இந்து முன்னணி தலைவர் புகார்

இந்து ஆட்டோ முன்னணி தொழிலாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வங்கதேசம், ரோஹிங்கியாக்கள் உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்தவர்களால் அமைதி சீர்குலைகிறது. இதனால், உடனடியாக காவல்துறையும், உளவுத்துறையும் பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் குறித்த கணக்கெடுப்பை நடத்த வேண்டும். பழநி மலை முருகன் கோயிலில் ஆகம விதிகள்படி குடமுழுக்கு நடைபெறாததால், தமிழக அரசுக்கு கெட்ட காலம் தொடங்கிவிட்டது. 48 நாட்கள் மண்டல பூஜைகளை ஒரேநாளில் நடத்த அரசு திட்டமிட்டது. இதையடுத்து தற்போது உயர் நீதிமன்றம் 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடத்த உத்தரவிட்டுள்ளது. குடமுழுக்கு அன்று கோயில் கருவறைக்குள் பலர் சென்றுள்ளனர். முருகன் சிலையை உருவாக்கிய சித்தரான போகரின் வாரிசு புலிப்பாணி சித்தர், பழநி மலையடிவாரத்தில் வசிக்கிறார். அவருக்கு குடமுழுக்குக்கான அழைப்பு அனுப்பப்படவில்லை. போகரின் சமாதியில் கலசம் வைக்காததும் ஆகம விதிமீறலே” என கூறினார்.