான நாய் இனங்கள் இருந்தாலும், அவற்றினை தோழமை நாய்கள், பாதுகாவல் நாய்கள், வேட்டை நாய்கள், பணி நாய்கள், வேட்டை மீட்டெடுப்பு நாய்கள் என ஐந்து காரணங்களுக்காக வளர்கின்றனர்.

நாட்டு மாடுகளைப் போன்று நமது பாரம்பரியத்தோடு ஒன்றியவை நாட்டு நாய்கள். ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, கன்னி போன்ற நாட்டு நாய்கள் பண்டைய காலத்தில் இருந்தே மனிதர்களுக்கு உதவியாக இருந்துள்ளன. தற்போது வெளிநாட்டு நாய்களை வளர்க்கும் ஆர்வம் நமது நாட்டில் அதிகரித்துள்ளது. நாட்டு நாய் வளர்ப்பில் ஆர்வம் குறைவதால் அந்த இனங்கள் மெல்ல அழிந்து வருகின்றன. ஆனால், வெளிநாட்டு நாய்களைவிட அனைத்து விதத்திலும் பன்மடங்கு சிறந்தவை, அதிகம் செலவில்லாதவை நமது நாட்டு நாய் இனங்கள். இது குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க, மத்திய அரசின் முயற்சியால் நமது பாதுகாப்புப் படைகள், இவற்றை தனது பணிகளுக்காக பயன்படுத்தத் துவங்கியுள்ளது. நாமும் நாட்டு நாய் இனங்களை வளர்ப்போம், நம் தெருவில் கேட்பாரற்று உள்ள நாய்களையும் அரவணைப்போம்.