உலக குத்துச்சண்டை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறினார் மேரி கோம்..

ரஷ்யாவில் பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. 51 கி.கி., எடைப்பிரிவில் இந்தியாவின் ‘சீனியர்’ மேரி கோம் களமிறங்கினார்.  காலிறுதியில் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற கொலம்பியாவின் இன்கிரிட் வாலன்சியாவை சந்தித்தார். இதில் அனைத்து சுற்றிலும் சிறப்பாக செயல்பட்ட மேரி கோம், 5-0 என வெற்றி பெற்றதாக ஒருமனதாக அறிவிக்கப்பட, அரையிறுதிக்கு முன்னேறினார். உலக சாம்பியன்ஷிப்பில் 51 கி.கி., பிரிவில் முதல் பதக்கத்தை உறுதி செய்தார்.

தற்போது அரையிறுதிக்கு முன்னேறிய இவர் குறைந்தபட்சம் வெண்கல பதக்கத்தை உறுதி செய்தார். இதனால் ஆண்கள், பெண்கள் என ஒட்டுமொத்த உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் அரங்கில் 6 தங்கம், 1 வெள்ளி உட்பட மொத்தம் 8 பதக்கங்கள் வெல்லும் முதல் நட்சத்திரம் என புதிய சாதனை படைத்துள்ளார்.