உலக தபால் தினம்

முதன் முதலில் 09.10.1874-ல் சுவிட்சர்லாந்து, பெர்ன் நகரில் சர்வதேச அஞ்சலக ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நினைவாக வருடந்தோறும் இன்று உலக அஞ்சலக தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

எஸ்.எம்.எஸ், வாட்ஸப், முகநூல் போன்ற பல புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முன் அனைவருக்குமான முக்கிய செய்திக் கருவியாய் விளங்கியது தபால்துறை தான்.

புறாவிடுதூது, தூதுவர்கள் போன்ற பழங்கால நடைமுறைக்கு பிறகு அறிவியல் வளர்ந்த காலத்தில் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செய்திகளை அனுப்பப் பயன்பட்டது கடிதங்கள். அவை வெறும் காகிதங்கள் மட்டும் அல்ல. சில கடிதங்கள் காவியமாகவும், வரலாறாகவும் ஆகியுள்ளன.

ஒலிம்பிக் போட்டி கூட, கடிதப்பரிமாற்றத்தில் ஏற்பட்ட ஒரு விளைவின் ஞாபகார்த்தம் தான்.

அலுவலகப்பூர்வமான தகவல் பரிமாற்றங்களுக்கு இன்றும் அஞ்சலகமுறை அவசியமாகிறது. சிவப்பு வண்ணம் மக்களின் பார்வையை உடனடியாக ஈர்க்கும் என்பதால் தபால் பெட்டிகள் சிவப்பு நிறம் பெற்றன.

நம் உலகம் அறிவியல் பூர்வமாக வளர்ந்துள்ளது. அதற்கேற்ப நம் தபால் துறையும் வளர்ந்துள்ளது.

தபால்களை கையாள்வது மட்டுமில்லாது வங்கி சேவை, கூரியரைவிட குறைந்த விலையில் தபால்களை அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அளிக்கிறது தபால்துறை. இவற்றை குறித்து பொதுமக்களுக்கு தெரிவதில்லை.

அவற்றில் ஒன்றுதான் ‘மை ஸ்டாம்ப்’. இதில் நம் புகைப்படங்களையே, நாம் அஞ்சல் தலைகளாக பெறலாம். இதற்கு தபால்துறையில் விண்ணப்பித்து ரூ.300-க்கு 12 தபால் தலைகளை பெறலாம். நம் புகைப்படங்களையே அஞ்சல் தலையாக பார்ப்பது மகிழ்ச்சியையும், பரவசத்தையும் அளிக்கும். இதனை பிறந்த நாள், திருமண நாள் பரிசாகவும் அளிக்க முடியும்.

அஞ்சலகத்தில் மக்களுக்கு பயன்படும் பல்வேறு நலத்திட்டங்கள் உள்ளன. அவற்றை நாம் அறிவதோடு, மற்றவர்களுக்கும் சொல்லி விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.