உப்பு நீரிலும் உவப்பான மகசூல் தரும் அபூர்வ நெல்: ‘நெல்’ல ‘நெல்’ல ரகங்களை நம்பி…

 

தெற்கு, கிழக்கு, வடகிழக்கு பாரதத்தில் வாழும் மக்களின் பிரதான உணவு அரிசியைச் சார்ந்தே உள்ளது. பெரும்பாலான நாடுகளில் நெல் விளைவிக்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே போகிறது. ஆனால் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. சாகுபடி சாராத பயன்பாட்டுக்கு நிலத்தை மடைமாற்றம் செய்வது தவிர்க்க முடியாததுதான். ஆனால் இது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கவேண்டியது இன்றியமையாதது.

பெரும்பாலும் நன்னீரிலேயே நெல் விளைகிறது. நன்செய் என்ற பெயரே நல்ல நீர் சார்ந்த வயல் என்ற அடிப்படையிலானதுதான்.

உப்பு நீரிலும் நெல்லை விளைவிக்க முடியும். பண்டை காலத்தில் உவர் நிலத்திலும் நெல்லை விளைவித்துள்ளார்கள். துரதிருஷ்டவசமாக இது பற்றிய விழுமியங்களை இழந்துவிட்டோம். மரபார்ந்த பல்லாயிரக்கணக்கான நெல் வகைகள் புழக்கத்திலிருந்து மறைந்துவிட்டன.

சீனா உணவு நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. இதை வெற்றிகரமாக சமாளிக்க உப்பு நீரிலும் நெல்லை விளைவிக்கும் முயற்சியை சீனா முன்னெடுத்துள்ளது. மஞ்சள் கடலோர நகரமான கிங்டோ அருகே உள்ள உவர் நிலப்பரப்பில் சுமார் 200 வகையான நெல் வகைகளை விதைத்துப் பார்த்து சோதனை நடத்தப்பட்டது. இதில் சில ரகங்கள் உப்புத் தன்மையை தாங்கிக்கொண்டு அமோக விளைச்சலை அளித்துள்ளன. இந்த சோதனை முயற்சி வெற்றி அடைந்துவிட்டது. ஒரு ஹெக்டேரில் சுமார் 9.3 டன் விளைச்சல் கிடைத்துள்ளது. இது வேளாண் அறிவியல் ஆய்வாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதைப்போன்ற வேளாண் அறிவியல் சோதனைகளை பாரதமும் மேற்கொள்ள வேண்டும். எங்கிருந்தாலும் நல்லவற்றை கொள்ளலாம். அல்லவற்றை தள்ளலாம் என்ற அடிப்படையில் நமது அணுகுமுறை இருக்க வேண்டும். உப்பு நீரில் நெல்லை விளைவித்தால் நம் நாட்டிலும் உணவு உற்பத்தி கணிசமாக அதிகரிக்கும் என்பது அனுபவத்திற்கு வந்து தொடங்கியுள்ளது.

உப்பு நீரில் தொடர்ந்து சாகுபடி செய்து வந்தால் நிலத்தின் உவர்த்தன்மையும் ஆண்டுக்கு ஆண்டு குறையக் கூடும் வேளாண் வல்லுனர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, உப்பு நீரில் நெல் சாகுபடி மேற்கொள்வது ஒரு கல்லில் இரண்டு கனிகளை அடிப்பதற்கு சமம்.

*************************************************************************************************************************************************

 கேரளத்தின் ‘பொக்காளி’, தமிழகத்தின் ‘மாப்பிள்ளை சம்பா’

உப்புநீரில் விளையும் ‘பொக்காளி’ ரக நெல் ஆலப்புழா, திருச்சூர், எர்ணாகுளம் ஆகிய கடலோர

மாவட்டங்களில் பிரசித்தம். அங்கே சுமார் 5,000 ஹெக்டேரில் பொக்காளி சாகுபடி நடக்கிறது. இது இயற்கை வேளாண்மையில் விளைவது, புரோட்டீன் சத்து அதிகம்; நெடுநேரம் நடுக்கடலில் இருந்து மீன் பிடிக்க மீனவர்களுக்கு சக்தி தருகிறது பருமனான பொக்காளி. நிலவியல் சார்ந்த அடையாளமும் ‘பொக்காளி’க்குக் கிடைத்துள்ளது. பொக்காளி என்பது வேறென்ன, தமிழகத்தின் ‘மாப்பிள்ளை சம்பா’ தான்! நாகப்பட்டினம் மாவட்டத்தில் உப்புநீர் நெல் சாகுபடி பல விவசாயிகளை கைதூக்கி விட்டிருக்கிறது.

*************************************************************************************************************************************************