உணவு பொருட்கள் விலை பண்டிகை காலத்தில் உயராது

வரும் பண்டிகை காலத்தில், அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை சீராகவே இருக்கும் என்று மத்திய உணவுதுறை செயலர் சஞ்சீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். கோதுமை, அரிசி, சர்க்கரை மற்றும் சமையல் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் உள்நாட்டு வினியோகம், விலைகள் குறித்து, உணவுதுறை செயலர் சஞ்சீவ் சோப்ரா, செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அரசு சமீபத்தில் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விலை நிலையானதாக இருக்க செய்யும் வகையில் வர்த்தக கொள்கை, சுங்க வரி உள்ளிட்ட அனைத்தையும், அரசு உரிய வகையில் பயன்படுத்திஉள்ளது.

இந்நடவடிக்கைகள் காரணமாக, பண்டிகை காலத்தில் உணவு பொருட்களின் விலை நிலையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை நிலைத்தன்மையானது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு தொடரும் என நம்புகிறோம்.

அத்தியாவசிய பொருட்களின் விலையை, அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விலையை கட்டுக்குள் வைத்திருக்க சில பொருட்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், இனி வரும் காலங்களில் நீக்கப்படாது. உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கோதுமை, அரிசி ஆகியவை போதுமான அளவுக்கு அரசிடம் இருப்பு உள்ளது.